இந்திய கிரிக்கெட் அணியினர் வரும் டிசம்பர் 26 முதல் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளனர், முதலில் இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரும் அதன் பின்னர் ஒரு நாள் தொடரும் நடைபெற உள்ளது.
அதன்பின் வரும் 2022 ஜனவரியில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
அடுத்த தொடர்கள்:
2022 ஜனவரி 23 வரை நடைபெறும் அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் இந்தியா அதன்பின் பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
அதை தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மார்ச் 2022 துவக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
ஆப்கானிஸ்தான்:
அதன் பின் வரும் மார்ச் மாத இறுதியில் இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கு பெற உள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது, வரும் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான வருடாந்த கிரிக்கெட் கால அட்டவணையை அந்த அணி நிர்வாகம் நேற்று வெளியிட்டது.
இந்த காலகட்டத்தில் மொத்தமாக 37 ஒருநாள் போட்டிகளிலும், 12 20 ஓவர் போட்டிகளிலும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, அயர்லாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
- இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக மார்ச் 2022 இல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி களமிறங்க உள்ளது.
பி டீம்:
இந்த தொடருக்கு முன்பாக தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தொடர்களில் தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே இந்த தொடரில் பங்கேற்கும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வண்ணமாகவும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு தரமான இளம் வீரர்களை கண்டறியும் வண்ணமாகவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த தொடரில் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
- குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரில் சிறப்பாக செயல்படும் அனைத்து இளம் வீரர்களும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியில் இதேபோல பல இளம் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
அதுபோலவே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த தொடருக்கும் 70% க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் அடங்கிய பி அணியை களமிறக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.