இந்தியாவின் தென்ஆப்பிரிக்க டி20 தொடர் ரத்து, டி20 அடுத்து டெஸ்ட் துணை கேப்டனாகும் ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றனர், இதில் கான்பூரில் நடைபெற்ற பரபரப்பான டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய மும்பை வான்கடே மைதானத்தில் 2வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

Photo Credits : Getty Images


இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வந்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி நடைபெற்று வரும் 2வது போட்டிக்கு திரும்பியுள்ளார்.

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம்:

வரும் டிசம்பர் 7 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய கிரிக்கெட் அணியினர் அடுத்த வாரத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

மொத்தம் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியும் இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

திட்டமிட்டபடி டெஸ்ட் தொடர்:

இப்படிப்பட்ட வேளையில் தென்னாப்பிரிக்காவில் தற்போது திடீரென ஏற்பட்டுள்ள நோய் தொற்று காரணமாக இந்த சுற்றுப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது, இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகங்கள் இது பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதில் இந்த தொடர் முழுமையாக நடைபெற ஆதரவு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தென்னாப்பிரிக்காவிற்கு உறுதி அளித்துள்ளது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது, இருப்பினும் இந்த சுற்றுப் பயணத்திற்கு இந்திய வீரர்கள் தயாராகும் வண்ணம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 போட்டிகள் கொண்ட தொடராக குறைத்துக் கொள்ளுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காத தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் டி20 தொடரை வேண்டுமானால் பிறகு நடத்திக் கொள்ளலாம் என பதில் தெரிவித்தது, இதை அடுத்து வரும் டிசம்பர் 17 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி அன்று "பாக்ஸிங் டே" எனப்படும் இரண்டாவது டெஸ்ட் நடைபெற உள்ளது, இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

டி20 தொடர் ரத்து:

இருந்தபோதிலும் இந்திய வீரர்களின் நலன் கருதி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களுக்கு பின்னர் வரும் 2022 ஜனவரி 19 முதல் 26 வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருந்த 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார்.

  • ரத்து செய்யப்பட்டுள்ள இந்த டி20 தொடர் எப்போது நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மறுபுறம் மறுபுறம் ஒருநாள் தொடர் வரும் 2022 ஜனவரி 11, 14, 16 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.

ரோஹித் புதிய துணை கேப்டன்:

இந்த நிலையில் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின்போது இந்திய டெஸ்ட் அணியின் புதிய துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது, தற்போது டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் அஜிங்கிய ரஹானே காயம் மட்டுமல்லாமல் பார்ம் இல்லாமல் தவித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.

இது பற்றி பிசிசிஐயின் முக்கியமான மூத்த அதிகாரி பேசுகையில்,

தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி இன்னும் சில நாட்களில் தேர்வு செய்யப்பட உள்ளது, அப்போது ரோகித் சர்மாவை புதிய துணை கேப்டனாக நியமிக்க முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் இந்தச் சுற்றுப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறாது, இதுபற்றி தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துடன் பேசி வரும் பிசிசிஐ "பாக்ஸிங் டே" டெஸ்ட் போட்டியுடன் இந்த சுற்றுப் பயணத்தை முடிவு செய்துள்ளது

என கூறினார். ஏற்கனவே முழுநேர டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளிலும் துணை கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார்.

Previous Post Next Post

Your Reaction