தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது, வரும் டிசம்பர் 26 முதல் துவங்க இருக்கும் இந்த தொடருக்காக இந்திய அணியினர் ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Photo Credits : BCCI |
இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் சாய்த்து டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணியினர் போராட உள்ளனர்.
பேட்டிங் மோசம்:
இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் இந்திய ரசிகர்களுக்கு பெரிய கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது ஏனெனில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட முக்கிய வீரர் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
அத்துடன் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுபவ வீரர்களாக இருக்கும் செட்ஸ்வர் புஜரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் படுமோசமான பார்மில் இருந்து வருகின்றனர், இதில் ரகானேவுக்கு காயம் காரணமாக முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்:
அவரை போலவே படுமோசமான பார்மில் இருக்கும் மற்றொரு அனுபவ வீரர் புஜாராவுக்கு அவரின் அனுபவத்தை மதித்து கடைசியாக ஒரு வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது, ராகுல் டிராவிட்க்கு அவர் அளவுக்கு இல்லை என்றாலும் அவர் போலவே எதிரணியின் பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளை பொறுமையுடன் நிதானத்துடன் எதிர் கொண்டு அவர்களை களைப்படையச் செய்து அதன் பின்னர் ரன்களை குவித்து வெற்றியைத் தேடித் தருவதில் வல்லவராக இருந்து வருகிறார்.
இவரின் பொறுமையான ஆட்டம் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி வாய்ப்பை முற்றிலுமாக பறித்தாலும் ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர் என்ற கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, அதே பொறுமையான ஆட்டத்தை வைத்து 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் புஜாரா மிகவும் சிறப்பாக விளையாடினார்.
- அந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அவர் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து 70 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
திணறும் புஜாரா:
ஆனால் சமீப காலமாக அதே பொறுமையான ஆட்டத்தை அதிகப்படியாக நம்பும் புஜாரா கடந்த 2 வருடங்களாக மிக மோசமாக விளையாடி வருகிறார், பொறுமையாக விளையாடி ரன்கள் குவித்தால் போதும் என நினைக்கும் அவர் சிங்கிள் கூட எடுக்கத் தவறுவதால் 100 பந்துகளை சந்தித்து திடீரென சொற்ப ரன்களில் அவுட் ஆவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
- குறிப்பாக கடந்த 17 டெஸ்ட் போட்டிகளில் 849 ரன்களை 27.39 என்ற மிக மோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார், கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
கடைசி வாய்ப்பு:
இதனால் நியூசிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த டெஸ்ட் தொடரிலேயே அவரின் வாய்ப்பு பறிபோக இருந்தது, இருப்பினும் அவரின் அனுபவமே அவரை காப்பாற்றி வருகிறது.
இந்த வேளையில் வரும் டிசம்பர் 26 அன்று துவங்க இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் கண்டிப்பாக ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, எப்போதுமே அனுபவமான வீரர்கள் முக்கியமான தருணங்களில் ரன்கள் அடித்து தங்கள் பார்வையை மீட்டெடுப்பதுடன் அணியையும் வெற்றி பெறச் செய்ததை பலமுறை வரலாற்றில் பார்த்துள்ளோம்.
அதேபோல் இந்த முக்கியமான தொடரில் அவர் மீண்டு எழுந்து தனது பழைய பார்மை மீட்டெடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது, பல இளம் வீரர்கள் வரிசையில் காத்திருக்கும் இந்த தருணத்தில் ஒருவேளை இந்த கடைசி வாய்ப்பை அவர் பயன்படுத்தத் தவறும் பட்சத்தில் அவரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.