காரணமின்றி கழட்டிவிட்ட பிசிசிஐ ! பேட்டால் பதிலடி கொடுத்த ஹனுமா விஹாரி - இந்திய அணியில் மீண்டும் இடம்

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது.
Photo Credits : BCCI

முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி தலைமையில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது.

கழட்டிவிடப்பட்ட விஹாரி:

இந்த தொடரில் ஹனுமா விஹாரி கடுமையான போராட்டத்திற்குப் பின்பு மீண்டும் இடம் பிடித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அளிக்கிறது, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார்.

அந்த தொடரில் சிட்னி நகரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியா தோற்கும் நிலைக்கு சென்றது, அப்போது தசைப்பிடிப்பால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவதிப்பட்ட ஹனுமா விஹாரி அதையும் பொருட்படுத்தாமல் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்யுடன் இணைந்து கடுமையாகப் போராடி ட்ரா செய்ய உதவினார், குறிப்பாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வீசிய அதிரடி வேகப்பந்துகளை விகாரியும் - அஸ்வினும் உடம்பில் வாங்கிய போதிலும் விக்கெட் கொடுக்காமல் இந்தியாவை காப்பாற்றியது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மீண்ட விஹாரி:

அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட காயத்தால் ஏறக்குறைய6 மாதங்களுக்கு மேல் அவதிப்பட்ட அவர் இறுதியில் அதிலிருந்து குணமடைந்தார், இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன் சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

எவ்வித காரணமும் இல்லாமல் அவர் கழற்றி விடப்பட்டது இந்திய ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பாக ஹர்ஷா போக்லே இது பற்றி வெளிப்படையாகவே தனது டுவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார்.

பேட்டால் பதிலடி:

இந்த கடும் எதிர்ப்புக்கு பதில் சொல்ல முடியாத பிசிசிஐ கடந்த நவம்பர் 23 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா ஏ அணி பங்கேற்ற தலா 4 நாட்கள் அடங்கிய 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விகாரியின் பெயரை சேர்த்து தப்பித்தது.

பொன் போல கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திய விஹாரி தனக்கே உரித்தான பாணியில் பொறுமையாகவும் நிதானத்துடனும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார், ப்ளூம்போய்ட்டன் நகரில் நடந்த தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அந்த 3 போட்டிகளில் முறையே 25 (53), 54 (164), 72* (116), 63 (170), 13* (15) என 5 இன்னிங்ஸ்ஸில் 3 அரை சதங்கள் உட்பட 227 ரன்களை எடுத்து அசத்தினார், இறுதியில் அந்த 3 போட்டிகளும் டிராவில் முடிந்தன.

மீண்டும் இடம்:

இப்படி காரணமே இல்லாமல் கழட்டிவிட்ட போதிலும் பேட்டால் பேசி பதிலடி கொடுத்த காரணத்தால் ஹனுமா விஹாரியின் பெயரை தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய தேர்வு குழு சேர்த்துள்ளது.
  • தொடர் நடைபெறும் தென்னாப்பிரிக்க மண்ணில் சிறப்பாக செயல் பட்டதன் காரணமாக விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் நேரடியாக இடம் பிடிக்கவும் அதிகமாக வாய்ப்புள்ளது.
Previous Post Next Post

Your Reaction