வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த ஆஷஸ் கிரிக்கெட்டின் 2021/22 தொடர் இன்று ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு துவங்கியது, மழைக்கான வாய்ப்பு இருந்த வேளையில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
Photo Credits : Getty Images |
ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்கிய இத்தொடரின் முதல் நாளின் முதல் பந்திலேயே ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்தின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை கிளீன் போல்டாக்கி டக் அவுட் செய்து ஆஷஸ் நெருப்பை பற்ற வைத்தார்.
- இதன் வாயிலாக 85 வருடங்களுக்கு பின் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன வீரர் என்ற பரிதாபமான சாதனையுடன் ரோரி பர்ன்ஸ் பெவிலியன் திரும்பினார்.
ஆஷஸ் வரலாற்றின் முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆன வீரர்கள்:
- ஸ்டாண் வொர்த்திங்டன் (இங்கிலாந்து) - எரின் மெக்கோர்மிக் க்கு எதிராக, பிரிஸ்பேன், 1936.
- ரோரி பர்ன்ஸ் (இங்கிலாந்து) - மிட்சேல் ஸ்டார்க் க்கு எதிராக, பிரிஸ்பேன், 2021*
இங்கிலாந்து சொதப்பல்:
இதனை தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மாலன் 6 ரன்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஜோ ரூட் டக் அவுட் ஆகி இங்கிலாந்துக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர், அடுத்ததாக நீண்ட நாட்களுக்குப்பின் கிரிக்கெட்டில் காலடி வைத்துள்ள நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் அவுட் ஆகி மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீட்க போராடிய ஹமீது 25, போப் 35, ஜோஸ் பட்லர் 39 எடுத்து போராடிய போதிலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத இங்கிலாந்து முதல் இன்னிங்சில் வெறும் 147 ரன்களுக்கு சுருண்டது.
- ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய கேப்டன் பட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மறுபுறம் அபாரமாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர், கிறிஸ் க்ரீன் 1 விக்கெட் எடுத்தார்.
பட் கமின்ஸ் சாதனை:
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக முதன்முறையாக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வெறும் 38 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார், இதன் வாயிலாக ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய கேப்டன் என்ற சாதனையை முன்னாள் கேப்டன் ரிக்கி பெனட் க்கு பின் கிட்டதட்ட 60 வருடங்களுக்கு பின்னர் படைத்தார்.
- கடைசியாக கடந்த 1962-ஆம் ஆண்டு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிச்சி பென்னட் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
அத்துடன் ஒட்டுமொத்த ஆஷஸ் கிரிக்கெட்டில் கடந்த 1982 க்கு பின் கிட்டதட்ட 40 வருடங்கள் கழித்து ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையையும் பட் கமின்ஸ் பெற்றார்.
- கடைசியாக கடந்த 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து கேப்டன் பாப் வில்ஸ் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
பொழிந்த மழை:
இதை அடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ்ஸை தொடங்குவதற்கு முன்பாக காபா மைதானத்தில் தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது,
தற்போதய நிலையில் நாளைய 2 மற்றும் 3வது நாட்களில் இன்று போலவே 50 சதவீத போட்டி மழையால் தடைபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, 4 மற்றும் 5வது நாள் போட்டிகள் முழுமையாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.