IND vs SA : இந்தியாவின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மாற்றம் - புதிய தேதி இதோ

இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றனர்.

Photo Credits : Getty Images


வரும் டிசம்பர் 7 ஆம் தேதியுடன் இந்த தொடர் முடிவடைய உள்ள நிலையில் அதை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தென் ஆப்பிரிக்காவிற்கு இந்திய கிரிக்கெட் அணி பயணம் மேற்கொள்வதாக இருந்தது.

அட்டவணையில் மாற்றம்:

ஆனால் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஒரு வாரமாக திடீரென நோய் தொற்று அதிகரித்ததன் காரணமாக சமீபத்தில் அங்கு நெதர்லாந்து அணி பங்கு பெற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் திடீரென பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது, இதன் காரணமாக இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இது பற்றி இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 90-வது வருடாந்திர கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது, அதில் முக்கிய முடிவாக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் பற்றி பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்ட்:

அதன்படி வரும் டிசம்பர் 17ம் தேதி தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் துவங்க இருந்த முதல் டெஸ்ட் போட்டி மாற்றப்பட்டுள்ளது, நியூசிலாந்து தொடரை முடித்துக்கொண்டு அடுத்த தொடருக்கு தயாராகும் வண்ணம் இந்திய வீரர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கும் வகையில் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி அதாவது கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளில் துவங்கும் பாரம்பரியம் மிக்க "பாக்ஸிங் டே" டெஸ்ட் போட்டியுடன் இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான 20 பேர் கொண்ட இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டி20 தொடர் ரத்து:

இந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வரும் 2022 ஜனவரி 11 ஆம் தேதியன்று துவங்க இருந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் தள்ளிப்போக உள்ளது.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் இந்திய வீரர்களின் நலன் கருதி வரும் 2022 ஜனவரி 19, 21, 23 மற்றும் 26ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, ரத்து செய்யப்பட்டுள்ள இந்த டி20 தொடர் அடுத்த வருடம் ஏதேனும் ஒரு மாதத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மொத்தத்தில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் மாற்றியமைக்கப்பட்ட புதிய முழு அட்டவணையை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post

Your Reaction