இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலியை அதிரடியாக அந்த பதவியில் இருந்து நீக்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்துள்ளதாக நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
Photo Credits : BCCI |
ஏற்கனவே துபாயில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகி இருந்தார் ஆனால் அப்போது டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சாதாரண வீரராகவும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
அதிரடி நீக்கம்:
ஆனால் அந்த அறிவிப்புக்கு மாறாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பல கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைகளில் ஒரு முறை கூட இந்தியா கோப்பையை கைப்பற்ற முடியவில்லை இதனால் வரும் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பைக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக செயல்பட பிசிசிஐ விரும்பியதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
2021 ஜனவரி முதல்:
இந்த முடிவுக்கு முதல் படி 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது என்று சொன்னால் நம்ப முடியுமா ஆம் கடந்த 2020 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்று தோல்வியை சந்தித்தது.
ஆனால் அந்த மோசமான நேரத்தில் தனது குழந்தைப் பிறப்பதை ஒட்டி அணியுடன் இருக்காமல் விராட்கோலி ஏற்கனவே அறிவித்தபடி நாடு திரும்பினார், முக்கிய வீரரான விராட் கோலி இல்லாத நேரத்திலும் கூட கடந்த 2021 ஜனவரியில் ரகானே தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்தியா அந்த தொடரை 2 - 1 என கைப்பற்றி வரலாறு படைத்தது.
- இந்த நேரத்தில் விராட் கோலி அணியில் இருந்தாலும் கேப்டனாக இல்லாமல் போனாலும் இந்தியாவால் வெற்றி பெற முடியும் என பிசிசிஐ உணரத் தொடங்கியது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
அத்துடன் ஏற்கனவே 2017, 2019 உலக கோப்பைகளில் விராட் கோலி தலைமையில் படுதோல்வி அடைந்த இந்தியா கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் படுதோல்வி அடைந்தது பிசிசிஐயை மேலும் அதிருப்தி அடைய செய்தது.
2013 முதல் கேப்டனாக ஐபிஎல் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2019 உலககோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்த ஒரு முக்கிய கோப்பையையும் விராட் கோலி வெல்ல முடியாத காரணத்தால் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க 6 மாதத்திற்கு முன்பே பிசிசிஐ முடிவெடுத்து விட்டது.
கடைசி வாய்ப்பு & பின்னணியில் ஜெய் ஷா:
இது பற்றி விராட் கோலியிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததுமே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார், அதில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தனது கேப்டன்ஷிப்பை நிரூபிக்க டி20 உலககோப்பை 2021 தொடரில் கடைசியாக ஒரு வாய்ப்பளிக்குமாறு விராட் கோலி கேட்டதாக தெரிகிறது.
அதற்கு "2021 டி20 உலக கோப்பையை வென்றால் ஒருநாள் கேப்டன் பதவியில் தொடரலாம் இல்லையேல் மாற்றம் கொண்டு வரப்படும்" என பிசிசிஐ மற்றும் ஜெய் ஷா பதில் அளித்ததாக தெரிகிறது, அந்த நேரத்தில் பிசிசிஐயின் வாயை அடைக்கவே டி20 உலகக்கோப்பை துவங்கும் முன்னரே டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்தார்.
ஆனால் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோற்றததை அடுத்து விராட் கோலி வெள்ளை பந்து கேப்டன்ஷிப் மீதான முழு நம்பிக்கையை இழந்த பிசிசிஐ புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்துள்ளது, போதாக்குறைக்கு தமக்கு முழு ஆதரவாக இருந்த தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் மாற்றப்பட்டு ராகுல் ட்ராவிட் நியமிக்கப்பட்டதால் விராட் கோலிக்கு இந்திய அணியின் தலைமை நிர்வாகத்தில் பெரிய ஆதரவு இல்லை.
- மொத்தத்தில் கடந்த ஒரு வருடமாக இந்திய கிரிக்கெட்டில் புகைந்த விராட் கோலியின் வெள்ளைப் பந்து கேப்டன்ஷிப் மற்றும் விமர்சனங்கள் இன்று முழுமையாக அணைந்துள்ளது.