ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இன்று நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் 275 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 0* என சொந்த மண்ணில் முன்னிலை பெற்று அசத்தி வருகிறது.
Photo Credits : Getty Images |
கடந்த வாரம் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் மோசமாக விளையாடிய இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது, அதைத்தொடர்ந்து அடிலெய்ட் நகரில் நடைபெற்று வந்த 2வது போட்டியிலும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அதைவிட பெரிய தோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
தனி ஒருவன் ஜோ ரூட்:
இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தாலும் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டும் வழக்கம்போல தனி ஒருவனாக அந்த அணியை தாங்கி பிடித்து வருகிறார், முதல் டெஸ்டில் 89 ரன்கள் விளாசிய அவர் 2வது டெஸ்டில் 86 ரன்கள் குவித்தார்.
- இது மட்டுமல்லாமல் 2021 ஆம் ஆண்டில் இதுவரை 1606 ரன்களை குவித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த 4வது வீரர் என்ற இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இப்படி ரன் மழை பொழிந்து வரும் போதிலும் அவர் தலைமை வகிக்கும் இங்கிலாந்து அணி இந்த வருடம் பெரிய அளவில் டெஸ்ட் வெற்றிகளை குவிக்க தடுமாறி வருகிறது, குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே இங்கிலாந்து அணி படுமோசமாக விளையாடி வருகிறது.
அபராதம்:
மேலும் பிரிஸ்பேன் நகரில் நடந்த முதல் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து அணியினர் மெதுவாக பந்து வீசினர், இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்துக்கு அபராதமாக ஏற்கனவே பெற்றுள்ள புள்ளிகளில் 5 புள்ளிகள் கழிக்கப்பட்டு 100% சம்பளத்தையும் அபராதமாக விதித்து ஐசிசி அதிரடி காட்டியது.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் மோசமான கேப்டன்ஷிப் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறலாம். இந்த நிலையில் ஜோ ரூட் ஒரு மிக மோசமான கேப்டன் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் இயன் சாப்பல் வெளிப்படையாகவே விமர்சனம் செய்துள்ளார்.
மோசமான கேப்டன்:
இதுபற்றி பிரபல இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையதளத்தில் அவர்:
ஜோ ரூட் ஒரு மிகசிறந்த பேட்டர் ஆனால் மோசமான கேப்டன், அவரை அதிர்ஷ்டம் இல்லாத ஒரு சுமாரான கேப்டன் என குறிப்பிடுவது நியாயமற்றது என கூற முடியாது. நீண்டகால கேப்டனாக இருப்பவர் கற்பனையில் தடுமாறினாலும் அதிர்ஷ்டதுடன் இருப்பர், ஒரு கேப்டன் எப்போதுமே அதிர்ஷ்டம் உள்ளவர் ஏனெனில் அவர் தலைமையில் விளையாடுபவர்கள் அணிக்காக அவர் ஏதோ மிராக்கிள் நிகழ்த்துவார் என நம்புவார்கள்.
ரூட் எப்போதும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய கேப்டனாக இல்லை, இதை பல முறை வெற்றிக்கான தருணத்தில் இருந்தபோதிலும் அதை அவரின் அணி பினிஷிங் செய்ய முடியாமல் போனதை வைத்து காட்டுகிறது. பிரிஸ்பேன் நகரில் 425 ரன்கள் வாரி வழங்கி செய்த தவறை அடிலெய்ட் நகரில் 9 விக்கெட்டுகள் எடுத்த போதிலும் 473 ரன்களை வாரி வழங்கி மீண்டும் அதே தவறை செய்தார், அதேபோல் பீல்டர்களை தவறான இடத்தில் நிறுத்துவதும் அவரின் மோசமான கேப்டன்ஷிப்பை காட்டுகிறது.
என குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுவது போல மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் மழை பொழியும் ஜோ ரூட் கேப்டனாக சிறப்பாக சிறப்பாக செயல்பட தவறி வருவதாலேயே இங்கிலாந்து அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது.
- குறிப்பாக பிரிஸ்பேன் நகரில் நடந்த முதல் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிந்த பின்னும் டாஸ் வென்ற பின் பேட்டிங் தேர்வு செய்யாமல் பீல்டிங் தேர்வு செய்தது அவரின் தவறான கேப்டன்ஷிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இதனால் பல இங்கிலாந்து ரசிகர்கள் ஜோ ரூட்டை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே 2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல முடியும் இல்லையேல் 2003 போல 20 வருடங்களுக்குப்பின் மீண்டும் ஆஷஸ் கோப்பையை கோட்டை விட நேரிடும் என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த வேளையில் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.