தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா பங்கு பெற்று வருகிறது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 - 23 கோப்பையில் இந்தியா விளையாடும் சவால் மிகுந்த தொடராக கருதப்படும் இந்த தொடரின் முதல் போட்டியில் செஞ்சூரியன் நகரில் முதல் முறையாக 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சரித்திர வெற்றியை பெற்றது.
Photo Credits : Getty Images |
இதை அடுத்து இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் துவங்க உள்ளது.
கோலியின் கோட்டை:
இந்த போட்டி நடைபெறும் ஜொஹானஸ்பர்க் நகரில் உள்ள வாண்ட்ரர்ஸ் கிரிக்கெட் மைதானம் இந்திய கேப்டன் விராட் கோலியின் கோட்டை என்றே கூறலாம், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்திற்கு பின் அவர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மைதானமாக இந்த மைதானம் விளங்குகிறது.
ஏனென்றால் இந்த மைதானத்தில் கடந்த 2013 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் அவர் களமிறங்கிய 2 டெஸ்ட் போட்டிகளில் 310 ரன்களை 77.50 என்ற மிகச் சிறப்பான சராசரி விகிதத்தில் குவித்துள்ளார், இதில் 2 அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும் அதிகபட்ச ஸ்கோர் 119 ஆகும்.
- இதன் வாயிலாக இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த ஆசிய வீரர் மற்றும் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார், இவருக்கு அடுத்த இடத்தில் மற்றொரு இந்திய வீரர் புஜாரா 229 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
இன்னும் சொல்லப் போனால் நாளை துவங்கும் டெஸ்ட் போட்டியில் அவர் இன்னும் 7 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்த வாண்ட்ரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற தனித்துவமான புதிய சாதனையை படைப்பார்.
மோசமான பார்ம்:
இருப்பினும் இந்தியாவின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி கடந்த 2 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகையான கிரிக்கெட்டிலும் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மல் இருந்து வருவது நமக்கு தெரியும், கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு சதம் அடித்திருந்தார்.
- அதன்பின் 2020 மற்றும் 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வரும் அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக 2 காலண்டர் வருடங்களில் சதம் அடிக்க முடியாத பரிதாபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
அடம் பிடிக்கும் 71வது சதம்:
தற்போது 33 வயதாகும் இவர் 31வது வயதிலேயே 70 சதங்களை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய 3வது பேட்டர் என்ற சாதனையை படைத்தார், இதனால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை இவர் எளிதாக உடைத்து விடுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் கடந்த 2 வருடங்களாக தனது 71வது சதத்தை அடிக்க முடியாமல் திணறுகிறார்.
- 2 வருடங்களாக கிடைத்த பல வாய்ப்புகளில் விராட் கோலி இப்போது சதம் அடிப்பாரா அப்போது சதம் அடிப்பாரா என இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து எதிர்பார்த்து "அடப் போங்கய்யா" என்பது போல் ஆகி விட்டனர்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பகுதிகளில் வீசப்படும் பந்துகளை கவர் டிரைவ் அடிக்க போய் தொடர்ந்து அவுட்டாகி வரும் இவர் 71வது சதம் தன்னை தேடி வந்தாலும் அதை அடிக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார் என்றே கூறலாம்.
இங்கேயாச்சும்:
இதனால் கடுப்பாகி உள்ள பல ரசிகர்கள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கவர் ட்ரைவ் அடிக்காமல் இரட்டை சதமடித்து 241 ரன்கள் குவித்ததை விராட் கோலி பின் தொடர வேண்டும் என வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள்.
மேலும் 2022 புத்தாண்டு பிறந்துள்ள இந்த வேளையில் தமக்கு மிகவும் ராசியான ஜோகனஸ்பர்க் கிரிக்கெட் மைதானத்திலாவது 71 ஆவது சதத்தை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங்கின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனையை விராட் கோலி படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.