ஐசிசி 20 ஓவர் உலககோப்பை 2021 கிரிக்கெட் தொடரில் பல நட்சத்திர வீரர்களை கொண்ட இந்திய அணி சூப்பர் 12 லீக் சுற்றுடன் வெளியேறியது இந்திய ரசிகர்களை பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாகிறது.
Photo Credits : BCCI |
முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி இந்திய அணிக்காக கடைசி முறையாக டி20 கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்ததால் வெற்றி கோப்பையுடன் விடைபெறுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.
தோல்விக்கு காரணமான ஐபிஎல்:
இந்த உலகக்கோப்பையில் இந்தியா தோற்றதற்கு சமீபத்தில் நடைபெற்ற ஐபில் 2021 தொடர் ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள், ஏனென்றால் ஐபிஎல் முடிந்த அடுத்த 2 நாட்களில் 20 ஓவர் உலக கோப்பை தொடங்கியதால் அதற்கு இந்திய வீரர்கள் தயாராவதற்கு தேவையான கால அவகாசம் கிடைக்கவில்லை.
மேலும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் தொடர்ந்து விளையாடி வருவதால் அது மனதளவில் சோர்வை ஏற்படுத்தியதாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்திருந்தார்.
மேலும் உலக கோப்பை தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது நமீபியா இந்தியாவுக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் இதுபற்றி பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி,
நான் மிகவும் சோர்ந்து போயுள்ளேன் இருப்பினும் எனது வயதுக்கு இது எதிர்பார்க்க கூடிய ஒன்றுதான் ஆனால் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருவதால் நமது வீரர்கள் உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்து போயுள்ளனர், எனவே ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகிய இரண்டிற்கும் ஒரு பெரிய இடைவெளி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
என தெரிவித்திருந்தார். இதனால் சில ரசிகர்கள் கோபத்தின் எல்லைக்கே சென்று இந்திய கிரிக்கெட்டை விட ஐபில் ஒன்றும் முக்கியமில்லை என்பதால் ஐபிஎல் தொடரை தடை செய்யுங்கள் என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
கபில் தேவ் விமர்சனம்:
அத்துடன் இந்திய வீரர்கள் பணத்திற்காக இந்தியாவிற்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பெருமையாக கருதுகிறார்கள் என்றும் அதனால் தான் இந்தியா தோற்றது எனவும் இந்தியாவிற்காக முதல் முறையாக உலக கோப்பையை வென்ற ஜாம்பவான் கேப்டன் கபில்தேவ் வெளிப்படையாகவே கடந்த சில தினங்களுக்கு முன் விமர்சனம் செய்திருந்தார்.
அது பற்றி முழுமையாக படிக்க👇
முட்டாள் யாருமில்லை:
இந்நிலையில் பணத்திற்காக இந்திய வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சமீபத்தில் இந்திய வீரர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனம் பற்றி ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். டி20 உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அவர் இந்தியா டுடே பத்திரிகையில் இதுபற்றி,
கண்டிப்பாக அப்படி ஒரு கேள்விக்கு இடமே இல்லை ஒருவேளை அப்படி இருந்திருந்தால் எப்படி கடந்த 5 வருடங்களாக சிறப்பாக நமது அணி விளையாடி இருக்கும். நாட்டுக்காக விளையாடாமல் ஐபிஎல் அணிக்காக விளையாட எந்த முட்டாள் மதிப்பளிப்பான். நமது வீரர்கள் நமது நாட்டிற்காக விளையாடுகிறார்கள், அவர்களின் இதயத்தின் மேலே நமது நாட்டு அணியின் முத்திரை உள்ளது. நமது 140 கோடி மக்களுக்காக விளையாடும் 11 பேரில் அவர்களும் ஒருவராக விளையாட அவர்களுக்கு அதிர்ஷ்டமும் கிடைத்துள்ளது, அப்படி இருக்க இது போன்ற விமர்சனங்களை வைப்பவர்களுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை
என கூறிய ரவி சாஸ்திரி இந்திய வீரர்கள் எவரும் பணத்திற்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதை முக்கியத்துவமாக கருதவில்லை என்றும் இந்தியாவிற்காக விளையாடுவதையே அவர்கள் பெருமையாக விரும்புகிறார்கள் எனவும் பதிலடி கொடுத்தார்.
டி20 உலக கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்த ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் விளையாடவில்லை, இதுபோல மேலும் ஒரு சில வீரர்களும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.