இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நேற்று அதிரடியாக நீக்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு பதில் சமீபத்தில் 20 ஓவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மாவை புதிய ஒருநாள் கேப்டனாக நியமித்துள்ளது, வரும் 2023 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Photo Credits : Getty Images |
2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் ஒருமுறைகூட கேப்டனாக கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் ஏற்கனவே விராட் கோலியின் மீது பிசிசிஐ அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
ரோஹித் சர்மா கேப்டன்:
அந்த வேளையில் கடந்த மாதம் துபாயில் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரிலும் விராட் கோலி தலைமையில் அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் இந்தியா படுதோல்வி அடைந்தது, அப்போதே இந்தியாவின் ஒருநாள் கேப்டனாகவும் ரோகித் சர்மாவை நியமிக்க பிசிசிஐ முடிவு எடுத்து விட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற காரணத்தையும் தாண்டி விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்குவதற்கு வித்திட்ட சில காரணங்கள் பற்றி பார்ப்போம்:
1. முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் கீழ் வளர்ந்த பல தரமான வீரர்களில் விராட் கோலி முக்கியமான ஒருவர் எனலாம், அதிலும் தோனிக்கு பின்னர் இந்திய அணியை தலைமை தாங்கும் அளவுக்கு திறமை இருந்ததால் தான் 2019 உலகக்கோப்பைக்கு தயாராகும் வண்ணம் 2 ஆண்டுகள் முன்பாகவே 2017 ஆம் ஆண்டு இந்திய கேப்டன் பதவியில் இருந்து தோனி மொத்தமாக விலகினார்.
2. இதன் காரணமாக 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்த பவர் இல்லாத நிர்வாகம் காரணமாக இந்திய கிரிக்கெட்டின் பவர்ஃபுள் கேப்டனாக மாறினார்.
- அதாவது சரியோ தவறோ அவர் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும் அளவுக்கு அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது.
3. இளம் வயதில் விராட் கோலி எந்த அளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொள்வார் என பலருக்கும் தெரியும், இன்னும் சொல்லப்போனால் சில ரசிகர்கள் இன்றும் கூட விராட் கோலியை திமிர் பிடித்தவர் என சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர்.
- இது கேப்டனாக பொறுப்பேற்ற பின்பும் தொடர அந்த சமயத்தில் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே அவரின் கேரக்டரை மாற்ற முயற்சித்தார், ஆனால் அதற்கு அடிபணியாத காரணத்தால் கும்ப்ளே கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா தோற்ற பின் "விராட் கோலியின் உடனான உறவு சரிவர அமையவில்லை" என கூறி பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
4. அதன்பின் தமக்கு சாதகமாக இருக்கக்கூடிய ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட விராட் கோலியின் அதிகாரம் இந்திய கிரிக்கெட்டில் மேலும் அதிகரித்தது.
- இதனால் இவர் சில நேரங்களில் தன்னிச்சையான முடிவை எடுத்ததாக தெரிகிறது, குறிப்பாக ஒரு சில வீரர்கள் ஒரு சில போட்டிகளில் மோசமாக விளையாடினால் உடனே அவர்களை அணியில் இருந்து தூக்கி விடுகிறார் என்ற குற்றச்சாட்டும் வைத்தனர்.
இது பற்றி விராட் கோலி தலைமையில் கடந்த சில வருடங்களுக்கு விளையாடிய வீரர் ஒருவர்,
விராட் கோலி எப்போதும் வீரர்களை நம்பாமல் இருப்பதே அவரிடம் உள்ள பிரச்சனையாகும், அவர் எப்போதும் வெளிப்படையாக தொடர்பு கொள்வதை பற்றி பேசுவார் ஆனால் அணியில் உள்ள வீரர்களிடையே தொடர்பு கொள்ளும் விஷயத்தில் அவர் தனது மதிப்பை இழந்துவிட்டார்
என குற்றம் சாட்டியதாக கடந்த செப்டம்பர் மாதம் செய்திகள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டுக்கு எடுத்துக்காட்டாக குல்தீப் யாதவ் சிறப்பாக செயல் படாதபோது அவர் எங்கே தவறு செய்கிறார் என்பதைப் பற்றி யோசிக்காத விராட் கோலி அவரை அணியில் இருந்து ஓரம் கட்டிவிட்டார்.
5. மறுபுறம் அதே குற்றச்சாட்டில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் அறை கதவுகள் எப்போதும் அணியிலுள்ள வீரர்களுக்காக திறந்து இருக்கும் எனவும் அவருடன் எப்போது வேண்டுமானாலும் மனம் விட்டு பேசி பிஎஸ்4 கேம் விளையாடும் அளவுக்கு அணி வீரர்களுக்கு சுதந்திரம் கொடுத்தார் எனவும் அதே வீரர் தெரிவித்திருந்தார்.
6. அதேபோல் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா தோனியை போலவே ஏதேனும் ஒரு சில வீரர்கள் சொதப்பினாலும் அவர்களை உணவு விருந்துக்கு அழைத்து சென்று மனம் விட்டுப்பேசி எப்படி அதிலிருந்து மீண்டு சிறப்பாக செயல் படலாம் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கும் ஒரு கேப்டனாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.
7. பின்னர் சௌரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா போன்ற விராட் கோலியை விட பவர்ஃபுல்லான நிர்வாகிகள் 2019ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் நியமிக்கப்பட்டனர்.
- 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஏற்கனவே உலக கோப்பையை கைப்பற்ற தவறிய காரணத்தால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த பிசிசிஐ முதலில் ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மாற்றி ராகுல் டிராவிட்டை நியமித்தது.
போதாக்குறைக்கு கடைசி வாய்ப்பாக 2021 டி20 உலகக் கோப்பையிலும் விராட் கோலி தலைமையில் இந்தியா படுதோல்வி அடைந்தது சாதகமாக மாற அவரின் ஒருநாள் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் கேப்டனாக சில தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் முறையும் அணி வீரர்களிடையே காட்டும் தவறான அணுகுமுறையும் விராட் கோலியின் வெள்ளை பந்து கேப்டன்ஷிப் பறிபோக காரணமாக அமைந்துள்ளது.
- விராட் கோலி - ரவி சாஸ்திரியின் தன்னிச்சையான முடிவுகளுக்கு எடுத்துக்காட்டாக 2019 உலக கோப்பை அரை இறுதியில் தோனியை பின்வரிசையில் களமிறங்கியதும் 2021 டி20 உலக கோப்பையில் முக்கியமான நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷனை தொடக்க வீரராக களமிறங்கியதையும் கூறலாம்.