ஐபிஎல் 2022 தொடரை நடத்துவதற்கான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுவருகிறது, அதில் முதல்கட்டமாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்ட 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன.
இதனால் நடைபெற உள்ள ஏலத்திற்கு முன்பாக ஏற்கனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ள பிசிசிஐ முன்னுரிமை அளித்துள்ளது.
கோடிகள் முதல் சோடைகள்:
இதை தொடர்ந்து ஐபிஎல் 2022 மெகா ஏலம் ஜனவரி மாத துவக்கத்தில் நடைபெற உள்ளதாக தெரியவருகிறது. இந்த ஏலத்திற்கு முன்பாக கடந்த வருடம் பல கோடி ரூபாய்களை அள்ளிய போதிலும் இந்த முறை அவ்வளவு விலைக்கு போக மாட்டார்கள் என கருதக் கூடிய 5 வீரர்கள் பற்றி பார்ப்போம்:
1. கிருஷ்ணப்பா கெளதம் - சென்னை:
கர்நாடகாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதமை கடந்த ஐபிஎல் 2021 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 9.25 கோடி ரூபாய்க்கு வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது ஏனெனில் இந்தியாவிற்காக இதுவரை விளையாடாத அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு கணிசமாக செயல்பட்டு வந்தார்.
- இவ்வளவு கோடிகள் கொடுத்த போதிலும் கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட அவரை சென்னை நிர்வாகம் களமிறக்கவில்லை மேலும் ஐபிஎல் 2021 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் அவர் இடம் பிடித்த போதிலும் ஒரு போட்டியில் கூட விளையாட காரணத்தால் நிச்சயமாக 2022 மெகா ஏலத்தில் அவருக்கு 9 கோடிகள் கிடைக்காது என அடித்துக் கூறலாம்.
2. கைல் ஜமிசன் - பெங்களூரு :
நியூஸிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்கும் கைல் ஜெமிசனை கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் 15 கோடிகள் கொடுத்து வாங்கியது, தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே இவ்வளவு பெரிய தொகை கிடைத்த போதிலும் அவர் அந்த அளவுக்கு பெங்களூர் அணிக்காக பெரிய அளவில் விளையாடவில்லை என்றே கூறலாம்.
- அவர் ஐபிஎல் 2021 தொடரில் அவர் 9 போட்டிகளில் பங்கேற்று வெறும் 9 விக்கெட்டுகளை அதுவும் 9.61 என்ற அதிகமான எக்கனாமியில் மட்டுமே எடுத்துள்ளார், அத்துடன் இந்த 9 போட்டிகளில் வெறும் 65 ரன்களை 120 க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்த காரணத்தால் அடுத்த ஏலத்தில் இவர் 10 கோடிகளுக்கு கூட விலை போவது சந்தேகம்.
3. ஜே ரிச்சர்ட்சன் - பஞ்சாப் :
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜே ரிச்சர்ட்சன் கடந்த ஐபிஎல் 2021 ஏலத்தில் 15 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கி மற்ற அணிகளுக்கு ஆச்சரியம் கொடுத்தது ஏனெனில் அவர் அதற்கு முன் எந்த ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்ற அனுபவம் இல்லாதவராக இருந்தார்.
- இருப்பினும் 2021 சீசனில் அவர் வெறும் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டும் 10.64 என்று அதிகப்படியான எக்கனாமியில் எடுத்த காரணத்தால் வரும் சீசனில் அவ்வளவு தொகைக்கு நிச்சயமாக விலை போக மாட்டார் என உறுதியாகக் கூறலாம்.
4. ரிலே மெரிடித் - பஞ்சாப் :
ரிச்சர்ட்சன் போலவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு இளம் வீரரான ரிலே மெரிடித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் கடந்த காலத்தில் 8 கோடி ரூபாய்க்கு வாங்கியது, இத்தனைக்கும் இவர் ஆஸ்திரேலிய அணிக்கு கூட விளையாடியது கிடையாது மாறாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இவ்வளவு கோடிகள் கொடுத்து பஞ்சாப் வாங்கியது.
- ஆனால் இவர் 5 போட்டிகளில் பங்கேற்ற வேளையில் காயத்தால் கடந்த சீசனில் பாதியிலேயே விலகினார், இந்த 5 போட்டிகளில் அவர் வெறும் 4 விக்கெட்டுகளை 9.94 என்ற எக்கனாமி எடுத்து ஜொலிக்க தவறியதால் வரும் மெகா ஏலத்தில் இவர் பெரிய விலைக்கு போவார் எனக் கூற முடியாது.
5. கிறிஸ் மோரிஸ் - ராஜஸ்தான் :
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிசை ரூபாய் 16.25 கோடிகளுக்கு வாங்கிய ராஜஸ்தான் இதர அணிகளை தெறிக்க விட்டது என்றே கூறலாம், இதனால் ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 16 கோடிகளுக்கு நேரடியாக ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
- ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு பெங்களூரு அணிக்காக விராட் கோலி 17 கோடி ரூபாய்களுக்கு கடந்த ஐபிஎல் 2021 தொடரில் விளையாடினார்.
அந்த வேளையில் நடந்த ஐபிஎல் தொடரில் கிறிஸ் மோரிஸ் 15 விக்கெட்டுகளையும் 67 ரன்களையும் எடுத்து சுமாராகவே செயல்பட்ட காரணத்தால் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் ஏலம் போகும் சாத்தியம் மிகவும் குறைவாகும்.