IND vs SA : டி20 தொடர் ரத்து, இந்தியாவின் புதிய தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயண அட்டவணை இதோ

நியூஸிலாந்துக்கு எதிராக இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 - 0 என கைப்பற்றி அசத்தியது, முன்னதாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது.

Photo Credits : Getty Images


அந்த 3 போட்டிகளிலும் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா 3 - 0 என வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து அசத்தியது, பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைய மும்பையில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம்:

இன்றுடன் இந்த சுற்று பயணம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியினர் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடர்களில் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக 3 டெஸ்ட் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கு பெறுவதாக இருந்தது ஆனால் தென் ஆப்பிரிக்காவில் தற்போது திடீரென ஏற்பட்டுள்ள நோய் தொற்று காரணமாக இந்திய வீரர்களின் நலன் கருதி டி20 தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

  • அந்த ரத்து செய்யப்பட்ட டி20 தொடர் அடுத்த வருடம் ஏதேனும் ஒரு மாதத்தில் நடைபெறும் எனவும் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் கூட்டாக அறிவித்தன.

மாற்றப்பட்ட அட்டவணை:

இந்நிலையில் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் மாற்றப்பட்ட புதிய அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் முக்கிய அம்சமாக டிசம்பர் 17ஆம் தேதி துவங்குவதாக இருந்த முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதை அடுத்து வரும் டிசம்பர் 26 ஆம் தேதி புகழ்பெற்ற சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளன்று நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியுடன் இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் கோலாகலமாக தொடங்க உள்ளது, அதன் பின் 2வது மற்றும் 3வது போட்டிகள் வரும் 2022 ஜனவரி 3 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஜோகனஸ்பர்க் மற்றும் கேப் டவுன் ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளன.

ஒருநாள் தொடர்:

அதை தொடர்ந்து ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் பார்ல் மற்றும் கேப் டவுன் ஆகிய மைதானங்களில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா 2021/22 சுற்றுப்பயணம் முழு அட்டவணை இதோ:

முதல் டெஸ்ட், டிசம்பர் 26 - 30, சென்சூரியன்.

2வது டெஸ்ட், ஜனவரி 3 - 7, ஜொஹானஸ்பேர்க்.

3வது டெஸ்ட், ஜனவரி 11 - 15, கேப் டவுன்.

முதல் ஒருநாள் போட்டி, ஜனவரி 19, பார்ல்.

2வது ஒருநாள் போட்டி, ஜனவரி 21, பார்ல்.

3வது ஒருநாள் போட்டி, ஜனவரி 23, கேப் டவுன்.

இந்த தொடர் ஒரு வாரத்திற்கு மேல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியினர் ஒரு வார ஓய்வுக்குப்பின் தென்னாபிரிக்காவிற்கு புறப்பட உள்ளார்கள், இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post

Your Reaction