Vijay Hazare Trophy 2021 : கலக்கிய தினேஷ் கார்த்திக் - ஷாருக்கான், ஹாட்ரிக் வெற்றியுடன் தமிழ்நாடு வெற்றிநடை

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரின் லீக் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக கிரிக்கெட் அணி தனது 3வது போட்டியில் இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் பெங்கால் அணியை எதிர்கொண்டது.

கலக்கிய மிடில் ஆர்டர்:

காலை 9 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக கேப்டன் ஜெகதீசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார், இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாட்டுக்கு தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் 12 ரன்கள், ஜெகதீசன் 31 ரன்கள் என நல்ல தொடக்கம் கொடுக்க தவறினார்கள், அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாக 17.5 ஓவர்களில் 55/3 என தடுமாறியது.

  • இதனால் ஏற்பட்ட சரிவை சரி செய்ய நிதானமாக விளையாடிய இந்திரஜித் 64 ரன்களும் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் 87 ரன்கள் குவிக்க கடைசி நேரத்தில் கௌசிக் வெறும் 31 பந்துகளில் 50 ரன்களும் ஷாருக்கான் வெறும் 12 பந்துகளில் 32 ரன்களும் விளாசி அதிரடியான பினிஷிங் கொடுத்தனர்.

மிடில் ஆர்டரின் சிறப்பான பேட்டிங் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த தமிழ்நாடு 295 ரன்கள் குவித்தது, பெங்கால் சார்பில் பந்துவீச்சில் அசத்திய முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதிரடி பவுலிங்:

இதை அடுத்து 296 ரன்களை துரத்திய பெங்கால் அணிக்கு தொடக்க வீரர் ஸ்ரிவட்ஸ் கோஸ்வாமி 1 ரன்களில் அவுட் ஆனாலும் அபிஷேக் தாஸ் 30 ரன்கள் எடுத்தார் ஆனால் அடுத்து வந்த பெங்கால் பேட்டர்கள் தமிழகத்தின் அற்புதமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பரிசளித்தனர்.

  • இதனால் 39.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்கால் வெறும் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதன் வாயிலாக 136 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் மெகா வெற்றியை பெற்றது.

தமிழகத்தின் சார்பில் பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய சிலம்பரசன் 4 விக்கெட்டுகளும் சந்திப் வாரியர் 2 விக்கெட்டும், வாசிங்டன் சுந்தர் சாய் சுதர்சன் மற்றும் சித்தார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ஹாட்ரிக் வெற்றி:

முன்னதாக இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் முறையே மும்பை மற்றும் கர்நாடகா அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த 2 வெற்றிகளை பெற்ற தமிழ்நாடு இந்த வெற்றியால் ஹாட்ரிக் வெற்றியுடன் விஜய் ஹசாரே 2021 கோப்பையில் வெற்றிநடை போட்டு வருகிறது, இந்த 3 வெற்றிகளால் எலைட் குரூப் பி பிரிவின் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் பெற்றுள்ள தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

  • இதை அடுத்து தமிழகம் தனது 4வது போட்டியில் அண்டை மாநிலமான புதுச்சேரியை டிசம்பர் 12 காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் எதிர் கொள்ள உள்ளது.

Previous Post Next Post

Your Reaction