T20 World Cup 2021 : நப்பாசை, இந்தியா அரை இறுதிக்கு செல்ல நிகழ வேண்டியது, ஆப்கானிஸ்தான் கை கொடுக்குமா

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Photo : Getty Images


முன்னதாக உலகக்கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக களமிறங்கிய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இந்தியா அரையிறுதி வாய்ப்பை பெருமளவு இழந்தது.

சரவெடி பேட்டிங்:

அரை இறுதிக்கு செல்ல வேண்டுமானால் மீதமிருக்கும் 3 போட்டிகளில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சரவெடியாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 210/2 ரன்கள் குவித்து அசத்தியது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அம்பியாக இருந்த இந்தியாவின் பேட்டிங் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று அன்னியனாக மாறி அதிரடியாக விளையாடிய "இந்த உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அமர்க்களப்படுத்தியது", குறிப்பாக தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

  • இதன் வாயிலாக டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையையும் இந்த ஜோடி படைத்தது.

ரோஹித் சர்மா 74 ரன்கள் ராகுல் 69 ரன்களும் எடுத்து அவுட் ஆன பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 27* ரன்கள்,  ஹர்திக் பாண்டியா வெறும் 13 பந்துகளில் 35* ரன்களும் எடுத்து அபாரமான பினிஷிங் செய்தார்கள்.

ஒருவழியா வெற்றி :

பின் 211 என்ற மெகா இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 144/7 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் 2 தொடர் தோல்விகளுக்குப் பின்னர் ஒரு வெற்றியை பதிவு செய்த இந்தியா நிம்மதி பெற்றது.

  • ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜானத் 42 ரன்களும், கேப்டன் நபி 35 ரன்களும் எடுத்தனர்.
  • இந்தியா சார்பில் பந்துவீச்சில் அசத்திய முகமது சமி 3 விக்கெட்டுகளும் 4 வருடங்களுக்கு பின்னர் களமிறங்கிய தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சிறிய ஆசை:

நேற்றைய போட்டியில் 66 ரன்கள் என்ற சற்று மிகப்பெரிய அளவிலான வெற்றியை இந்தியா பதிவு செய்ததால் 2 புள்ளிகளுடன் - 1.609 ஆக இருந்த ரன்ரேட் தற்போது + 0.073 என்ற நல்ல நிலைமைக்கு மாறியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஆசையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அடுத்த 2 போட்டிகளில் இதேபோல இந்தியா சற்று மிகப்பெரிய அளவிலான வெற்றிகளைப் பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா என பல ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள்.

உண்மையிலேயே அது சாத்தியமா ஒருவேளை இந்தியா அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால் அடுத்து வரும் நாட்களில் என்ன நிகழ வேண்டும் என்ற புள்ளி விவரங்கள் இதோ:

1. 2 பெரிய வெற்றிகள் :

முதலில் வரும் நவம்பர் 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்தியா எதிர்கொள்ள இருக்கும் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்ய வேண்டும், அப்போதுதான் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை விட இந்தியாவின் நெட் ரன்ரேட் அதிகமாகி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

  • இன்னும் சொல்லப்போனால் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய 2 அணிகளுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் குறைந்த பட்சம் 56 - 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.
  • ஒருவேளை சேசிங் செய்தால் 13 ஓவர்களுக்குள் இலக்கை துரத்தி வெற்றிபெற வேண்டும்.

2. கை கொடுக்குமா ஆப்கானிஸ்தான்:

இந்த உலக கோப்பையின் அரையிறுதிக்கு செல்வதற்கு இந்தியா எதிரணியின் கையை எதிர்பார்ப்பது ரசிகர்களுக்கு வேதனையாக இருக்கிறது என முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஏற்கனவே கூறியுள்ளார்.

  • இருப்பினும் என்ன செய்வது என்ற வகையில் வரும் நவம்பர் 7ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

அந்த வெற்றி வெறும் 1 ரன் அல்லது 1 விக்கெட் வித்தியாசம் என எவ்வளவு மிகச்சிறிய வெற்றியாக இருந்தாலும் கூட பரவாயில்லை, நியூசிலாந்து போன்ற மிகப்பெரிய அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்துமா என்பது சந்தேகமே.

3. நமீபியா :

ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிராக நாளை அதாவது நவம்பர் 5ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நமீபியா வெற்றிபெற்றால் வரும் 7-ம் தேதி நியூசிலாந்திடம் ஆப்கானிஸ்தான் தோற்றாலும் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு நிச்சயமாகும் ஆனால் நியூசிலாந்து போன்ற வலுவான அணியை நமிபியா போன்ற கத்து குட்டி வெல்வது சாத்தியமற்றது.

மேலும் ஒருவேளை நமீபியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 7ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து தோற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

இந்த வாய்ப்பும் கனகச்சிதமாக நிகழ்ந்தால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் ஒரு சிறிய அளவில் மாற்றம் நிகழ்ந்தால் கூட இந்தியாவின் உலகக்கோப்பை கனவு பறிபோய்விடும்.

Previous Post Next Post

Your Reaction