தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்து பங்குபெற உள்ளது, இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற உள்ளது.
Photo Credits : Getty Images |
இந்த தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
வலுவான தென்ஆப்பிரிக்கா:
டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எந்த ஒரு வெளி நாட்டு அணிகளுக்கும் அவ்வளவு சுலமல்ல, குறிப்பாக இந்தியா போன்ற ஆசியாவைச் சேர்ந்த அணிகளுக்கு தென்னாப்பிரிக்கா எப்போதுமே சொந்த மண்ணில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.
வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு கடந்த 1992 முதல் அவ்வப்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா இதுவரை 1 டெஸ்ட் தொடரை கூட வென்றதே கிடையாது, அந்த அளவுக்கு தென் ஆப்பிரிக்கா தனது சொந்த மண்ணில் இந்தியாவிற்கு மிகக் கடுமையான காலம் காலமாக சவாலை கொடுத்து வருகிறது.
இருப்பினும் வரலாற்றில் இந்தியா இதுவரை தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகளில் சாய்த்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அது பற்றி பார்ப்போம்:
1. ஸ்ரீசாந்த் மிரட்டல், 2006:
கடந்த 2006 ஆம் ஆண்டு ராகுல் ட்ராவிட் தலைமையில் தென் ஆப்பிரிக்காவுக்கு பறந்த இந்தியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் களமிறங்கியது, அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் போராடி 249 ரன்கள் குவித்தது.
- அதிக பட்சமாக ஜாம்பவான்கள் சௌரவ் கங்குலி 51* ரன்களும் சச்சின் டெண்டுல்கர் 44 ரன்களும் எடுத்தனர், தென் ஆப்ரிக்கா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஷான் பொல்லாக் 4 விக்கெட்டுகளும் மக்காயா நிடினி 3 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் கேப்டன் கிரேம் ஸ்மித், ஜேக் காலிஸ், ஹாசிம் அம்லா என தரமான வீரர்களுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா இந்தியாவின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 84 ரன்களுக்கு சுருண்டது.
- அதிகபட்சமாக அஸ்வெல் பிரின்ஸ் 24 ரன்கள் எடுத்தார், இந்தியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய இளம் வீரர் ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டுகளும் ஜாஹீர் கான் மற்றும் அனில் கும்ப்ளே தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
இதை தொடர்ந்து 165 என்ற பெரிய ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் சிறப்பான பந்து வீச்சில் பொறுப்புடன் பேட்டிங் செய்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன் 402 என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது.
- அதிகபட்சமாக விவிஎஸ் லக்ஷ்மன் 73 ரன்களும் ஜாஹீர் கான் 37 ரன்களும் எடுத்தனர், தென் ஆப்ரிக்கா சார்பில் மகாயான நிட்டிநி, ஷான் பொல்லாக் மற்றும் ஆண்ட்ரு நெல் ஆகிய தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இறுதியில் 402 என்ற பெரிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவை மீண்டும் மிகச் சிறப்பாக பந்துவீசி மடக்கிப் பிடித்த இந்திய பவுலர்கள் வெறும் 278 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தனர், தென் ஆப்ரிக்கா சார்பில் தோல்வியை தவிர்க்க போராடிய அஸ்வெல் பிரின்ஸ் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இந்தியா சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஸ்ரீசாந்த், ஜாஹிர் கான் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
- இதன் வாயிலாக 123 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் சாய்த்து வரலாற்று வெற்றியை எழுதியது, இந்த வெற்றிக்கு 8 விக்கெட்டுகள் சாய்த்து வித்திட்ட ஸ்ரீசாந்த் ஆட்ட நயகன் விருதை தட்டிச் சென்றார்.
2. சம பலம், 2010:
எம்எஸ் தோனி தலைமையில் கடந்த 2010ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு சென்ற இந்திய அணி செஞ்சூரியன் நகரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, அதைத் தொடர்ந்து டர்பன் நகரில் நடந்த 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்த தென்னாப்பிரிக்கா இந்தியாவை பதம் பார்த்தது என கூறலாம்.
