முடியும் ஷிகர் தவான், ஹர்டிக் பாண்டியா கதை ! தென்ஆப்பிரிக்க தொடரில் பெயரை புக் செய்த ருதுராஜ், வெங்கடேஷ் ஐயர்

இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடர்களில் பங்கேற்க உள்ளது.



இதில் வரும் டிசம்பர் 26ம் தேதி துவங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, விராட் கோலி தலைமையில் 18 பேர் கொண்ட அந்த அணியில் சமீபத்திய நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெறாத முக்கிய வீரர்கள் திரும்பி உள்ளனர்.

ஒருநாள் தொடர்:

அதை தொடர்ந்து வரும் 2022 ஜனவரி மாதம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது, இந்த தொடருக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சற்று தாமதமாக அறிவிக்கப்பட உள்ளது ஏனெனில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

முடியும் ஷிகர் தவான் கதை?:

இந்த நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் ஷிகர் தவான் இடம்பெறுவது சந்தேகமாக உள்ளது, தற்போது 36 வயதை கடந்துள்ள அவர் கடந்த ஒரு வருடமாகவே இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பெற தடுமாறி வருகிறார்.

கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள், டி20 தொடரின் இந்திய அணியின் கேப்டனாக அவர் செயல்பட்டார், இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் அவர் முறையே 0, 12, 14, 18 என பங்கேற்ற 4 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி மோசமான பார்மில் உள்ளார்.

  • இருந்தாலும் அவரின் அனுபவம் கருதி தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் அவரின் பெயர் சேர்க்கப்பட்டாலும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகும்

கலக்கும் ருதுராஜ் கைக்வாட்:

மறுபுறம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதுடன் விஜய் ஹசாரே கோப்பையில் மகாராஷ்டிரா அணி கேப்டன் மற்றும் இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் மிக சிறப்பாக விளையாடி வருகிறார், குறிப்பாக பங்கேற்ற முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்த சதங்களை விளாசி ஹாட்ரிக் சதங்களை பதிவு செய்து நெருப்பு போன்ற பார்மில் உள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இலங்கைக்கு எதிராக இந்தியா பங்குபெற்ற டி20 போட்டியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைத்த போதிலும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை, மேலும் 2023 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, எனவே ஓப்பனிங் வீரராக அதிரடியாக விளையாடி வரும் இவரை தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் இந்திய தேர்வு குழு 100% தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர்:

ருதுராஜ் போலவே மத்தியபிரதேச அணிக்காக விளையாடி வரும் மற்றொரு இளம் வீரர வெங்கடேஷ் ஐயர் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2 சதங்கள் அடித்ததுடன் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்து வருகிறார், குறிப்பாக நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் வெறும் 113 பந்துகளில் 151 ரன்கள் குவித்து தேர்வு குழுவினரின் பார்வையை ஈர்த்தது.

  • ஏற்கனவே ஐபிஎல் 2021 தொடரில் கொல்கத்தாவுக்காக அபாரமாக விளையாடிய இவர் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவிற்காக களமிறங்கும் வாய்ப்பை பெற்று அசத்தினார், எனவே இவரின் பெயரும் தென் ஆப்ரிக்க ஒருநாள் தொடரில் 100% இடம் பெற உள்ளது.

மற்றொரு வளர்ந்து வரும் வீரராக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் கேரளாவுக்கு எதிரான போட்டியில் 5வது இடத்தில் களமிறங்கி 84 பந்துகளில் 112 ரன்களும் மற்றொரு போட்டியில் 49 பந்துகளில் 71 ரன்களும் விளாசி பினிஷராக செயல்பட்டு வருவதுடன் ஒரு சில விக்கெட்டுகளையும் எடுத்து வருகிறார்.

பாண்டியாவுக்கு மாற்று:

கடந்த 2019 உலகக் கோப்பைக்கு பின் காயத்தால் விலகிய ஹர்திக் பாண்டியா அதில் இருந்து குணமடைந்த போதிலும் பந்து வீசாமல் இருந்தது சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவிற்கு படுதோல்வியை கொடுத்தது, இதன் காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.

  • எனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் தயாராகிவிட்டனர், தற்போதய நிலைமையில் இந்த இளம் வீரர்களின் வருகையால் ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் கதை கேள்விக்குறியாகியுள்ளது.

Previous Post Next Post

Your Reaction