கழட்டிவிட்ட ஹைதெராபாத் கொடுத்த வேதனை - என்ன நடந்தது ! முதல் முறையாக மனம் திறக்கும் டேவிட் வார்னர்

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் டேவிட் வார்னரை கடந்த சீசனுடன் அந்த அணி நிர்வாகம் கழட்டிவிட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

Photo Credits : BCCI/IPL


அந்த அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்த இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அந்த அணிக்கு முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார், கடந்த 2014 முதல் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் குறைந்தது 500 ரன்களுக்கும் மேல் விளாசி வந்த இவர் 3 ஆரஞ்சு தொப்பிகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஆரஞ்சு தொப்பிகளை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

கழட்டிவிடப்பட்ட வார்னர்:

இன்ஸ்டாகிராமில் புட்ட பொம்ம ஆட்டம் போட்டு ஹைதராபாத் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த இவருக்கு "சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத்" என்ற பிராண்டை உருவாக்கியதில் பங்கு மிகமிக அதிகம் என்றே கூறலாம்.

  • ஆனால் 2020 சீசனில் முதல் முறையாக பெரிய அளவில் ரன்கள் அடிக்க தவறிய இவரை முதலில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய ஹைதராபாத் நிர்வாகம் பின்பு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து கழட்டிவிட்டு பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது, இருப்பினும் சிரித்த முகத்துடன் அந்த சீசன் முழுவதும் அந்த அணிக்காக ஆதரவு கொடுத்த அவரை எதிர்பார்த்தது போலவே ஐபிஎல் 2022 சீசனில் தக்க வைக்காமல் அந்த அணி நிர்வாகம் நிரந்தரமாக கழட்டிவிட்டு உள்ளது.

என்ன நடந்தது:

இந்நிலையில் ஹைதெராபாத் அணி நிர்வாகம் தன்னை கழட்டிவிட்டது பற்றி தற்போது டேவிட் வார்னர் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வல்லுனர் போரியா மஜூம்தார் உடனான நிகழ்ச்சியில் அவர்,

நீங்கள் உங்களின் கேப்டனை அணியில் இருந்து நீக்கிவிட்டு உங்களுக்காக இத்தனை செய்த பின்னும் அவரை விளையாடும் 11 பேர் அணியில் இருந்து நீக்கினால் அணியில் இருக்கும் இதர இளம் வீரர்களுக்கு என்ன கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள்? அணியில் உள்ள இதர வீரர்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்னை அதிகம் காயப்படுத்தியது என்னவென்றால், அணியில் உள்ள மற்றவர்கள் "ஓ, இது எனக்கும் நடக்கலாம்" என நினைக்கும் அளவுக்கு ஆகியதே.


என்ன நடந்தாலும் அந்த நாளின் முடிவில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், உங்களுக்கு அது போன்ற உரையாடல்கள் வேண்டுமென்றால் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள். அது ஒன்றும் எனக்கு கடினமானது இல்லை, அதற்காக நான் அவமானப்பட போவதுமிலலை, கடிக்க போவதுமில்லை, நான் இங்கே அமர்ந்துகொண்டு நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்வேன் ஏனெனில் என்னை நீங்கள் அணியில் தேர்வு செய்யவில்லை

என வேதனையுடன் டேவிட் வார்னர் தெரிவித்தார். இப்போதும் கூட ஹைதராபாத் அணி மீது இருக்கும் அன்பு காரணமாக பின்னணியில் நடந்ததை முழுமையாக தெரிவிக்காத வார்னர் தன் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார், ஹைதராபாத் அணிக்காக 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய டேவிட் வார்னர் 4095 ரன்களை குவித்துள்ளார்.

  • வரும் சீசனில் முதல் முறையாக அவர் இல்லாமல் கேன் வில்லியம்சன் தலைமையில் ஜாம்பவான்கள் பிரைன் லாரா, முத்தையா முரளிதரன் போன்ற பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாட உள்ளது.

Previous Post Next Post

Your Reaction