Vijay Hazare Trophy 2021 : அடுத்தடுத்த 2 போட்டிகளில் தமிழகம் 2 அபார வெற்றி,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2021 சீசன் டிசம்பர் 8-ஆம் தேதி அன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் துவங்கியது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 முன்னணி அணிகள் பங்கேற்று வருகின்றன.

Photo Credits : BCCI Domestic


இந்த கோப்பையின் முதல் சுற்றில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பையை நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எதிர்கொண்டது.

ஷாருக்கான் அபார பினிஷிங்:

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடுக்கு சுதர்சன் 24, ஜெகதீசன் 20 என சுமாரான தொடக்கம் கொடுத்து அவுட் ஆனார்கள். அடுத்ததாக வந்த வாசிங்டன் சுந்தர் 34, தினேஷ் கார்த்திக் மற்றும் கெஷிக் தலா 32 ரன்களும் எடுத்த போதிலும் பெரிய ஸ்கோர் அடிக்க தவறியதால் 179/5 என தடுமாறியது.

அந்த வேளையில் களமிறங்கிய இளம் வீரர் ஷாருக்கான் தனது வழக்கமான அதிரடி பாணியில் விளையாடி வெறும் 35 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 65 ரன்கள் விளாசி அபார பினிஷிங் செய்தார், இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தமிழ்நாடு 290/8 ரன்கள் எடுத்தது. 

முதல் வெற்றி:

இதை தொடர்ந்து 291 என்ற இலக்கை துரத்திய மும்பை அணி பேட்டர்கள் தமிழக பந்து வீச்சாளர்களின் அசத்தலான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள், இதனால் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, இதன் காரணமாக 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

  • மும்பை சார்பில் அதிகபட்சமாக முலானி 75 ரன்களும், சைராஜ் பாட்டில் 42 ரன்களும் எடுத்தனர், தமிழகத்தின் சார்பில் அபாரமாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் சித்தார்த் தலா 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் சந்திப் வாரியர் மற்றும் சிலம்பரசன் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

2வது வெற்றி:

இதை அடுத்து இந்த கோப்பையின் தனது 2-வது போட்டியில் இன்று காலை 9 மணிக்கு அதே திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் கர்நாடகாவை தமிழ்நாடு எதிர்கொண்டது, இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய அந்த அணி வீரர்கள் தமிழ்நாட்டின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனதால் வெறும் 36.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கர்நாடகா வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  • அதிக பட்சமாக அந்த அணிக்கு கேப்டன் மணிஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்தார், தமிழகத்தின் சார்பில் பந்துவீச்சில் அசத்திய சித்தார்த் 4 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் சந்திப் வாரியர் சிலம்பரசன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 123 என்ற இலக்கை சேசிங் செய்த தமிழ்நாட்டுக்கு தொடக்க வீரர்கள் ஜெகதீசன் 16 ரன்களிலும் சாய் சுதர்சன் 18 ரன்களில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தனர், இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய பாபா இந்திரஜித் அரைசதம் அடித்த 51* ரன்களும் வாசிங்டன் சுந்தர் 31* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டனர்.

இவர்களின் பொறுப்பான பேட்டிங்கில் வெறும் 28 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்த தமிழ்நாடு 123/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இதன் வாயிலாக அடுத்தடுத்த 2 போட்டிகளில் 2 வெற்றிகளை ருசித்த தமிழ்நாடு எலைட் குரூப் பி பிரிவின் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அடுத்த போட்டி:

இதை அடுத்து இந்தத் தொடரில் தமிழ்நாடு தனது 3வது போட்டியில் வரும் டிசம்பர் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் பெங்கால் கிரிக்கெட் அணியை சந்திக்கிறது.

Previous Post Next Post

Your Reaction