Vijay Hazare Trophy 2021 : அடுத்தடுத்த சதங்களால் இந்திய தேர்வுகுழு கதவை தட்டும் ருதுராஜ் கைக்வாட் - வாய்ப்பு எப்போது

இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை 2021 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன, மொத்தம் 38 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் இது வரை ஒவ்வொரு அணிகளும் ரவுண்ட் 1 சுற்றில் விளையாடியுள்ளன.

Ruturaj Gaikwad


இத்தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த மும்பை மற்றும் கர்நாடகா அணிகளுக்கு எதிராக களமிறங்கிய முதல் 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து 2 வெற்றிகளை பதிவு செய்து விட்டு எலைட் குரூப் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

கலக்கும் ருதுராஜ் கைக்வாட்:

இந்த தொடரில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் பிடித்துள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அணியும் இதுவரை களமிறங்கிய 2 போட்டிகளில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளது.

  • மத்திய பிரதேஷ் மற்றும் சட்டிஸ்கர் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருத்ராஜ் கைக்வாட் அடுத்தடுத்த 2 அதிரடி சதங்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

முதல் சதம்:

முதலில் டிசம்பர் 8 அன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மத்திய பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 328/6 ரன்கள் குவித்தது, அதிகபட்சமாக சுபம் சர்மா மற்றும் ஆதித்யா ஸ்ரீவட்சா ஆகிய 2 வீரர்கள் சதமடித்து முறையே 108 மற்றும் 104 ரன்கள் அடித்தனர்.

ஆனால் அந்த 2 சதங்களையும் சிதறடிக்கும் வகையில் மகாராஷ்டிராவின் தொடக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கைக்வாட் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 112 பந்துகளில் சதம் அடித்து 136 ரன்கள் குவித்து அசத்தினார், கூடவே ராகுல் திரிப்பாதி 56 ரன்கள் விளாச மகாராஷ்டிரா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது சதம்:

அதேபோல் அதே ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சட்டிஸ்கர் அணிக்கு எதிரான 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சட்டிஸ்கர் 50 ஓவர்களில் 275/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அமந்தீப் காரே 82 ரன்களும், ஷாஷாந்த் சிங் 63 ரன்களும் எடுத்தனர்.

பின் 276 என்ற இலக்கை துரத்திய மகாராஷ்டிராவுக்கு மீண்டும் பட்டையை கிளப்பிய ருத்ராஜ் ஆரம்பம் முதல் இறுதிவரை அதிரடியாக பேட்டிங் செய்து 143 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 5 இமாலய சிக்சர் உட்பட சதம் அடித்து 154* விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து தனது அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெறச் செய்தார்.

சிஎஸ்கே ஸ்பார்க்:

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் பெருத்த அவமானத்தை சந்தித்தது, இருப்பினும் அந்த சீசனில் 2வது பகுதியில் அபாரமாக விளையாடிய ருதுராஜ் புள்ளிப் பட்டியலில் சென்னை கடைசி இடத்தை பிடிக்காமல் 7வது இடத்தை பிடிக்க உதவினார்.


அப்போது பற்றிய ருதுராஜ் எனும் ஸ்பார்க் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2021 தொடரில் அதிரடியாக விளையாடி 675 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் 4வது முறையாக கோப்பையை வெல்ல உதவியது, மேலும் கடந்த மாதம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரிலும் அதே பார்மை தொடர்ந்த அவர் 5 இன்னிங்ஸ்ஸில் 259 ரன்களை 51.8 என்ற மிகச் சிறப்பான சராசரியில் குவித்து அசத்தினார்.

கதவை தட்டும் ருதுராஜ்:

இப்படி கடந்த ஒரு வருடமாக அதிரடியாக விளையாடி மிகச்சிறந்த பார்மில் இருக்கும் இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்த போதிலும் அதே சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை, பின் ஐபிஎல் 2021 தொடரில் அசத்திய காரணத்தால் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார் ஆனாலும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை.

  • இந்த வேளையில் வரும் ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
  • தற்போது விஜய் ஹசாரே கோப்பையில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்து மீண்டும் இந்திய தேர்வு குழுவினரின் கதவை சத்தமாக ருத்ராஜ் தட்டியுள்ளார் என்பதால் அந்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என பார்க்க வேண்டும்.

ரோஹித் - ராகுல் ஆகியோரால் டி20 அணியில் இவருக்கு வாய்ப்பு கடினம் என்பதால் ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பளித்து 2023 உலக கோப்பைக்கு முன்னர் வளர்க்க வேண்டும், டி20 போட்டிகளில் கூட அவ்வப்போது வாய்ப்பளித்தால் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு மிகசிறந்த பேக்-அப் வீரராக இவர் இருப்பார் என்பதை ரோகித் சர்மா மற்றும் இந்திய தேர்வுக் குழுவினர் உணர்வார்களா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Previous Post Next Post

Your Reaction