IPL Retention 2022 : புதிய லக்னோ, அஹமதாபாத் அணிகளுக்கு கேப்டனாக கூடிய 3 நட்சத்திரங்கள்

ஐபிஎல் 2022 தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக ஏற்கனவே களத்தில் உள்ள பழைய 8 அணிகளும் விரும்பிய முக்கிய நட்சத்திர வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. ரோகித் சர்மா, எம்எஸ் தோனி, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ள அந்தந்த அணிகள் வரும் சீசனில் இவர்களை கேப்டனாகவும் நியமிக்க உள்ளது.

Photo Credits : BCCI/IPL


அதேபோல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும் இதர அணிகள் தக்கவைக்காத வீரர்களில் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது, இதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 25 எனவும் தெரிய வருகிறது.

கேப்டன்கள்:

இந்த 2 புதிய அணிகளும் தேர்வு செய்ய போகும் முதல் வீரர் நிச்சயமாக அந்த அணிகளின் கேப்டனாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் கேப்டனாக தேர்வு செய்ய தகுந்த 3 வீரர்கள் பற்றி பார்ப்போம்:

1. டேவிட் வார்னர் :

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 3 முறை ஆரஞ்சு தொப்பி 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டம் என கேப்டனாக பல அளப்பரிய சாதனைகளை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் செய்தார் ஆனால் அதையெல்லாம் மறந்து அந்த அணி நிர்வாகம் முதலில் அவரை  கேப்டன் பதவியில் இருந்து நீக்கி பின்னர் அணியில் இருந்தும் கழற்றி விட்டது.

இருப்பினும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை 2021 தொடரில் தொடர் நாயகன் விருது வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார், தற்போது ஹைதெராபாத் அணியில் இருந்து விலகியுள்ள டேவிட் வார்னர் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.

ஆனால் அதிரடியாக ரன்கள் குவிப்பதுடன் கேப்டன்ஷிப் செய்த அனுபவமும் உள்ளதால் அதற்கு முன்பாக எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுத்து லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இவரை முதல் ஆளாக வாங்கி கேப்டன் பதவியை கொடுக்க போட்டி போடும் என்பதில் சந்தேகமில்லை.

2. கேஎல் ராகுல் :

நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் பஞ்சாப் அணிக்கு 2020, 2021 ஆகிய சீசன்களில் கேப்டனாக செயல்பட்டு மலை போல் ரன்கள் குவித்த போதிலும் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை ஆனாலும் கடந்த 2 - 3 சீசன்களாக தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அபாரமான பார்மில் உள்ளார், இதன் காரணமாக மெகா ஏலத்தில் பங்கேற்று ஏற்கனவே விளையாடும் தொகையை விட அதிக தொகைக்கு விளையாட ராகுல் விரும்புகிறார்.

குறிப்பாக லக்னோ அணி நிர்வாகம் தங்கள் அணியில் எடுத்து கேப்டனாக நியமிக்க ஏற்கனவே ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பஞ்சாப் அணி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது, எனவே வரும் சீசனில் ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுவதை ரசிகர்கள் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

3. ஷ்ரேயஸ் ஐயர் :

இந்திய அணியின் வளர்ந்து வரும் வீரராக விளங்கும் ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார், நியமிக்கப்பட்ட அந்த வருடத்திலேயே நீண்ட வருடங்கள் கழித்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

தொடர்ந்து 2020 சீசனிலும் அபாரமாக கேப்டன்ஷிப் செய்த அவர் பல வருடங்கள் கழித்து டெல்லி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த வேளையில் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக காயம் அடைந்த காரணத்தால் அவருக்கு பதில் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் துபாயில் நடந்த 2021 ஐபிஎல் தொடரில் 2வது பகுதியில் காயத்திலிருந்து குணமடைந்த போதிலும் அவருக்கு கேப்டன்ஷிப் பதவி மீண்டும் கொடுக்கப்படாததால் சாதாரண வீரராக விளையாடினார், தற்போது அவரை டெல்லி அணி நிர்வாகம் தக்கவும் வைக்கவிக்கவில்லை.

இந்த வேளையில் கடந்த வாரம் கான்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் முதல் போட்டியிலேயே சதம் மற்றும் அரை சதம் அடித்துள்ளதால் அவரின் மவுசும் சற்று கூடியுள்ளது, இளம் வீரராக இருப்பதுடன் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் உள்ளதால் இவரையும் கண்டிப்பாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் விலைக்கு வாங்கி கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Previous Post Next Post

Your Reaction