ஐபிஎல் 2022 தொடருக்காக நடைபெற இருக்கும் மெகா ஏலத்திற்கு முன்பாக சென்னை, மும்பை உள்ளிட்ட ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் தக்க வைத்துள்ள வீரர்களின் முழு பட்டியலை நேற்று ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது.
Photo Credits : BCCI/IPL |
அதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 வீரர்கள் தலா 16 கோடிகளுக்கு தக்க வைக்கப்பட்டனர் மேலும் ருதுராஜ், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், உம்ரான் மாலிக் உள்ளிட்ட இளம் இந்திய வீரர்களும் பல கோடி ரூபாய்களுக்கு அந்தந்த அணி நிர்வாகங்கள் தக்க வைத்தன.
அணியின் நலன்:
இந்த வேளையில் தாங்கள் விளையாடும் ஐபிஎல் அணியின் நலன் கருதி ஒரு சில வீரர்கள் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அடிப்படை சம்பளத் தொகையை குறைத்து கொண்டுள்ளனர், அவர்களின் இந்த நல்ல எண்ணம் காரணமாக விரைவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது அந்தந்த அணிகள் குறைந்தபட்சம் ஒரு வீரரையாவது அதிகமாக வாங்குவதற்கு உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வகையில் சம்பளத்தை குறைத்துக்கொண்ட 4 வீரர்கள் பற்றி பார்ப்போம்:
1. எம்எஸ் தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்:
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி அந்த அணி தக்க வைக்கும் முதல் வீரராக இருப்பார் என ஏற்கனவே அந்த அணி நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் அறிவித்திருந்தார்.
- இருப்பினும் நேற்றைய அறிவிப்பு வெளியானபோது ரவீந்திர ஜடேஜாவை தான் சென்னை நிர்வாகம் முதல் வீரராக 16 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது,தோனியை 2வது வீரராக 12 கோடிகளுக்கு மட்டுமே தக்க வைத்து ஆச்சரியத்தைக் கொடுத்தது.
முன்னதாக கடந்த 2008 முதல் கேப்டனாக இருந்து வரும் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த அளவுக்கு வளர்வதற்கு தூணாக இருந்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, எனவே ஐபிஎல் 2022 தொடரில் சென்னை அணியை சிறந்த முறையில் கட்டமைக்கும் வண்ணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் மேலும் தற்போது 40 வயதை தொட்டுள்ளதாலும் சமீபகாலமாக பேட்டிங்கில் நல்ல பார்மில் இல்லாத காரணத்தாலும் விரைவில் ஓய்வு பெற உள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
- கடந்த வருடம் 15 கோடி ரூபாய் சம்பளத்துடன் விளையாடிய தோனி ஐபிஎல் 2022 தொடரில் 3 கோடிகளை குறைத்துக்கொண்டு 12 கோடிகளுக்கு விளையாட உள்ளார்.
2. விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008 முதல் பெங்களூரு அணிக்கு விளையாடி வரும் விராட் கோலி அந்த அணியில் நிரந்தர வீரராகவே ஆகிவிட்டார் எனக் கூறலாம், இதில் 2013 முதல் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்ட வந்த அவர் ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் 2021 தொடருடன் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த வேளையில் ஐபிஎல் 2022 தொடர் முதல் சாதாரண வீரராக விளையாட இருக்கும் அவரை பெங்களூரில் நிர்வாகம் முதல் வீரராக தக்கவைத்துள்ளது, இதுவரை 17 கோடி ரூபாய்களுக்கு விளையாடி வந்த அவர் அடுத்த சீசன் முதல் 2 கோடி ரூபாய்களை குறைத்துக்கொண்டு 15 கோடி சம்பளத்துடன் விளையாட உள்ளார்.
தனக்கு மிகவும் பிடித்த பெங்களூரு அணி அடுத்த சீசனில் மேலும் ஒரு சில வீரர்களை வாங்கும் வகையில் விராட் கோலி இந்த 2 கோடி ரூபாய்களை குறைத்துக் கொண்டு விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. கிளென் மேக்ஸ்வெல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பஞ்சாப் அணிக்காக மோசமாக விளையாடி வந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் கடந்த 2021 சீசனில் ரூபாய் 14.50 கோடிகளுக்கு பெங்களூரு நிர்வாகம் வாங்கியது, தன் மீது நம்பிக்கை வைத்த பெங்களூர் அணிக்காக அபாரமாக விளையாடிய மேக்ஸ்வெல் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மிகவும் முக்கிய பங்காற்றினார்.
கடந்த சீசனில் ஆல்-ரவுண்டராக மிகவும் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் அவரை பெங்களூர் நிர்வாகம் இந்த முறை 11 கோடிகளுக்கு தக்கவைத்துள்ளது, கடந்த சீசனை விட அடுத்த சீசனில் 3.5 கோடிகள் குறைவாக விளையாட அணியின் நலன் கருதி அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
4. சுனில் நரேன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா அணியில் கடந்த 2018 முதல் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரேன் 2021 சீசனில் 12.5 கோடிகளுக்கு விளையாடி வந்தார், கடந்த சீசன்களில் மிகச் சிறப்பாக விளையாடிய காரணத்தால் அவரை அடுத்த சீசனுக்கு அந்த அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது.
- ஆனாலும் அவரின் சம்பளம் 12.50 கோடிகளில் இருந்து 6.50 கோடிகள் குறைக்கப்பட்டு 6 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.