டெஸ்ட் கிரிக்கெட்டின் கிங் கேப்டன் விராட் கோலி, தென்ஆப்பிரிக்காவில் இந்திய கொடியை நாட்டுவாரா

நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா கோப்பையை கைப்பற்றி அசத்தியது, முன்னதாக கான்பூரில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய போதிலும் கடைசி ஒரு மணி நேரத்தில் 1 விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்தியா வெற்றியை நழுவ விட்டது.

Photo Credits : Getty Images


அந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி இல்லாத வேளையில் மும்பையில் நடைபெற்ற 2வது போட்டியில் அவர் அணிக்கு திரும்பியதுமே இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

கிங் கேப்டன்:

இது மட்டுமல்லாமல் வரலாற்றில் இந்தியா பதிவு செய்த மிகப்பெரிய டாப் 7 வெற்றிகளில் 6 வெற்றிகள் விராட் கோலியின் தலைமையில் வந்ததாகும்.

அதில் டாப் 5 வெற்றிகள் இதோ:

  1. 372, நியூசிலாந்துக்கு எதிராக, மும்பை, 2021.
  2. 337, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, டெல்லி, 2015.
  3. 321, நியூசிலாந்துக்கு எதிராக, இந்தூர், 2016.
  4. 320, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, மொஹாலி, 2008 (தோனி தலைமையில்).
  5. 318, வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிராக, ஆண்டிகுவா, 2019.

அத்துடன் கடந்த 2014 முதல் இந்தியாவின் முழு நேர டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி தலைமையில் இந்தியா சொந்த மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்றதில்லை, அனைத்து தொடர்களையும் வென்று எதிர் அணிகளை மிரட்டும் ஒரு அணியாக உள்ளது.

விராட் கோலி தலைமையில் இந்திய மண்ணில் இந்தியா இதுவரை:

  • போட்டிகள் : 31
  • வெற்றிகள் : 24
  • தோல்விக்கள் : 2
  • ட்ரா : 5

வளரும் கோலி:

இதுவரை மொத்தம் 39 வெற்றிகளை கேப்டனாக குவித்துள்ள விராட் கோலி ஏற்கனவே இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற வரலாற்றை படைத்துள்ளார், மேலும் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த மகத்தான கேப்டன்களின் கிரேம் ஸ்மித் (51), ரிக்கி பாண்டிங் (48), ஸ்டீவ் வாக் (41) வரிசையில் 4வது கேப்டனாகவும் இடம் பிடித்துள்ளார்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையில் இதுவரை அதிக வெற்றிகளை குவித்த கேப்டனாக விராட் கோலி முதலிடத்தில் மின்னுகிறார்.

  1. விராட் கோலி (இந்தியா) : 13* வெற்றிகள்
  2. ஜோ ரூட் (இங்கிலாந்து) : 12
  3. டிம் பைன் (ஆஸ்திரேலியா) : 8
  4. கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து) : 7

ஆக்ரோஷம்:

இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் வரலாற்று புத்தகத்தை எந்த வகையில் புரட்டிப் பார்த்தாலும் விராட் கோலியின் பெயர் நிச்சயமாக இடம் பிடிக்கிறது, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் விமர்சனங்களை சந்தித்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் கேப்டன்ஷிப்க்கு ஈடு இணை தற்போது யாருமே கிடையாது எனக் கூறலாம்.

  • ஒருநாள், டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டை விராட் கோலி விரும்புவதே இதற்கு முதல் காரணம், அத்துடன் எவ்வளவு மோசமான தருணமாக இருந்தாலும் ஆக்ரோஷத்தை விட்டுக்கொடுக்காமல் வெற்றிக்காக போராடும் அவரின் குணமே இதற்கு 2வது காரணமாகும்.

மைல்கல் வெற்றிகள்:

விராட் கோலி தலைமையில் ஆசியாவை சேர்ந்த எதிரணிகள் நினைத்து பார்க்க கூட முடியாத ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 71 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த 2019இல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

அதேபோல் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 - 1 முன்னிலை வகிக்கிறது.

பொதுவாக சேனா நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஆசிய அணிகளுக்கு சிம்ம சொப்பணமாகும், அதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் விராட் கோலி வெற்றிகளை பெற்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.

அடுத்ததாக வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் துவங்கும் டெஸ்ட் தொடரிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவில் இந்திய கொடியை நாட்டுவதே அவரின் அடுத்த இலக்காக இருக்கும் என நம்பலாம்.

Previous Post Next Post

Your Reaction