இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பையின் 2021/22 சீசன் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் கோப்பைக்காக நடப்புச் சாம்பியன் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் மொத்தம் 149 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
Photo Credits : BCCI Domestic |
லீக் சுற்று :
இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு கிரிக்கெட் அணி எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்தது, இதையடுத்து துவங்கிய லீக் சுற்றில் ருத்ராஜ் கைக்வாட் தலைமையிலான மகாராஷ்டிராவை தனது முதல் போட்டியில் வீழ்த்திய தமிழ்நாடு 2வது போட்டியில் ஒடிசாவை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
பின் பக்கத்து ஊரான பாண்டிச்சேரிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த போதிலும் 4வது போட்டியில் கோவாவுக்கு எதிராக தோல்வி அடைந்தது.
கடைசியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற தனது கடைசி லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 4வது வெற்றியை பதிவு செய்தது, இந்த 4 வெற்றிகள் வாயிலாக எலைட் குரூப் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியது.
கேரளாவுடன் காலிறுதி:
இதை அடுத்து தலைநகர் டெல்லியில் இன்று துவங்கிய இந்த டி20 கோப்பையின் காலிறுதி சுற்றில் அண்டை மாநிலமான சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரளாவை தமிழ்நாடு எதிர்கொண்டது, டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய கேரளாவிற்கு தொடக்க வீரர் அசாருதீன் 15 ரன்களில் முருகன் அஸ்வின் வீசிய பந்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார், மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் கண்ணும்மாள் 43 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விஷ்ணு வினோத் அதிரடி:
அவருடன் அடுத்ததாக களமிறங்கிய சச்சின் பேபி 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார், இதனால் 13 ஓவர்களில் 91/3 என கேரளா தடுமாறியபோது களமிறங்கிய விஷ்ணு வினோத் அதிரடியாக விளையாடி வெறும் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 7 மேக் ஆசிரியர்கள் உட்பட அரைசதம் அடித்து 65* ரன்கள் எடுத்து அபார பினிஷிங் செய்தார்.
- இதன் காரணமாக 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்த கேரளா 181 ரன்கள் குவித்து அசத்தியது, தமிழ்நாடு சார்பில் முகம்மது 2 விக்கெட்டுகளும் முருகன் அஸ்வின் மற்றும் சந்தை யாதவ் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர்.
தமிழ்நாடு சூப்பர் பேட்டிங் :
இதை தொடர்ந்து 182 என்ற கடினமான இலக்கை துரத்திய தமிழ்நாடுக்கு நட்சத்திர வீரர் ஜெகதீசன் 7 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார் இருப்பினும் மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஹரி நிசாந்த் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய இளம் வீரர் சாய் சுதர்சன் 31 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 46 ரன்களும் கேப்டன் விஜய் சங்கர் 26 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து 16.2 ஓவர்களில் தமிழ்நாடு 145/4 என்ற நிலையில் வெற்றியை உறுதி படுத்தி அவுட் ஆனார்கள்.
தமிழ்நாடு வெற்றி:
இறுதியில் சஞ்சய் யாதவ் 22 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்த சாருக்கான் வெறும் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 19* ரன்கள் விளாசி அபார பினிஷிங் செய்து தமிழ் நாட்டை வெற்றிபெறச் செய்தார்.
இதன் வாயிலாக 19.3 ஓவரில் 5 விக்கெட் இழந்த தமிழ்நாடு இலக்கை எட்டிப் பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது, கேரளா சார்பில் பந்துவீச்சில் கலக்கிய மனு கிருஷ்ணன் 3 விக்கெட்டுகளை சாயத்த போதிலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
அரை இறுதி:
இதை அடுத்து சையது முஷ்டாக் அலி கோப்பை அரையிறுதி சுற்றில் காலடி வைத்துள்ள தமிழ்நாடு பைனலுக்கு செல்வதற்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஹைதெராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
- இப்போட்டி நவம்பர் 20 காலை 8.30 மணிக்கு துவங்க உள்ளது
- அதேபோல் நவம்பர் 20 மதியம் 1 மணிக்கு துவங்கும் 2வது அரை இறுதியில் விதர்பா மற்றும் கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
- இந்த போட்டிகளில் வெற்றி பெறும் நவம்பர் 22இல் நடக்கும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக விளையாட உள்ளன.