ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளின் முடிவில் சொந்த மண்ணில் அபாரமாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா 2 - 0* முன்னிலை வகிக்கிறது.
Joe Root via Getty Images |
முன்னதாக பிரிஸ்பேன் நகரில் கடந்த வாரத்திற்கு முன் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து நேற்று அடிலெய்ட் நகரில் நடைபெற்று முடிந்த 2வது போட்டியில் அதிலும் ஒருபடி மேலே சென்று 275 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது.
பேட்டிங் படுமோசம்:
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை முதலில் பேட்டிங்கில் தொடக்க வீரர்களாக இருக்கும் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹமீது ஆகியோர் இலவசமாக தங்களது விக்கெட்டுகளை எதிரணிக்கு பரிசளித்து வருகிறார்கள், அடுத்து வரும் கேப்டன் ஜோ ரூட் மற்றும் டேவிட் மாலன் ஓரளவு தாக்கு பிடித்தாலும் அவர்களுக்குப் பின் இருக்கும் மிடில் ஆர்டர் பேட்டர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டுவது வழக்கமாக இருக்கிறது.
அதேபோல் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் அந்த அணியின் பவுலர்களும் திணறி வருகிறார்கள் ஆனால் சுழல் பந்து வீச்சுக்கு ஓரளவு சாதகமாக அளிக்க கூடிய அடிலெய்ட் மைதானத்தில் ஒரு சுழல் பந்துவீச்சாளர்களை கூட தேர்வு செய்யாமல் இங்கிலாந்து களம் இறங்கியது பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தியது.
மோசமான கேப்டன்ஷிப்:
இவை அனைத்தையும் தாண்டி பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் போதிலும் சரியான வீரர்களை தேர்வு செய்வது மற்றும் சரியான இடத்தில் பீல்டர்களை நிறுத்துவது போன்ற விஷயங்களில் கேப்டனாக ஜோ ரூட் படுமோசமாக செயல்பட்டு வருகிறார். இப்படி தன் மீதும் குறைகள் இருக்கும் வேளையில் ஒரு கேப்டனாக தனது அணிக்கு ஆதரவு அளிக்காத அவர் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் தோற்ற பின்னர் இங்கிலாந்து பவுலர்கள் இன்னும் தைரியத்துடன் புல்லர் லென்த் பந்துகளை வீச வேண்டுமென பந்துவீச்சாளர்கள் மீது பழியைப் போட்டார்.
இந்நிலையில் தோல்விக்கு இங்கிலாந்து பவுலர்களை குறை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார்.
எதுக்கு கேப்டன்:
இதுபற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியா பக்கத்தில் அவர்,
ஜோ ரூட் அவ்வாறு கூறியபோது நான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழ போய்விட்டேன், பந்துவீச்சில் மாற்றங்களை செய்ய வேண்டுமானால் அது யாருடைய வேலை? கேப்டனாக நீங்கள் எதற்கு இருக்கிறீர்கள். ஒரு கேப்டனாக உங்களுக்கு தேவையான பந்துகளை பவுலர்கள் வீசவில்லை என்றால் அதை வீச சொல்லாமல் களததில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஜோ ரூட் வந்து எது வேண்டுமானாலும் கூறலாம் ஆனால் ஒரு கேப்டனாக உங்களது பவுலர்கள் தேவையான இடத்தில் பந்துவீசவில்லை என்றால் அதை கணித்து சரியான இடத்தில் வீச நீங்கள்தான் சொல்ல வேண்டும், அதுதான் ஒரு நல்ல கேப்டன் சிப் ஆகும்
என கூறிய ரிக்கி பாண்டிங் ஜோ ரூட் கேப்டனாக இருப்பதால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்றால் அவர்தான் அதைக் கணித்து சரியான இடத்தில் பந்துவீச கேட்க வேண்டும் எனவும் அது தான் ஒரு நல்ல கேப்டன் செய்யக்கூடிய வேலையாக இருக்கும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரூட் இல்லைனா:
என்னை கேட்டால் களத்தில் ஜோ ரூட் இல்லாத தருணத்தில் தான் இங்கிலாந்து பவுலர்கள் அவர் விரும்பிய புல் லென்த் பந்துகளை வீசினார்கள், 4வது நாள் காலையில் களத்தில் அவர் விளையாடாத போது பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தினார், அந்தத் தருணத்தில் இங்கிலாந்து பவுலர்கள் புல் லென்த் பந்துகளை வீசினார்கள்
என இது பற்றி மேலும் தெரிவித்த ரிக்கி பாண்டிங் கூறினார். அவர் கூறுவது போல 4வது நாளில் ரூட் காயம் காரணமாக சில மணி நேரங்கள் விளையாடவில்லை அப்போது பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். அந்த சமயத்தில் இங்கிலாந்து பவுலர்கள் ஜோ ரூட் விரும்பிய புல் பந்துகளை வீசினார்கள் அதைத்தான் ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டுள்ளார்.
- மொத்தத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டும் என தோல்விக்கு பின் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறிய கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என ரிக்கி பாண்டிங் கடுமையாக சாடியுள்ளார்.
இந்த வேலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எதிராக வரும் டிசம்பர் 26 அன்று நடைபெறும் 3-வது போட்டியில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து களமிறங்க உள்ளது.