- குறிப்பாக அதிரடியாக பந்துவீசிய டேல் ஸ்டைன் 6 விக்கெட்டுகளை எடுக்க அதற்கு தாக்குப் பிடிக்க முடியாத இந்திய பேட்டர்கள் யாரும் 40 ரன்களை தாண்டாத நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு சுருண்டது, அதிகபட்சமாக விவிஎஸ் லக்ஷ்மன் 38 ரன்கள் தோனி 37 ரன்கள் எடுத்தார்கள்.
முதல் டெஸ்ட் போலவே மீண்டும் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவை நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் பந்துவீசிய இந்திய பவுலர்கள் வெறும் 131 ரன்களுக்கு சுருட்டினர், இந்தியா சார்பில் ஹர்பஜன்சிங் 4 விக்கெட்டுகளும் ஜாஹிர கான் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
அபார பந்து வீச்சால் 74 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவுக்கு 2வது இன்னிங்சில் ஒரு புறம் விவிஎஸ் லக்ஷ்மன் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய மறுபுறம் வந்தவர்கள் பெரிய ரன்கள் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார், ஒரு கட்டத்தில் விபிஎஸ் லக்ஷ்மனும் 96 ரன்களுக்கு அவுட்டாக இந்தியா 228 ரன்களுக்கு ஆல் ஆனது.
இறுதியில் 303 என்ற இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்காவை மீண்டும் சிறப்பாக பந்து வீசிய ஜாஹீர் கான் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளும் எடுத்து வெறும் 215 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர், இதனால் இந்தியா 87 ரன்கள் வித்யாசத்தில் 2வது முறையாக சரித்திர வெற்றியை பதிவு செய்தது.
- அந்த வெற்றிக்கு வித்திட்ட விவிஎஸ் லக்ஷ்மன் ஆட்டநாயகன் விருது வென்றார், அத்துடன் அந்த தொடரின் 3-வது போட்டி டிராவில் முடிவடைய 3 போட்டிகள் கொண்ட அத்தொடரை 1 - 1 என சமன் செய்து இந்திய அணி அசத்தியது.
3. புதிய வெற்றி, 2018:
கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் தென்ஆப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்தியா முதல் 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்து தொடரை இழந்தது, பின்னர் நடந்த 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வேகப்பந்து வீச்சில் வெறும் 187 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 54 ரன்களும் புஜாரா 50 ரன்களும் எடுத்தனர், தென் ஆப்ரிக்கா சார்பில் ககிசோ ரபடா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவை தனது அறிமுக தொடரில் வித்தியாசமாக பந்து வீசி அச்சுறுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்களும் எடுத்து 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக உதவினர், தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஹாஷிம் அம்லா 61 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 2வது இன்னிங்சில் 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா பொறுப்புடன் பேட்டிங் செய்து 247 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 48 ரன்களும் விராட் கோலி 41 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மோர்னி மோர்க்கல் மற்றும் வெர்னோன் பிளாண்டர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இறுதியில் 241 என்ற தொட்டு விடக்கூடிய இலக்கை துரத்திய தென்னாபிரிக்காவிற்கு தொடக்க வீரர் டீன் எல்கர் ஒருபுறம் நிலைத்து நின்று 86* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் மறுபுறம் அனைத்து தென் ஆப்பிரிக்க பேட்டர்களும் சீரான இடைவெளிகளில் அவுட் ஆனார்கள், இதனால் வெறும் 177 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- இந்தியா சார்பில் 2வது இன்னிங்சில் முகம்மது ஷமி 5 விக்கெட்டுகள் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர், இந்த வெற்றியின் வாயிலாக 2 - 1 என வைட்வாஷ் தோல்வியைத் தவிர்த்த இந்தியா வெற்றியுடன் நாடு திரும்பியது.
இந்த தொடரில் தான் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி புது வலுப்பெற்று அதன்பின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பதிவு செய்வது. எனவே இந்த முறை தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.