Vijay Hazare Trophy 2021 : தண்ணி காட்டிய பாண்டிசேரி ! வெறும் 1 ரன்னில் தமிழ்நாடு தோல்வி

இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


இதில் இன்று 4-வது சுற்று லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன, இந்த சுற்றின் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அணிகள் இன்று காலை 9 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சேவியர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

பவுலிங் சிறப்பு:

இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது,  இதையடுத்து களமிறங்கிய பாண்டிச்சேரியின் தொடக்க வீரர் கார்த்திக் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ரகுபதி 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க அடுத்து வந்த வீரர்கள் தமிழகத்தின் சிறப்பான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்கள்.

இதனால் 21 ஓவர்களில் 75/6 என திணறிய பாண்டிச்சேரியை பாபிட் அஹமத் 84 பந்துகளில் 87* ரன்கள் குவித்து ஓரளவு மீட்டெடுத்தார், இதனிடையே மழை பெய்ததை அடுத்து இந்த போட்டி 49 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

  • இறுதியில் 49 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த பாண்டிச்சேரி 225 ரன்கள் எடுத்தது, தமிழகத்தின் சார்பில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தர் 5 விக்கெட்டுகளும் சிலம்பரசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

206 ரன்கள் இலக்கு:

இதை அடுத்து டக் ஒர்த் லெவிஸ் முறை போல இந்தியாவின் வி ஜெயதேவன் எனப்படும் விஜேடி முறைப்படி தமிழ்நாடு வெற்றிபெற 44 ஓவர்களில் 206 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, இதையடுத்து களமிறங்கிய தமிழகத்திற்கு தொடக்க வீரர் ஹரி நிசாந்த் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய பாபா அபராஜித் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 4 விக்கெட்டுகளை அவுட்டாகி ஏமாற்றினர், பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் 72 பந்துகளில் 65 ரன்களும் தொடக்கம் முதல் நங்கூரமாக விளையாடிய கேப்டன் ஜெகதீசன் 64 ரன்களும் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார்கள்.

  • இதனால் ஏறக்குறைய வெற்றி உறுதி என எதிர்பார்த்த நிலையில் அடுத்ததாக வந்த ஷாருக்கான் உட்பட இதர தமிழக வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர், குறிப்பாக கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது தமிழ்நாடு ஒரு ரன் மட்டுமே எடுத்தது.

பாண்டிச்சேரி வெற்றி:

இதன் காரணமாக வெற்றியை ஏறக்குறைய எட்டிப்பிடித்த தமிழ்நாடு 44 ஓவர்களில் 204/9 ரன்கள் மட்டுமே எடுத்து வெறும் 1 ரன் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது, மறுபுறம் கடைசி நேர பரபரப்பில் அபாரமாக செயல்பட்ட பாண்டிச்சேரி இத்தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

அடுத்த போட்டி:

முன்னதாக இந்த தொடரில் கர்நாடகா, மும்பை, பெங்கால் அணிகளுக்கு எதிராக பங்கேற்ற முதல் 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த தமிழ்நாடு 4வது போட்டியில் பாண்டிச்சேரிக்கு எதிராக தோற்ற போதிலும் புள்ளி பட்டியலில் தொடர்ந்து 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

  • இதை அடுத்து இந்த தொடரின் 5வது போட்டியில் தமிழ்நாடு வரும் டிசம்பர் 14ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள மங்கலாபுரம் கேசிஏ கிரிக்கெட் மைதானத்தில் பரோடாவை எதிர்கொள்ள உள்ளது, இப்போட்டியில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction