IND vs SA 3rd Test 2022 : ராசியில்லா கேப் டவுன் மைதானத்தில் வரலாறு படைக்குமா இந்தியா - வரலாற்று புள்ளிவிவரம்

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா சரித்திரம் படைத்தது.

Six Grills Newlands, Cape Town


இதை அடுத்து ஜொகனஸ்பர்க் நகரில் நடந்த 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா இந்தியாவிற்கு பதிலடி கொடுத்ததுடன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த தொடரை 1 - 1* என சமன் செய்துள்ளது.

ராசியே இல்லாத கேப் டவுன்:

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 11ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைக்குமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த முக்கியமான போட்டியை முன்னிட்டு இந்தப் போட்டி நடைபெறும் கேப் டவுன் மைதானத்தின் வரலாற்று புள்ளி விவரங்கள் பற்றி பார்ப்போம் வாங்க:

1. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இதர மைதானங்களை விட பின்புறத்தில் மலை தொடர்களைக் கொண்டு மிக மிக அழகாக காட்சியளிக்கும் இந்த கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டிகளை நேரடியாக அமர்ந்து கண்டு களிப்பது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு சொர்க்கம் போன்றதாகும்.

2. மொத்தம் 25,000 ரசிகர்கள் அமரக்கூடிய இந்த மைதானத்தில் 1992க்கு பின்பு வரலாற்றில் இதுவரை மொத்தம் 34 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

  • இந்த 34 போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 23 வெற்றிகளைப் பெற்று இங்கு வலுவான அணியாக திகழ்கிறது, 6 போட்டிகள் ட்ராவில் முடிந்ததுள்ளன, எஞ்சிய 5 போட்டிகளில் ஆஸ்திரேலியா 4 முறையும் இங்கிலாந்து 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

3. இந்த மைதானம் இந்தியாவிற்கு ராசி இல்லாத மைதானம் என்றே கூறலாம் ஏனெனில் இந்த மைதானத்தில் 1992 - 2018 வரை இந்தியா இதுவரை 5 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளது.

  • அதில் 3 போட்டிகளில் தோல்வி அடைந்த இந்தியா 2 போட்டிகளை போராடி டிரா செய்துள்ளது, ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதே கிடையாது.

அதிக ரன்கள்:

இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸ் 2181 ரன்களுடன் சாதனை படைத்துள்ளார்.

  • அதே போல இம்மைதானத்தில் அதிக சதங்கள் மற்றும் அரை சதங்கள் அடித்த வீரராகவும் அவரே தலா 9 அரை சதங்கள் மற்றும் சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்த சவால் மிகுந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் 489 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.

  • இந்த மைதானத்தில் அதிக சதங்கள் மற்றும் அரை சதங்கள் அடித்த இந்திய வீரராகவும் அவரே தலா 2 அரை சதங்கள் மற்றும் சதங்களுடன் முதலிடம் பிடிக்கிறார்.

இங்கு சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், வாசிம் ஜாபர் ஆகியோரைத் தவிர வேறு எந்த இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை.

  • இந்த மைதானத்தில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் : 169 - சச்சின் டெண்டுல்கர், 1997.

அதிக விக்கெட்கள்:

இந்த அழகிய மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக தென் ஆபிரிக்காவை சேர்ந்த ஜாம்பவான் டேல் ஸ்டைன் 15 போட்டிகளில் 74 விக்கெட்டுகள் எடுத்து முதலிடம் பிடிக்கிறார்.

  • இங்கு அதிக முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த வீரராக தென் ஆப்பிரிக்காவின் வெர்னோன் பிலாண்டர் (4 முறை) உள்ளார்.

இமைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராக முன்னாள் ஜாம்பவான் ஜவகல் ஸ்ரீநாத் 2 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் எடுத்த முதல் இடத்தில் உள்ளார்.

  • இந்த மைதானத்தில் 5 விக்கெட் ஹால் எடுத்த இந்திய பவுலர்களாக ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் மட்டும் (தலா 1 முறை) உள்ளனர்.
  • கேப் டவுனில் இந்திய பவுலரின் சிறந்த பந்துவீச்சு : ஹர்பஜன் சிங் - 7/120, 2011.

அதிகபட் ஸ்கோர்:

கேப் டவுன் மைதானத்தில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் : தென்ஆப்பிரிக்கா - 651, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2009.

இந்த சிறப்பு மிகுந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் : 414 தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2007.


Previous Post Next Post

Your Reaction