இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து கடந்த மாதம் விலகிய விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவி நேற்று பறிபோனது, அவருக்கு பதிலாக டி20 போலவே ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Photo Credits : Getty Images |
வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் அடுத்த ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அதற்குள் புதிய அணியை கட்டமைக்கும் வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
சோதித்த உலககோப்பை:
2017 முதல் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வெள்ளை பந்து உலகக்கோப்பையை வெல்ல தவறினார், இதனால் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த அவர் கடைசி வாய்ப்பாக களமிறங்கிய 2021 டி20 உலகக்கோப்பையிலும் வெற்றி பெற தவறியதன் எதிரொலியாக ஒருநாள் கேப்டன் பதவியும் பறிபோயுள்ளது என்றே கூறலாம்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையில் ஐசிசி தொடர்களை தவிர்த்து ஏனைய அனைத்து தொடர்களிலும் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றது.
அதற்கு ஆதாரமாக விராட் கோலி தலைமையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா:
- போட்டிகள் : 95
- வெற்றிகள் : 65
- தோல்விகள் : 27
- டை மற்றும் முடிவு இல்லை : 3
- வெற்றி விகிதம் : 70.43
- வெற்றி/தோல்வி விகிதம் : 2.407
அதாவது விராட் கோலி தலைமையில் இந்தியா கடந்த நான்கரை ஆண்டுகளில் 70.43% போட்டிகளில் பதிவு செய்துள்ளது, இந்த வெற்றி விகிதம் 70.43% மற்றும் வெற்றி/தோல்வி விகிதம் 2.407 என்பது இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் கேப்டனான எம்எஸ் தோனியை விட அதிகமாகும்.
கேப்டன் பேட்டர்:
வரலாற்றில் எத்தனையோ ஜாம்பவான் பேட்டர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் அதன் அழுத்தம் காரணமாக ரன்கள் குவிக்க திணறுவார்கள் ஆனால் விராட் கோலிக்கு அந்த அழுத்தம் எப்போதுமே இருந்தது கிடையாது என்றே கூறலாம்.
கிரிக்கெட் போட்டிகளில் எப்போதுமே ஒரு அணி தடுமாறும் போது கேப்டன் ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டால் அதை "கேப்டன் நாக்" என வல்லுனர்களும் ஜாம்பவான்களும் மனதார பாராட்டுவார்கள்.
அந்தவகையில் ஒருநாள் கேப்டனாக விராட் கோலி அடித்த ரன்கள்:
- போட்டிகள் : 95
- ரன்கள் : 5449
- சராசரி : 72.95
- சதங்கள் : 21
- அரை சதங்கள் : 27
மேற்கண்ட புள்ளி விவரத்தில் இருந்து விராட் கோலி அடித்த ரன்களையும் சராசரியையும் சதங்களையும் பார்த்தாலே கேப்டனாக அவர் எந்த அளவுக்கு இந்தியாவின் வெற்றிக்காக ரன்களை குவித்துள்ளார் என தெளிவாக தெரியும்.
- இந்த 72.65 எனும் சராசரி என்பது ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விளையாடிய இதர கேப்டன்களை விட மிகவும் அதிகமாகும்.
கையில் இல்லாத கோப்பை:
இந்த புள்ளி விவரங்களில் இருந்து விராட் கோலி இந்தியாவின் மிகச்சிறந்த ஒருநாள் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது தெள்ளத்தெளிவாகிறது என்றாலும் அவர் ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியாத காரணத்தால் அவரின் கேப்டன்ஷிப் பறிக்கப்படும் அளவுக்கு சென்றது உண்மையாகவே மனதை உருக்கும் அம்சமாகும்.
- ஒருவேளை 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2019 உலககோப்பை அல்லது சமீபத்தில் நடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் ஏதேனும் ஒன்றையாவது அவர் வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக இந்த நேரம் அவர் கேப்டனாக தொடர்ந்து இருப்பார் என்பதே நிதர்சனம்.