இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி துபாயில் கடந்த மாதம் நடைபெற்ற முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
Photo Credits : Getty Images |
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக இருக்க அவர் விரும்பிய போதிலும் ஒரு ஐசிசி உலகக் கோப்பைகளை கூட வெல்ல முடியாத காரணத்தால் அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தருணங்கள்:
உலககோப்பை என்பதையும் தாண்டி ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையில் இந்தியா 95 போட்டிகளில் பங்கேற்று 65 போட்டிகளில் 70.42 என்ற மிகச்சிறப்பான சராசரியில் வெற்றி பெற்றது, இந்த வெற்றி விகிதமானது முன்னாள் கேப்டன்கள் எம்எஸ் தோனி, முகமது அசாருதீன், சவுரவ் கங்குலியை விட அதிகமாகும்.
- அத்துடன் 2017 - 2021 வரையிலான காலகட்டத்தில் அவர் தலைமையில் 19 நேருக்கு நேர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்குபெற்று 15 தொடர்களில் வெற்றி பெற்றது,
சரி விராட் கோலி தலைமையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 5 வெற்றி தருணங்கள் பற்றி பார்ப்போம்:
5. இங்கிலாந்தை சாய்த்த இந்தியா:
ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2015 உலகக் கோப்பைக்கு பின்பு ஒரு மிகச் சிறந்த அணி என்றால் அது இங்கிலாந்து என்றே கூறலாம் அதன் காரணமாகத்தான் 2019 உலக கோப்பையை அந்த அணி வென்று சாம்பியனாகவும் உள்ளது.
மோர்கன் தலைமையில் பட்லர், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் என பல நட்சத்திரங்களை அடங்கிய வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்தியா வெற்றி பெற்று அசத்தியது.
4. ஆஸ்திரேலியாவில் வெற்றி:
கடந்த 2019 ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது, இருப்பினும் அதன் பின் அடிலைட் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் விராட் கோலி சதமடித்து 104 ரன்களும் எம்எஸ் தோனி 55* ரன்கள் குவிக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
அதை தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் தோனி 87* மற்றும் கேதார் ஜாதவ் 61* ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்ற விராட் கோலி தலைமையிலான இந்தியா 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து கோப்பையை வென்றது.
- அந்த தொடரின் 3 போட்டிகளிலும் அரை சதமடித்து அசத்திய எம்எஸ் தோனி தொடர் நாயகன் விருதை வென்றார்.
3. நியூஸிலாந்தில் வெற்றி:
கடந்த 2019 பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா அபாரமாக விளையாடி ஹாட்ரிக் வெற்றிகளுடன் தொடரை கைப்பற்றியது, அதன் காரணமாக தொடர்ந்து 4வது மற்றும் 5வது போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.
Photo Credits : BCCI |
அந்த 4வது போட்டியில் இந்தியா தோற்ற போதிலும் 5வது போட்டியில் மீண்டும் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 4 - 1 என கைப்பற்றி அசத்தியது, இதன் காரணமாக கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின் 10 வருடங்கள் கழித்து நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய விராட் கோலி தலைமையிலான இந்தியா ஒரு நாள் தொடரை வென்றது.
3. தென்ஆப்பிரிக்காவில் வெற்றிக்கொடி:
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது, இந்த தொடர் விராட் கோலியின் தொடர் என்றே கூறவண்டும்.
ஏனெனில் அவர் தலைமையில் களம் இறங்கிய இந்தியாவிற்கு பேட்டிங்கில் எரிமலையாய் வெடித்த விராட் கோலி 6 போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 558 ரன்களை 186.00 என்ற மிரட்டலான சராசரியில் குவித்து தொடர் நாயகன் வெற்றியுடன் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.
இதனால் காரணமாக 6 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 5 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் சாய்த்து ஒருநாள் தொடரை வென்று புதிய சரித்திரம் படைத்தது.
1. வெளிநாடுகளில் வெற்றி:
மேற்குறிப்பிட்ட வெற்றிகள் மட்டுமல்லாது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2 ஒருநாள் தொடர் வெற்றிகள் இலங்கை மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் வெற்றி என 25 வெற்றிகளுடன் விராட் கேப்டனாக செயல்பட்ட 2017 முதல் 2021 வரையிலான காலகட்டங்களில் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த அணியாகவும் இந்தியா சாதனை படைத்துள்ளது.
வெற்றி/தோல்வி விகிதம் (2017 - 2021):
- இந்தியா - 1.923
- இங்கிலாந்து - 1.583
- தென்ஆப்பிரிக்கா - 1.000
மேலும் இந்த வெற்றிகளால் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஒருநாள் தொடரை வென்ற ஒரே ஆசிய கேப்டனாக விராட் கோலி சாதித்துள்ளார்.