ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் தாங்கள் விரும்பும் முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளன, இதுபற்றிய அறிவிப்பு கடந்த வாரம் வெளிவந்த நிலையில் மெகா ஏலத்துக்கு முன்னர் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
Photo Credits : BCCI/IPL |
புதிய 2 அணிகள் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய விரும்புகின்றன மற்றும் அவர்களுக்கு எவ்வளவு தொகையை செலவிட போகின்றன என்பது பற்றிய விபரத்தை டிசம்பர் 25ம் தேதிக்குள் அறிவிக்க ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்துள்ளது.
விக்கெட் கீப்பர்கள்:
இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களின் பங்கு மிகவும் அவசியமாகும் அதிலும் விக்கெட் கீப்பராக இருப்பவர் அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவராக இருந்தால் அவரின் மவுசு எப்போதுமே எகிறி இருக்கும், அந்த வகையில் மெகா ஏலத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ அதிக விலைக்கு போகக்கூடிய சில விக்கெட் கீப்பர்கள் பற்றி பார்ப்போம் வாங்க:
1. இஷான் கிஷான்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களாகவே அதிரடியாக விளையாட கூடிய விக்கெட் கீப்பராக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இசான் கிசான் உள்ளார், 2020 ஆம் ஆண்டு அதிரடியாக விளையாடி 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்ததன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற இவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் 2021 ஐபிஎல் சீசனில் பார்ம் இல்லாமல் தவித்த காரணத்தால் இவரை மும்பை நிர்வாகம் தக்க வைக்க வில்லை, வெறும் 23 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் இளம் வீரராக இருப்பதன் காரணமாகவும் இந்திய விக்கெட் கீப்பராக இருப்பதன் காரணமாகவும் இவரை தங்கள் அணிக்கு விளையாட வைக்க அனைத்து அணிகளும் பல கோடிகளை ஏலத்தில் செலவழிக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
- இதுவரை இவர் 45 போட்டிகளில் 1133 ரன்களை 139 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார்.
2. குயின்டன் டீ காக்:
இஷான் கிசான் போலவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தென்னாபிரிக்காவின நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் கடந்த சில வருடங்களாக முக்கிய வீரராக விளையாடி வந்தார், குறிப்பாக 2019, 2020 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற போது இவரின் பங்கு அதிகமாக இருந்தது போதிலும் அவரை அந்த நிர்வாகம் அவரை தக்க வைக்க வில்லை மாறாக வெளிநாட்டு வீரர் இடத்தில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிரண் பொல்லார்ட் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆடுகளங்களில் பவர்பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பி ரன்களை விளாசும் திறமை கொண்டுள்ள இவர் சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்காக கணிசமான ரன்களை அடித்தார், இவரையும் மெகா ஏலத்தில் வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதில் சந்தேகமில்லை.
- இவர் 77 போட்டிகளில் 2256 ரன்களை 130 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார்.
3. ஜானி பேர்ஸ்ட்டோ:
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 3 சீசன்களாக விளையாடி வந்த இங்கிலாந்தின் நட்சத்திர அதிரடி விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவை அந்த அணி நிர்வாகம் தக்க வைக்காமல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, டேவிட் வார்னர் உடன் கடந்த 3 வருடங்களாக ஓப்பனிங்கில் களமிறங்கி அதிரடியாக ரன்கள் குவித்த இவரையும் வார்னர் போலவே ஐதராபாத் அணி நிர்வாகம் கழட்டிவிட்டு உள்ளது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
- இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் 1038 ரன்களை 142 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் ஜானி பேர்ஸ்ட்டோ குவித்துள்ளார், இதில் 7 அரை சதம் மற்றும் 1 சதம் அடங்கும்.
இங்கிலாந்து அணிக்காக 3வது இடத்தில் அதிரடியாக பேட்டிங் செய்யும் இவரை அனைத்து அணிகளும் ஏலத்தில் எடுக்க பல கோடி ரூபாய்களை செலவு செய்து போட்டி போடும் என நம்பலாம்.