நியூஸிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது, முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மயங்க் அகர்வால் சதம் அடித்து 150 ரன்கள் குவிக்க முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது, நியூசிலாந்து சார்பில் அஜஸ் படேல் 10 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்தார்.
Photo Credits : Getty Images |
சரித்திர வெற்றி:
ஆனால் அந்த வெற்றியை நியூஸிலாந்து அணியினர் கொண்டாட முடியாத வகையில் முதல் இன்னிங்சில் வெறும் 62 ரன்களுக்கு சுருட்டிய இந்திய பவுலர்கள் அதிரடியான பதிலடி கொடுத்தனர், இதன் காரணமாக 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற போதிலும் நியூசிலாந்துக்கு பாலோ - ஆன் கொடுக்காத இந்தியா மீண்டும் பேட்டிங் செய்து 540 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்திய தரமான சுழல் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாத நியூசிலாந்து மீண்டும் 2வது இன்னிங்சில் வெறும் 167 ரன்களுக்கு சுருண்டதன் காரணமாக 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது, முன்னதாக கான்பூரில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைய இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் வாயிலாக 1 - 0 என இந்தியா தொடரை வென்றது.
- இந்த வெற்றியின் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த இந்தியா புதிய சரித்திரத்தை படைத்தது.
- அத்துடன் உலகின் நம்பர் 1 டெஸ்ட் இடத்தை மீண்டும் பிடித்து அசதியுள்ளது.
தொடர் நாயகன் ரவிச்சந்திரன் அஷ்வின்:
இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 200 ரன்களுக்கு மேல் குவித்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருதையும் இந்த தொடரில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி கலக்கிய தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்கள்.
இப்போட்டி மட்டுமல்லாது இந்த தொடர் முழுவதும் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமான சில சாதனைகளைப் படைத்துள்ளார். அந்த சாதனை பட்டியல் இதோ:
1. இந்த தொடரின் நாயகன் விருதை வென்ற அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற 2வது வீரர் என்ற அபார சாதனையை தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஜேக் காலிஸ் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார், முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள்:
- முத்தையா முரளிதரன் (இலங்கை) : 11
- ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா) : 9*
- ஜேக் காலிஸ் (தென்ஆப்பிரிக்கா) : 9
- இம்ரான் கான்/ரிச்சர்ட் ஹாட்லீ, ஷேன் வார்னே : தலா 8
2. இப்போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 2021 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
- ரவிச்சந்திரன் அஷ்வின் : 52* விக்கெட்கள்
- ஷாஹீன் அப்ரிடி : 44* விக்கெட்கள்
3. டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போல ஒரு கேலண்டர் வருடத்தில் 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அதிகமுறை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற புதிய சாதனையை முன்னாள் ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே மட்டும் ஹர்பஜன் சிங் ஆகியோரை முந்தி அஷ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.
- ரவிச்சந்திரன் அஷ்வின் : 4 முறை (2015, 2016, 2017, 2021*)
- அனில் கும்ப்ளே : 3 முறை (1999, 2004, 2006)
- ஹர்பஜன் சிங் : 3 முறை (2001, 2002, 2008)
4. மேலும் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த 4வது பவுலராக சாதித்துள்ளார்.
- ஷேன் வார்னே : 8 முறை
- முத்தையா முரளிதரன் : 6 முறை
- கிளென் மெக்ராத் : 5 முறை
- ரவிச்சந்திரன் அஷ்வின் : 4* முறை
5. இந்த தொடரில் வீழ்த்திய 14 விக்கெட்டுகளையும் சேர்த்து இந்தியாவில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 300 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், இதன் வாயிலாக இந்திய மண்ணில் 300+ டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
- அனில் கும்ப்ளே : 350 விக்கெட்கள்
- ரவிச்சந்திரன் அஷ்வின் : 300* விக்கெட்கள்
- இது மட்டுமன்றி ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து 6வது பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
6. வரலாற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற ஜாம்பவான் ரிச்சர்ட் ஹேட்லியை முந்தி அஸ்வின் புதிய வரலாற்றை எழுதியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள்:
- ரவிச்சந்திரன் அஷ்வின் : 66* விக்கெட்கள்
- ரிச்சர்ட் ஹாட்லீ : 65 விக்கெட்கள்
7. வான்கடே டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 42 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் ஹால் எடுக்காத போதிலும் 2வது மிகச் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் என்ற பெருமையைப் பெற்றார்.
- ஷேன் வார்னே : 8/24 V பாகிஸ்தான், ஷார்ஜா, 2002
- ரவிச்சந்திரன் அஸ்வின் : 8/42 V நியூஸிலாந்து, மும்பை, 2021*