லெப்ட் ஹேண்ட் பேட்டர்களை அல்வா போல அள்ளும் அஷ்வின், 2021இல் மெகா சாதனை

நியூஸிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

Photo Credits : BCCI


இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக மயங்க் அகர்வால் சதம் அடித்து 150 ரன்கள் எடுத்தார், நியூசிலாந்து சார்பில் அபாரமாக பந்துவீசிய அஜஸ் படேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

வலுவாக இந்தியா:

இதை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து எதிர்பாரா வண்ணம் இந்தியாவின் அதிரடியான பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 62 ரன்களுக்கு சுருண்டது, பின்னர் பாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்தியா 276/7 ரன்களில் டிக்ளர் செய்து நியூசிலாந்து வெற்றி பெற 540 என்ற மெகா இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதை அடுத்து பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து 3வது நாள் முடிவில் 140/5 ரன்களுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

அசத்தல் அஷ்வின்:

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழகத்தின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இன்னிங்சில் இதுவரை 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், மொத்தமாக இப்போட்டியில் 7* விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

2021 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள்:

ரவிச்சந்திரன் அஷ்வின் - 51* விக்கெட்கள்.

  1. ஷாஹீன் அப்ரிடி - 44* விக்கெட்கள்.
  2. ஹசன் அலி - 39* விக்கெட்கள்.
  3. அக்சர் படேல் - 35* விக்கெட்கள்.

அல்வா லெப்ட் ஹேண்ட்:

இப்போட்டியின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து கேப்டன் லாதமை  அவுட் செய்த ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் லாதமை அதிகமுறை அவுட் செய்த பவுலர் என்ற பெருமையை இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் உடன் பகிர்ந்து கொண்டார், இருவருமே தலா 8 முறை அவரை செய்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகமுறை அவுட் செய்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ:

  1. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 11 முறை
  2. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 10 முறை
  3. அலெஸ்டர் குக் (இங்கிலாந்து) - 9 முறை
  4. டாம் லதாம் (நியூஸிலாந்து- 8 முறை
  5. எட் கோவன் (ஆஸ்திரேலியா) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)  - தலா 7 முறை

இதில் ஆச்சரியம் என்னவெனில் மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் இடதுகை பேட்டிங் செய்ய கூடியவர்கள் ஆவர், இதிலிருந்தே இடதுகை பேட்டிங் செய்யும் வீரர்களை அவுட் செய்வது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அல்வா போன்றதாகும் என தெரிந்துகொள்ளலாம்.

இது மட்டுமல்லாமல் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடதுகை பேட்டர்களை அதிக முறை அவுட் செய்த பவுலர் என்ற ஜாம்பவான் முத்தையா முரளிதரன் சாதனை உடைத்து புதிய உலக சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction