துபாயில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரில் சூப்பர் 12 சுற்றில் களமிறங்கிய முதல் 2 போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது, முதலில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்தியா நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் மண்ணை கவ்வியது.
Photo Credits : APF |
கேள்வியான அரைஇறுதி:
இந்த அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக இந்த உலக கோப்பையின் அடுத்த சுற்றான அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இந்தியாவிற்கு மிகவும் குறைந்து கேள்வி குறியாகியுள்ளது.
தற்போதைய நிலைமையில் எஞ்சியிருக்கும் 3 சூப்பர் 12 போட்டிகளில் வெற்றி பெற்றாலும்கூட அரையிறுதி சுற்றுக்கு செல்ல மற்ற கத்துக்குட்டி அணிகளின் கையை எதிர்பார்க்க வேண்டிய பரிதாப நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதை பற்றி படிக்க 👇
உலக கோப்பை T20 World Cup 2021 : 2 தோல்விகள், இந்தியா அரைஇறுதிக்கு செல்ல நிகழ வேண்டிய மிராக்கிள் இதோ
என்ன காரணம்:
விளையாட்டில் தோல்விகள் என்பது சகஜமான ஒன்று, இருப்பினும் தோல்விக்கும் படு தோல்விக்கும் வித்தியாசம் உள்ளது. அதே சமயம் பல தரமான வீரர்களை வைத்துள்ள ஒரு டாப் அணி படு மோசமாக தோல்வியுற்றால் அதற்கு நிச்சயமாக பல காரணங்கள் இருக்கக்கூடும்.
அதைப்பற்றி பார்ப்போம்:
1. பயிற்சி போட்டிகள் & ஐபிஎல் :
முதலில் இந்த உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பாக அதற்கு தயாராகும் வண்ணம் பிசிசிஐ எத்தனை 20 ஓவர் தொடர்களை நடத்தியது என பார்த்தால் ஒன்று கூட இல்லை ஆம் இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ் போன்ற இதர அணிகள் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றன.
ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவோ இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது, அது முடிந்த கையோடு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.
- இதிலிருந்து உலகக் கோப்பைக்கு தயாராக ஐபிஎல் தொடர் போதுமானது என பிசிசிஐ நினைத்தது தெள்ளத் தெளிவாகிறது, இதுதான் தொடர் தோல்விகளுக்கு வித்திட்ட முதல் படியாகும்.
2. தவறான அணி தேர்வு :
டி20 கிரிக்கெட்டில் வீரர்களின் தற்போதைய பார்ம் மிகவும் முக்கியமானது ஆனால் இந்த உலகக் கோப்பைக்கு இந்திய அணி அதை மையமாக வைத்து தேர்வு செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும்.
எடுத்துக்காட்டாக சமீப காலமாக நல்ல பார்மில் இருக்கும் தீபக் சகாரை கழட்டி விட்டுவிட்டு சமீபகாலமாக சரியான பார்மில் இல்லாத புவனேஸ்வர் குமார் எதற்காக அணியில் தேர்வு செய்யப்பட்டார் என தெரியவில்லை, அவர் ஐபிஎல் 2021 தொடரில் வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் உள்ளார்.
அதேபோல் அனைவரும் எதிர்பார்த்த யூஸ்வென்ற சஹால் கழட்டி விட்டுவிட்டு உலக கோப்பை நடைபெறும் துபாய் மைதானத்தில் சற்று அதிகமான வேகத்தில் சுழல் பந்து வீச கூடிய நல்ல பார்மில் இல்லாத ராகுல் சகரை தேர்வு செய்தனர்.
சரி ஐபிஎல் தொடரை மையமாக வைத்து தேர்வு செய்திருந்தால் துபாய் மண்ணில் பட்டையை கிளப்பி ஆரஞ்சு தொப்பியை வென்ற சென்னை அணிக்காக விளையாடிய ருத்ராஜை தேர்வு செய்திருக்க வேண்டுமல்லவா அதையும் செய்யவில்லை.
3. பாரமாய் ஹர்டிக் பாண்டியா :
2019 உலகக் கோப்பைக்கு பின்னர் காயமடைந்த ஹர்திக் பாண்டியா கடந்த சில வருடங்களாக அணியில் இருந்து விலகி இருந்தார், காயத்தில் இருந்து மீண்ட போதிலும் அவர் சமீபகாலங்களாக பந்து வீசவில்லை ஆனால் பெரிய பெயர் என்பதால் நேரடியாக டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்துவிட்டனர்.
- ஐபிஎல் 2021 தொடரில் ஹர்திக் பாண்டியா பந்துவீச தொடங்குவார் என அவரை தேர்வு செய்தது பற்றி தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்தார் ஆனால் ஐபிஎல் 2021 தொடரில் பாண்டியா ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.
