இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரில் ரவுண்டு 4 லீக் சுற்று போட்டிகள் இன்று டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கின.
Venkatesh Iyer | Rajinikanth |
இதில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள மத்திய பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய அணிகள் இன்று காலை 9 மணிக்கு சவுராஷ்டிராவில் உள்ள ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் மோதின.
மத்திய பிரதேஷ் - சண்டிகர்:
இப்போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் பண்டாரி 17 ரன்களிலும், கேகி டக் அவுட் ஆக அடுத்து வந்த ரஜத் படிடார் 2 ரன்கள், சுப்மன் சர்மா 18 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
- இதனால் 13 ஓவர்களில் 56/4 என மகாராஷ்டிரா திணறிய நிலையில் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தா அடுத்ததாக வந்த இளம் வீரர் வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்து தனது அணியை சரிவிலிருந்து மீட்டார், இதில் ஆதித்யா என்பது பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார்.
மிரட்டிய வெங்கடேஷ் ஐயர்:
ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் விக்கெட் விழுகிறதே என்ற பயம் கொஞ்சமும் இன்றி சண்டிகர் பவுலர்களை நாலாபுறமும் வெளுத்து வாங்கினார், தொடர்ந்து பட்டையை கிளப்பியவர் வெறும் 113 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 10 இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு சதம் விளாசி 151 ரன்கள் குவித்தார்.
- இவரின் அதிரடி ஆட்டத்தால் 200 ரன்களை தொடுமா என்ற நிலையில் இருந்த மத்திய பிரதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்து அசத்தியது.
சூப்பர்ஸ்டாருக்கு டெடிகேட்:
இப்போட்டியில் சதம் அடித்த போது அந்த சதத்தை வழக்கமாக கொண்டாடும் வகையில் ஹெல்மட்டை கழட்டிவிட்டு இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தனது சதத்தை சமர்ப்பணம் செய்யும் வகையில் சைகை செய்து கொண்டாடியது அனைவரையும் கவர்ந்தது.
இந்தியாவின் தலை சிறந்த நடிகரும் ரசிகர்களால் "தலைவா" என்று கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவரின் மிகத் தீவிர ரசிகரான வெங்கடேஷ் ஐயர் அவரின் பிறந்தநாளில் விளாசிய இந்த பொன்னான சதத்தை அவருக்கு டெடிகேட் செய்துள்ளதை ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மனதார பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.
சூப்பர் வெங்கடேஷ்:
இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மிகத் தீவிர ரசிகரான வெங்கடேச ஐயர் அவரைப் பார்த்துதான் இடதுகை பேட்டிங் செய்ய ஆரம்பித்து படிப்படியாக கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய அவர் அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்ல முக்கிய பங்காற்றினார்.
- இதன் காரணமாக சில வாரங்களுக்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் முறையாக இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பையும் வெங்கடேஷ் ஐயர் பெற்றார்.
ஒரு ஆல்-ரவுண்டராக வளர்ந்து வரும் இவர் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே 2021 கோப்பையில் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 14, 112, 71, 151 என 350+ க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஜொலித்து வருகிறார், இதன் காரணமாக வரும் ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இவரின் பெயர் இடம்பெற வாய்ப்புகள் பிரகாசமாக ஆகியுள்ளது.