Ashes 2021 : அனல் பறக்கப்போகும் ஆஷஸ் - வரலாறு, புள்ளிவிவரம், முழு அட்டவணை, எதில் பார்க்கலாம்

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது, ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் காலம் காலமாக மோதி வரும் இந்த புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரானது ஒரு சாதாரண கிரிக்கெட் தொடர் என்பதையும் தாண்டி இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய கௌரவமாகும்.

Photo Credits : Getty Images


இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை போல இந்த ஆஷஸ் தொடரில் வெற்றிக்காக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது முழு திறமையுடன் களத்தில் இறங்கி ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் உலகம் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தத் தொடர் மிகவும் புகழ் பெற்றுள்ளது.

வரலாறு:

கடந்த 1882 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் இங்கிலாந்து மண்ணை கவ்வி படுதோல்வி அடைந்தது, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இங்கிலாந்தின் பிரபல ஸ்போர்ட்டிங் டைம்ஸ் "இங்கிலாந்து கிரிக்கெட் இறந்து விட்டது, அதன் எரிக்கப்பட்ட சாம்பலை ஆஸ்திரேலியா தங்கள் நாட்டுக்கு எடுத்து சென்றது" என பகிரங்கமாக செய்தி வெளியிட்டது.

அதனால் கொதித்தெழுந்த இங்கிலாந்து அணியினர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அவர்களை வீழ்த்தி அதே சாம்பலை மீண்டும் இங்கிலாந்துக்கு கொண்டு வருவதாக தகவல் அளித்துவிட்டு ஆஸ்திரேலியா சென்றனர், அன்று சாம்பல் எனப்படும் ஆஷஸ் என்ற வார்த்தையில் தொடங்கியது தான் இந்த புகழ்பெற்ற ஆஷஸ் தொடராகும். 

  • கடந்த 1882 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கிய இத்தொடர் 100 ஆண்டுகளுக்கு மேலாக உலகிலேயே இன்றும் விளையாடப்படும் மிகவும் பழமையான கிரிக்கெட் தொடர் ஆகும்.

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடைபெறும் இந்த ஆஷஸ் தொடர் கடைசியாக இங்கிலாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது, அந்த தொடர் 2 - 2 என சமனில் முடிவடைய ஏற்கனவே அதற்கு முந்தைய தொடரின் கோப்பையை வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

எனவே தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் 2021/22 தொடரை வென்று ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைக்க ஆஸ்திரேலியாவும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் கோப்பையை மீண்டும் நாட்டிற்கு எடுத்துச் செல்ல இங்கிலாந்தும் போராட உள்ளன.

அட்டவணை:

ஆஷஸ் தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெர்த் நகரில் நடைபெறுவதாக இருந்த 5வது போட்டி அங்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான நடத்தை நெறிமுறைகள் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது, அந்தப் போட்டி எங்கு நடைபெற உள்ளது என விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

முழு அட்டவணை இதோ:

முதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா V இங்கிலாந்து, அதிகாலை 5.30 மணி, டிசம்பர் 8 - 12, காபா, பிரிஸ்பேன்.

2வது டெஸ்ட், ஆஸ்திரேலியா V இங்கிலாந்து, காலை 9.30 மணி, டிசம்பர் 16 - 20, அடிலெய்டு.

3வது டெஸ்ட், ஆஸ்திரேலியா V இங்கிலாந்து, அதிகாலை 5 மணி, டிசம்பர் 26 - 30, மெல்போர்ன்.

4வது டெஸ்ட், ஆஸ்திரேலியா V இங்கிலாந்து, அதிகாலை 5 மணி, ஜனவரி 5 - 9, சிட்னி.

5வது டெஸ்ட் ஆஸ்திரேலியா V இங்கிலாந்து, காலை 8 மணி, ஜனவரி 18 - 22, ஹோபார்ட்.

இந்த ஆஷஸ் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 - 23 கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற உள்ளது முக்கிய அம்சமாகும்.

புள்ளிவிவரம்:

வரலாற்றில் நடைபெற்ற ஆஷஸ் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இதுவரை மொத்தம் 335 போட்டிகளில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

  • அதில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 136 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, இங்கிலாந்தில் 108 போட்டிகளில் வென்றுள்ளது, 91 போட்டிகள் டிராவில் முடிந்தன.
  • தொடர்கள் அடிப்படையில் வரலாற்றில் இதுவரை மொத்தம் 71 ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் நடைபெற்றுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 33 தொடர்களை வெற்றி பெற்றுள்ளது, இங்கிலாந்து 32 தொடர்களை வென்றுள்ளது, 6 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன.

எதில் பார்க்கலாம்:

இந்த சிறப்புமிக்க ஆஷஸ் தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் சோனி சிக்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.  

Previous Post Next Post

Your Reaction