இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது.
Photo Credits : Getty Images |
அதிகபட்சமாக ஆரம்பம் முதலே இந்தியாவிற்கு நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடிய மயங்க் அகர்வால் சதம் அடித்து 150 ரன்களும் அக்சர் பட்டேல் 52 ரன்களும் எடுத்தனர், நியூசிலாந்து சார்பில் இந்தியாவின் அனைத்து 10 விக்கெட்டுகள் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் அஜஸ் படேல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்த 3வது பவுலர் என்ற உலக சாதனை படைத்தார்.
நியூஸிலாந்து 62 ஆல் அவுட்:
அஜஸ் படேல் நிகழ்த்திய உலக சாதனையை கொண்டாடி முடிப்பதற்குள் இந்தியாவின் அதிரடியான பந்துவீச்சை சமாளிக்க முடியாத நியூசிலாந்து வெறும் 62 ரன்களுக்கு சுருண்டது, இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
இதன் வாயிலாக 263 என்ற மிகப்பெரிய ரன்களை முன்னிலை பெற்றுள்ள இந்தியா நியூசிலாந்துக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 300 ரன்கள் முன்னிலையை தாண்டி விளையாடி வருகிறது.
கேப்டன் விராட் கோலி:
முன்னதாக கான்பூரில் தொடங்கிய இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இடம் பெறாத இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய பலமாக இதுவரை விளங்கி வருகிறது, பேட்டிங்கில் அவர் ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் அவரது அவரது அபாரமான கேப்டன்ஷிப் காரணமாக நியூசிலாந்தை வெறும் 62 ரன்களுக்குள் சுருட்டி ஏறத்தாழ இந்தியா வெற்றியை உறுதி செய்துள்ளது என்று கூறலாம்.
ஏனெனில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்தை சேர்ந்த ஒரு சுழற்பந்து வீச்சாளரான அஜஸ் பட்டேல் எடுத்தார், அதையே காரணமாக வைத்து சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வான்கடே மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது அக்சர் படேலை ஆரம்பத்தில் அதிகமாக பந்துவீச வைத்திருக்கலாம்.
ஆனால் அதே போல் அல்லாமல் மாற்றி யோசித்த விராட் கோலி முகமது சிராஜ்க்கு வாய்ப்பு கொடுத்து ஆரம்ப கட்டத்தில் அதிகமாக பந்து வீச வைக்க அவரும் டாம் லாதாம், வில் எங் ஆகிய கான்பூர் டெஸ்டில் கலக்கிய நியூசிலாந்து தொடக்க வீரர்களை சொற்ப ரன்களில் அவுட் செய்தார், பின்னர் அனுபவமிக்க ராஸ் டெய்லரை கிளீன் போல்டாக்கி நியூசிலாந்தை கதி கலங்கச் செய்தார், இதிலிருந்து மீள முடியாத நியூசிலாந்து இறுதிவரை இந்தியாவின் சுழலில் சிக்கி 62 ரன்களுக்கு சுருண்டது.
ட்ராவான கான்பூர் டெஸ்ட்:
இந்நிலையில் கான்பூர் டெஸ்டில் விராட் கோலி கேப்டன்ஷிப் செய்து இருந்தால் கண்டிப்பாக இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,
இந்த கேப்டன் விராட் கோலியை தான் நான் மிகவும் மிஸ் செய்தேன், முகமது சிராஜ் நியூசிலாந்து வீரர் லாதமை மிகவும் அற்புதமாக செட்டப் செய்து அவுட் செய்தார், அது பந்துவீச்சாளரின் விக்கெட் மட்டுமல்ல அதில் விராட் கோலியின் பங்கு மிகவும் அதிகமாக இருந்தது. கான்பூர் டெஸ்டில் டாம் லாதமுக்கு எதிராக இந்திய பவுலர்கள் ஒரு பவுன்சர் கூட வீசவில்லை ஆனால் வான்கடே போட்டியில் அவருக்கு லெக் சைட் பகுதியில் பீல்டர் வைத்து கனகச்சிதமாக அவுட் செய்தார், அது ஒரு மிகச்சிறப்பான கேப்டன்ஷிப் ஆகும்.
என கூறினார். கான்பூர் டெஸ்டில் 4.5 நாட்களும் அபாரமாக விளையாடிய போதிலும் கடைசி நாளின் கடைசி 1 மணி நேரத்தில் வெறும் 1 விக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா மிகச்சிறப்பான வெற்றியை நூலிழையில் கோட்டை விட்டது, ஒருவேளை அந்தப் போட்டியில் விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் என அப்போதே பல இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர், தற்போது அதையே ஆகாஷ் சோப்ராவும் கூறியுள்ளார்.
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி இலக்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும் தனது ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக பல வெற்றிகளை இந்தியாவிற்கு இதுவரை விராட் கோலி பெற்றுக் கொடுத்துள்ளார் எடுத்துக்காட்டாக இங்கிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை குறிப்பிடலாம், அதன் காரணமாகத்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி விளங்குகிறார்.