IND vs SA 2nd Test 2022 : இந்தியாவுக்கு அதிர்ஷ்டமான ஜோகன்னஸ்பர்க் மைதானம் ! ஒரு வரலாற்று அலசல்

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா 1 - 0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Wanderers Cricket Stadium


இதை அடுத்து இந்த சவால் மிகுந்த தொடரின் 2வது போட்டி ஜனவரி 3ஆம் தேதியன்று தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இருக்கும் வாண்ட்ரஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

அதிர்ஷ்டமான ஜொஹனஸ்பேர்க்:

இந்த வேளையில் இந்தப் போட்டி நடைபெறும் வாண்ட்ரஸ் கிரிக்கெட் மைதானம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த மைதானமாக அறியப்படுகிறது. அதைப் பற்றி பார்ப்போம்:

1. மொத்தம் 34,000 ரசிகர்கள் நேரடியாக கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க கூடிய வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அழகிய மைதானத்தில் இம்முறை ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடைபெற உள்ளது.

2. இந்த மைதானத்தில் வரலாற்றில் இந்தியா இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ளது, அதில் 2006 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் இந்த மைதானத்தில்தான் இந்தியா வெற்றி பெற்றது.

  • அதைப்பின் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு இங்கு நடந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • 1992, 1997, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த போட்டிகளை இந்தியா டிரா செய்தது, இங்கு ஒருமுறைகூட இந்தியா தோற்றதே கிடையாது. சொல்லப்போனால் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவிற்கு அதிக சாதகமும் அதிர்ஷ்டம் நிறைந்த மைதானம் என்றால் அது வாண்ட்ரஸ் என கூறலாம்.

3. மறுபுறம் இந்த மைதானத்தில் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா அதில் 18 போட்டிகளில் மட்டுமே வென்று சுமாரான வெற்றி சராசரியை கொண்டுள்ளது, 13 போட்டிகளில் தோல்வியடைந்த அந்த அணி 11 போட்டிகளை டிரா செய்துள்ளது.

அதிக ரன்கள்:

இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரராக தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் ஜாக் காலிஸ் 18 போட்டிகளில் 1148 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.

  • இந்த மைதானத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர்களாக தென் ஆப்பிரிக்காவின் ஹாஷிம் அம்லா மற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகியோர் தலா 3 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

இந்தியா: இந்தியா சார்பில் இங்கு அதிக ரன்கள் குவித்த வீரராக தற்போதைய கேப்டன் விராட் கோலி 310 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

  • இந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், ராகுல் டிராவிட்,  விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் அதிகபட்சமாக தலா 1 சதம் அடித்துள்ளனர்,இங்கு எந்த இந்திய வீரரும் இதுவரை 2 சதங்கள் அடித்ததில்லை.

இந்த மைதானத்தில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் : செடேஸ்வர் புஜாரா 153 ஆகும்.

அதிக விக்கெட்கள்:

வாண்ட்ரஸ் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான்கள் ஷான் பொல்லாக் மற்றும் மகாயா நிடினி ஆகியோர் தலா 53 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பிடித்து சாதித்துள்ளனர்.

  • இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த பவுலராக தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் (5 முறை) உள்ளார்.

இந்தியா: இந்தியா சார்பில் இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 3 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

  • இங்கு 5 விக்கெட் ஹால் எடுத்த இந்திய வீரர்களாக அணில் கும்ப்ளே, முகமது சமி, ஜவகல் ஸ்ரீநாத், ஸ்ரீசாந்த், ஜஸ்பிரித் பும்ரா (தலா 1 முறை) ஆகியோர் உள்ளனர்.

இந்த மைதானத்தில் இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோராக கடந்த 2013ஆம் ஆண்டு 421 ரன்களை பதிவு செய்துள்ளது.

Previous Post Next Post

Your Reaction