இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடர டிசம்பர் 8-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Photo Credits : BCCI Domestic |
இதில் தற்போது நடைபெற்று வரும் குரூப் சுற்று பிரிவில் நேற்றுடன் முதல் 2 சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று 3வது சுற்று தொடங்கியது.
அசத்தும் ருதுராஜ் கைக்வாட்:
இந்த தொடரில் மகாராஷ்டிரா இதுவரை பங்கேற்ற முதல் 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியது, அந்த 2 போட்டிகளிலும் மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் அபாரமாக விளையாடி அடுத்தடுத்த சதங்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
முதலில் மத்தியபிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 112 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட சதம் அடித்து 136 ரன்கள் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார்.
2வது சதம்:
அதை தொடர்ந்து சட்டிஸ்கர் அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியிலும் அதிரடியாக பேட்டிங் செய்த அவர் 143 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 154* ரன்கள் குவித்து மீண்டும் மகாராஷ்டிராவில் வெற்றியின் துருப்புச் சீட்டாக இருந்தார்.
இதை அடுத்து ராஜ்கோட் நகரில் இன்று துவங்கிய கேரளா அணிக்கு எதிரான ரவுண்ட் 3 போட்டியில் டாஸ் வென்ற கேரளா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஹாட்ரிக் சதம்:
இதை அடுத்து களமிறங்கிய மகாராஷ்டிராவுக்கு முரட்டு காளை போன்ற பார்மில் இருக்கும் ருதுராஜ் கைக்வாட் மீண்டும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 129 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட சதம் அடித்து 124 ரன்கள் குவித்தார்.
- இதன் வாயிலாக விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரில் அடுத்தடுத்த 3 சதங்களை விளாசி ஹாட்ரிக் சதங்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க தொடர்:
நடந்து முடிந்த ஐபிஎல் 2021 தொடரில் 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்த இவர் தொடர்ந்து மழையாய் ரன்களைக் பொழிந்து வருகிறார், இந்த வேளையில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்துக்கான ஒருநாள் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது, வரும் ஜனவரி மாதம் துவங்க இருக்கும் 3 போட்டிகள் கொண்ட அந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹாட்ரிக் சதங்களை நொறுக்கி அபார பார்மில் இருக்கும் ருதுராஜ்க்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.