இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 25 ஆம் தேதி கான்பூர் நகரில் துவங்க உள்ளது.
Green Park Stadium, Kanpur |
முன்னதாக நியூஸிலாந்துக்கு இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 0 என வைட்வாஷ் செய்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அபார வெற்றி பெற்றது.
முக்கிய வீரர்கள் ஓய்வு:
இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது சமி, பும்ரா உள்ளிட்ட பல முக்கியமான வீரர்கள் ஓய்வு எடுக்க உள்ளனர், இருப்பினும் கேப்டன் விராட் கோலி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2வது போட்டிக்கு திரும்ப உள்ளார். இதன் காரணமாக முதல் போட்டியில் அஜின்கியா ரகானே கேப்டன்ஷிப் செய்யவுள்ளார், துணை கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
- இதனால் கில், அகர்வால், ஷரயஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
மறுபுறம் நியூஸிலாந்து அணியில் டி20 தொடரில் ஓய்வெடுத்த கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்புவது அந்த அணிக்கு பெரிய பலமாக கருதப்படுகிறது. அத்துடன் ராஸ் டெய்லர், ஜமிசன் போன்ற முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்புகின்றனர்.
பழி தீர்க்குமா இந்தியா:
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தின் சவுதம்ட்டன் நகரில் நடைபெற்ற வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதல் சாம்பியனாக சாதனை படைத்தது.
- அத்துடன் கடந்த 2020இல் நியூசிலாந்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற படுதோல்வியை விராட் கோலி தலைமையிலான இந்தியாவிற்கு நியூசிலாந்து பரிசளித்தது.
எனவே இந்த அடுத்தடுத்த படுதோல்விகளுக்கு குறைந்தபட்சம் சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் வெற்றி பெற்று நியூஸிலாந்தை இந்தியா பழி தீர்க்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோட்டை கான்பூர்:
இந்த வேளையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள உத்திர பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் இருக்கும் க்ரீன் பார்க் கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் கோட்டையாகத் திகழ்ந்து வருவதை பார்ப்போம்:
கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் வரலாற்றில் இந்தியா இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. அதில் 7 போட்டிகளை வென்ற இந்தியா 3 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்தது, 12 போட்டிகளை ட்ரா செய்தது.
- இம்மைதானத்தில் கடந்த 1952 ஆம் ஆண்டு இந்தியா முதன்முறையாக வலுவான இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் களம் இறங்கியது, இருப்பினும் அந்தப் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
- அதேபோல் இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த 1983-ஆம் ஆண்டு வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா தோற்றது.
அதன்பின் கடந்த 38 வருடங்களாக இந்த மைதானத்தில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோற்கவில்லை என்பதாலேயே கான்பூர் மைதானத்தை இந்தியாவின் கோட்டை என்று பயமின்றி அழைக்கலாம்.
நியூஸிலாந்துக்கு எதிராக:
மேலும் இந்த கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் இந்தியாவை நியூசிலாந்து ஒருமுறை கூட டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்த முடியவில்லை, நியூசிலாந்துக்கு எதிராக வரலாற்றில் இந்தியா இங்கு 3 போட்டிகளில் பங்கேற்று உள்ளது.
- அந்த 3 போட்டிகளில் 2 முறை வெற்றி பெற்ற இந்தியா 1 போட்டியை டிரா செய்தது.
இந்த புகழ்பெற்ற மைதானத்தில் கடைசியாக இந்தியா கடந்த 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்த அசத்தியது.
அதிக ரன்கள் & விக்கெட்கள்:
இமைதானத்தில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 வீரர்களின் பட்டியல்:
குண்டப்பா விஸ்வநாத் - 776
சுனில் கவாஸ்கர் - 629
முஹம்மது அசாருதீன் - 543
க்ரீன் பார்க் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 3 பவுலர்கள்:
கபில் தேவ் - 25 விக்கெட்கள்
அனில் கும்ப்ளே - 21 விக்கெட்கள்
ஹர்பஜன் சிங் - 20 விக்கெட்கள்