இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது, கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி அன்று துவங்கிய இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, கர்நாடகா, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்கேற்றன.
Photo Credits : AFP |
இந்த 38 அணிகளும் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 5 ரவுண்டுகள் கொண்ட லீக் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று வந்தன.
காலிறுதியில் தமிழ்நாடு:
இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த தமிழ்நாடு பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதே பிரிவில் இடம் பெற்றிருந்த கர்நாடகா, பாண்டிச்சேரி, பெங்கால் ஆகிய அணிகளும் அதே 12 புள்ளிகளைப் பெற்ற போதிலும் ரன்ரேட் அடிப்படையில் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் தப்பி முதலிடம் பிடித்த தமிழ்நாடு காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது.
- அனைத்து பிரிவின் புள்ளி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்த கர்நாடகா போன்ற அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றன.
காலிறுதிக்கு முந்தைய சுற்று:
இந்த நிலையில் இத்தொடரின் முதல் நாக் அவுட் சுற்றான கால்இறுதி சுற்றில் பங்குபெறும் கடைசி 3 அணிகள் தேர்வு செய்வதற்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டிகள் இன்று நடைபெற்றன.
- இதில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் திரிபுராவை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த விதர்பா முதல் அணியாக தகுதி பெற்றது.
- ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற கர்நாடகா 2வதாக தகுதி பெற்றது.
- அதேபோல் மத்தியப்பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற 3வது காலிறுதிக்கு முந்தைய போட்டியில் உத்தரப்பிரதேசம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
காலிறுதி சுற்று:
இந்த 3 அணிகள் கால்இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதை அடுத்து விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரின் அரைஇறுதிக்கு தகுதி பெறும் அணிகளை தேர்வு செய்யும் காலிறுதி போட்டிகள் வரும் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
- இதில் 2வது காலிறுதி போட்டியில் வலுவான கர்நாடகாவை தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ளது, இதில் வெற்றி பெரும் அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கர்நாடகாவுடன்:
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகத்தை வீழ்த்தி கர்நாடகா சாம்பியன் பட்டம் வென்றது, அந்த தோல்விக்கு இந்த முறை தமிழகம் பதிலடி கொடுக்குமா என தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
- கடந்த மாதம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பை இறுதிப் போட்டியில் கூட கர்நாடகத்தை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
காலிறுதி சுற்று அட்டவணை:
- காலை 9 மணி, டிசம்பர் 21 - முதல் காலிறுதி, ஹிமாச்சல் பிரதேஷ் V உத்திர பிரதேஷ், ஜெய்ப்பூர்.
- காலை 9 மணி, டிசம்பர் 21 - 2வது காலிறுதி, தமிழ்நாடு V கர்நாடகா, ஜெய்ப்பூர்.
- காலை 9 மணி, டிசம்பர் 22 - 3வது காலிறுதி, சௌராஷ்ட்ரா V விதர்பா, ஜெய்ப்பூர்.
- காலை 9 மணி, டிசம்பர் 22 - 4வது காலிறுதி, கேரளா V சர்விஸஸ், ஜெய்ப்பூர்.