ஐசிசி 20 ஓவர் உலககோப்பை 2021 கிரிக்கெட் தொடரில் இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.
Photo Credits : BCCI |
இந்த தோல்வியால் 2012க்கு பின் முதல் முறையாக நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் முடியாமல் பரிதாபமாக வெளியேறிய இந்திய அணி 2013க்கு பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவும் பறிபோனது.
ஐபிஎல் பாதிப்பு:
இந்த உலக கோப்பையில் இந்தியா தோல்வி அடைவதற்கு மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் என்ற காரணங்களை விட சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் ஒரு மறைமுக காரணமாக அமைந்தது, ஏனென்றால் ஐபிஎல் நடைபெற்று முடிந்த அடுத்த 2வது நாள் இந்த உலககோப்பை தொடங்கியது.
- எப்படியாவது எஞ்சிய ஐபிஎல் தொடரை நடத்தி கோடிக்கணக்கில் லாபம் பார்க்க வேண்டும் என நினைத்த பிசிசிஐ டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் இந்திய வீரர்களுக்கு தேவையான கால நேரத்தை வழங்கவில்லை.
பிசிசிஐ மீது குற்றசாட்டு :
கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இந்திய வீரர்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். அது பற்றிய முழு விவரம்👇படிக்க
மனுஷனாடா நீங்கல்லாம் ! இந்திய வீரர்களை வாட்டி வதைக்கும் பிசிசிஐ, பரிசாக டி20 உலககோப்பை தோல்வி
இதனால் மனதளவில் சோர்ந்து போய் உள்ளதாக இந்த உலக கோப்பையின் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின்னர் இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
புதிதல்ல :
இந்நிலையில் ஐபிஎல் தொடர் இந்தியாவின் டி20 உலக கோப்பை கனவை தகர்ப்பது இது ஒன்றும் புதிதல்ல வரலாற்றில் இதற்கு முன்பும் சில முறை இதேபோல இந்தியாவின் 20 ஓவர் உலக கோப்பை கனவை ஐபிஎல் தகர்த்தது பற்றி பார்ப்போம்:
- வரலாற்றில் 2007, 2009, 2010, 2012, 2014, 2016 மற்றும் 2021 இதுவரை 7 20 ஓவர் உலகக் கோப்பையில் நடைபெற்றுள்ளன.
இதில் 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் 20 ஓவர் உலக கோப்பையை எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது, 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை வந்து இலங்கையிடம் தோற்றுப்போனது.
- 2016 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் அரையிறுதியில் தோற்று போனது.
2009, 2010, 2012 மற்றும் 2021 ஆகிய 4 உலக கோப்பைகளில் நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் நடையை கட்டியது, இந்த 4 உலக கோப்பைகளில் இந்தியா லீக் சுற்றுறோடு வெளியேறுவதற்கு ஐபிஎல் தான் காரணமாக அமைந்தது.
2009 உலககோப்பை :
தென்னாபிரிக்காவில் ஏப்ரல் 18 முதல் மே 24 வரை 2வது முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது, அதன் பின் 15 நாட்கள் கூட இடைவெளி இல்லாத நிலையில் ஜூன் 5ஆம் தேதி 20 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது.
அந்த உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக பங்கேற்ற தனது முதல் 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.
- ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்த இந்திய வீரர்களுக்கு தேவையான கால அவகாசம் கிடைக்கவில்லை என அப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இதுபற்றி தெரிவித்திருந்தார்.
அத்துடன் 2009 வருடத்தின் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கவில்லை ஆனால் அந்த உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் வென்று சாதனை படைத்தது, இதிலிருந்தே இந்தியாவின் டி20 உலகக் கோப்பை கனவை ஐபிஎல் தொடர் பறித்தது அம்பலமாகிறது.
2010 உலககோப்பை :
2009 கூட பரவாயில்லை 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்று விட்டு ஏப்ரல் 30ஆம் தேதி வெஸ்ட் இண்டீசில் துவங்கிய 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி சென்றது.
மீண்டும் ஆஸ்திரேலியா,இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக முதல் 3 போட்டிகளில் தோல்வி அடைந்த இந்தியா அரையிறுதி வாய்ப்பை கோட்டை விட்டது.
2012 உலககோப்பை :
2012இல் ஐபிஎல் தொடர் முடிந்த பின் ஒரு சில மாதங்கள் கழித்து 20 ஓவர் உலக கோப்பை இலங்கையில் நடைபெற்றது என்றாலும் ஐபிஎல் தொடரில் உச்சகட்டமாக விளையாடிய இந்திய வீரர்கள் அதே பார்மை டி20 உலகக்கோப்பைக்கு எடுத்து செல்ல முடியாமல் போனது.
- அந்த உலக கோப்பையில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற போதிலும் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
திருந்துமா பிசிசிஐ :
இதற்காக ஐபிஎல் தொடர் வேண்டாம் என எவரும் கூறவில்லை ஆனால் ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ இந்திய கிரிக்கெட்டின் மீதும் சற்று அதிக அக்கறை காட்டி டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் ஐபிஎல் தொடரின் அட்டவணைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.