ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்து கொண்டன என்பது பற்றிய இறுதி பட்டியல் வரும் நவம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.
Photo Credits : BCCI/IPL |
லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளதால் ஐபிஎல் 2022 தொடர் 10 அணிகளுடன் 74 போட்டிகள் கொண்ட மெகா தொடராக நடைபெற உள்ளது.
தக்கவைக்கும் வீரர்கள்:
அந்த காரணமாக நடைபெற உள்ள மெகா ஏலத்திற்கு முன்பாக ஏற்கனவே உள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட பழைய 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதேபோல் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகள் ஏலத்தில் அதிகபட்சமாக தாங்கள் விரும்பும் 3 வீரர்களை தேர்வு செய்துகொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என்பது போன்ற ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் விதிமுறைகளை ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
- இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பழைய 8 அணிகள் மெகா ஏலத்திற்கு முன்பாக எந்த அந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுகளை எடுக்கும் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
சோலோவாக பஞ்சாப்:
இந்த நிலையில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் எந்த வீரர்களையும் தக்க வைக்கப் போவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் அணியில் தற்போது கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், முகமது சமி, கிறிஸ் கெயில் என பல நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள் இருப்பினும் கடந்த 2014 க்குப் பின் தொடர்ந்து 7 வருடங்களாக அந்த அணியால் ஒருமுறைகூட பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை.
இதன் காரணமாக ஐபிஎல் 2022 தொடரில் முழு அணியையும் மாற்றி புதிய அணியுடன் வெற்றிக்காக களமிறங்க அந்த அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக டெலிகிராப் நாளிதழ் வாயிலாக தெரிகிறது, இதற்கான மற்றொரு காரணம் என்னவெனில் பஞ்சாப் நிர்வாகம் கே எல் ராகுலை முதல் வீரராக தக்க வைக்க விரும்புகிறது.
கேஎல் ராகுல்:
- ஆனால் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து 500 ரன்களுக்கும் மேல் ஐபிஎல் தொடரில் விளாசி அற்புதமான பார்மில் இருக்கும் காரணத்தால் அவரின் மவுசு கூடியுள்ளது, அத்துடன் அவரை மெகா ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமிக்க புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் மெகா ஏலத்தில் பங்கேற்று இன்னும் சற்று கூடுதலான தொகைக்கு விளையாட விரும்புவதாக தெரிகிறது.
ராகுலுக்கு அடுத்ததாக இருக்கும் மற்ற வீரர்களில் மயங்க் அகர்வால் தக்க வைக்க வேண்டுமெனில் அவருக்கு அடிப்படை விலையான 16 கோடிகளை வழங்க வேண்டும் என்பதால் அந்த முடிவும் சந்தேகமாக உள்ளது, மேலும் இளம் வீரர்களான பிஷ்னோய் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோரை தக்க வைக்க வேண்டுமெனில் இந்தியாவிற்காக விளையாடாத வீரர்களுக்கு அதிகபட்சமாக 4 கோடிகளை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும்.
அதற்கு அவர்களை மெகா ஏலத்தில் விட்டு பின்னர் விலைக்கு வாங்கினால் 4 கோடிகளை விட மிகவும் குறைவான விலைக்கு வாங்கலாம் என பஞ்சாப் நிர்வாகம் கருதுகிறது ஏனென்றால் எந்த வீரரையும் தக்க வைக்காமல் நேரடியாக ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் முழுதாக ரூபாய் 90 கோடிகளை செலவிட்டு முற்றிலும் புதிய அணியை உருவாக்க முடியும், அதைத்தான் பஞ்சாப் அணி நிர்வாகமும் விரும்புவதாக தெரிய வருகிறது.
புதிதல்ல:
பஞ்சாப் அணி நிர்வாகம் இதுபோல் அதிரடியாக மாற்றங்களை செய்வது இது ஒன்றும் புதிதல்ல என ஐபிஎல் தொடரை உன்னிப்பாக கவனிக்கும் ரசிகர்களுக்கு தெரியும், மினி ஏலமாக இருந்தாலும் சரி மெகா ஏலமாக இருந்தாலும் சரி இதற்குமுன் நடைபெற்ற ஐபிஎல் ஏலங்களில் ஒவ்வொரு முறையும் அதிக தொகை கையிருப்புடன் களமிறங்கும் அணியாகவே பஞ்சாப் இருந்து வருகிறது.
எனவே ஐபிஎல் 2022 ஏலத்தில் எந்த ஒரு வீரரையும் தக்க வைக்காமல் புதிய அணியை பஞ்சாப் நிர்வாகம் உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, எப்படி இருந்தாலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.