IND vs NZ 2nd டெஸ்ட் : இந்தியா - நியூஸிலாந்துக்கு ராசியான வான்கடே மைதானம் - ஒரு பார்வை

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 3ஆம் தேதி அன்று துவங்குகிறது.

Wankade Stadium, Mumbai

முன்னதாக கான்பூரில் துவங்கிய இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் மிகத் தீவிரமாக போராடிய வேளையிலும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது, குறிப்பாக 5வது நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் 1 விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்தியா வெற்றியைப் பறிகொடுத்தது.

2வது டெஸ்ட்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 2வது போட்டியை வெற்றி பெற 2 அணிகளும் தீவிரமாகப் போராட உள்ளன, ஏற்கனவே கடந்த 2020 ஆம் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவை 2 - 0 என தோல்வியை பரிசளித்த நியூசிலாந்து சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
எனவே இந்த அடுத்தடுத்த படுதோல்விகளுக்கு நாளை துவங்க இருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா பதிலடி கொடுக்குமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 
சரி இந்த போட்டியை முன்னிட்டு போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் வரலாற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுக்குமே ராசியாக உள்ளதை பற்றி பார்ப்போம்:

ராசியான வான்கடே:

உலககோப்பை 2011 பைனல் உள்ளிட்ட பல முக்கிய போட்டிகள் நடைபெற்ற புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் வரலாற்றில் இதுவரை மொத்தம் 25 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
  • அந்த 25 போட்டிகளிலும் பங்கேற்க இந்தியா 11 வெற்றிகளை பெற்றுள்ளது, 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது, 7 போட்டிகளை டிரா செய்தது.
எனவே புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மும்பை வான்கடே மைதானம் இந்தியாவிற்கு ராசியான ஒன்றாகவே இருந்து வருகிறது, அதேபோல் இந்த மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 2 போட்டிகளில் பங்கேற்று உள்ளது, அதில் 1 வெற்றியையும் 1 தோல்வியையும் பதிவு செய்தது.

நியூஸிலாந்துக்கும் ராசியே:

இம்மைதானத்தில் 1976 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவை நியூசிலாந்து எதிர்கொண்டது, இதில் 1976இல் நடந்த முதல் போட்டியில் 162 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நியூசிலாந்து கடைசியாக கடந்த 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • இந்த வெற்றியானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மண்ணில் நியூசிலாந்து பதிவு செய்த 2 வெற்றிகளில் ஒன்றாகும், இந்த வெற்றி தான் கடைசியாக இந்திய மண்ணில் நியூஸிலாந்து பதிவு செய்த வெற்றியாகும்.
இருப்பினும் அதன்பின் 33 வருடங்களாக அந்த அணியால் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. 

அதிக ரன்கள்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் வான்கடே மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் இதோ:
  1. சுனில் கவாஸ்கர் - 1122 ரன்கள்
  2. சச்சின் டெண்டுல்கர் - 921 ரன்கள்
  3. திலிப் வெங்சர்க்கார் - 631 ரன்கள்
  4. ராகுல் டிராவிட் - 619 ரன்கள்

அதிக விக்கெட்கள்:

இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியல் இதோ:
  1. அனில் கும்ப்ளே - 38 விக்கெட்கள்.
  2. ரவிச்சந்திரன் அஷ்வின் - 30 விக்கெட்கள்.
  3. கபில் தேவ் - 28 விக்கெட்கள்.
  4. ஹர்பஜன் சிங் - 24 விக்கெட்கள்.
Previous Post Next Post

Your Reaction