"டி20 உலக கோப்பையில் பந்து வீசுவார்" என்பதற்காகத்தான் ஐபிஎல் தொடரில் பந்து வீசவில்லை என மும்பையின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார் ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியிலும் அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை.
அப்போது "பாண்டியாவை ஒரு பேட்ஸ்மேனாக உபயோகிக்க உள்ளோம்" என கேப்டன் விராட் கோலி ஆதரவு அளித்தார் ஆனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 11 பந்துகளில் 8 ரன்கள் நியூசிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் 23 ரன்கள் என பேட்டிங்கிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இவரை நம்பி ஷர்டுல் தாக்கூர், அக்சர் படேல் போன்ற நல்ல பார்மில் இருக்கும் ஆல் ரவுண்டர்களையும் இந்தியா உபயோகபடுத்த தவறிவிட்டது, மொத்தத்தில் காயம் பற்றி தெளிவாக கேட்டறியாத தேர்வு குழுவும் அது பற்றி தெரிந்தும் சரியான முடிவை எடுக்க தவறிய அணி நிர்வாகமும் ஹர்திக் பாண்டியா அவை ஒரு பாரமாக மாற்றிவிட்டார்கள்.
4. கட்டுப்பாட்டு வளையம் :
கடந்த பல மாதங்களாக தொடர்ந்து கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருப்பதால் அது மனதளவிலும் உடலளவிலும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது
என நேற்றைய போட்டியின் முடிவில் ஜஸ்பிரித் பும்ரா வெளிப்படையாகவே கூறினார்.
இதற்கு யார் பொறுப்பு? பிசிசிஐ மற்றும் ஐபிஎல் தான் பொறுப்பு.
ஆம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்ததும் எப்படியாவது எஞ்சிய ஐபிஎல் தொடரை நடத்தி பல ஆயிரம் கோடிகளை கண்ணில் பார்க்க வேண்டும் என அக்கறை காட்டிய பிசிசிஐ உலக கோப்பைக்கு தயாராக முக்கியமான இந்திய வீரர்களுக்கு சில கால இடைவேளை கொடுக்க வேண்டும் என்பதை பற்றி கவலைப்படவே இல்லை.
- கிரிக்கெட் வீரர்களும் மனிதர்களே, மெஷின்கள் அல்ல என்பதை பிசிசிஐ உணர வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக பார்க்காமல் பிசிசிஐ ஒரு வியாபாரமாக பார்ப்பது அம்பலமாகிறது.
5. தொலைக்காட்சி & டிக்கெட் வசூல் :
இந்த உலக கோப்பையில் டாஸ் என்பது வெற்றியை 90% தீர்மானிப்பதை பார்த்து வருகிறோம், குறிப்பாக இரவு நேர போட்டிகளில் சேசிங் செய்தால் மட்டுமே வெற்றி என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த உலக கோப்பையில் இந்தியாவின் போட்டிகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.
- இதற்கு காரணம் அப்போது தான் இந்தியாவில் இருக்கும் அனைவரும் போட்டியை பார்ப்பார்கள் அதனால் தொலைக்காட்சி வருமானத்தை இரட்டிப்பாக்கலாம் என்பது ஒன்றாகும்.
மற்றொன்று இந்தியாவின் 5 சூப்பர் 12 போட்டிகளில் 4 போட்டிகள் துபாயில் நடைபெறுகின்றன, ஒரு போட்டி மட்டும் அபுதாபியில் நடைபெறுகிறது.
- இதன் காரணம் என்னவெனில் இந்தியாவின் போட்டிகளை அளவில் பெரியதாக இருக்கும் துபாய் மைதானத்தில் நடத்தினால் மட்டுமே அதிக ரசிகர்கள் வருவார்கள் அப்போதுதான் டிக்கெட் வாயிலாக பணமும் அதிகமாக கிடைக்கும் என்ற பிசிசிஐ எண்ணத்தை பிரதிபலிக்கிறது.
இந்த குற்றச்சாட்டை பிசிசிஐ இல்லை என்று கண்டிப்பாக மறுக்க முடியாது ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற இதர அணிகள் குறைந்தபட்சம் ஒரு 3.30 மணி மதியநேர போட்டியில் விளையாடுவது சாட்சியாகும்.
திருந்துமா பிசிசிஐ :
இது மட்டுமல்லாமல் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாவை 3-வது இடத்தில் களம் இறக்கியது உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளில் அசத்திய அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்காதது போன்ற மேலும் சில காரணங்களை அடுக்கலாம்.
இருப்பினும் இவை அனைத்தையும் விட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐக்கு இந்திய கிரிக்கெட்டை விட ஐபிஎல் மீதும் அதில் கிடைக்கும் பணம் மீதும் தான் அதிக அக்கறை உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.