IND vs AFG T20 World Cup 2021 : இறுதி வாய்ப்பில் வெல்லுமா இந்தியா - முழு விவரம்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் முக்கியமான 33வது சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Photo Credits : Getty images 


போட்டி விவரம் :

நவம்பர் 03, இந்தியா V ஆப்கானிஸ்தான், போட்டி 33, குரூப் 2 சூப்பர் 12 சுற்று, இரவு 7.30 மணி, அபுதாபி.

நேரடி ஒளிபரப்பு :

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்.

இறுதி வாய்ப்பில் இந்தியா :

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் இந்த உலககோப்பை இதுவரை இந்தியாவிற்கு ஏமாற்றத்தையே கொடுத்து வருகிறது, முதலில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா பின்னர் 2வது போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது.

இதனால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் சந்தேகமாகியுள்ள வேளையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் உட்பட மீதமிருக்கும் 2 போட்டிகளிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

ஒருவேளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால் அத்தோடு இந்தியாவின் 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கனவு உடைந்து விடும், இப்படிபட்ட இறுதி வாய்ப்பில் அரை இறுதிக்கு செல்வது சந்தேகம் என்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று போராட்ட குணத்தை வெளிப்படுத்துமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முன்னோட்டம் :

இந்தியா : இந்திய அணியில் கடந்த சில போட்டிகளாக பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை, பந்துவீச்சும் அதற்கும் மேல் உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா - 0.109 என்ற மோசமான ரன் ரேட் உடன் புள்ளிப் பட்டியலில் 0 புள்ளிகளுடன் நமீபியா போன்ற அணிகளுக்கு கீழாக இருப்பது இந்திய ரசிகர்களுக்கு வேதனை அளிக்கிறது.

விராட் கோலி தலைமையில் ரோகித் சர்மா, கே எல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா என அணியில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் பொறுப்பை உணர்ந்து ஓரளவு சுமாராக செயல்பட்டாலே ஆப்கானிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்.

இந்த முக்கியமான போட்டியில் ரவிச்சந்திரன் அனுபவம் வாய்ந்த அஸ்வின் சேர்க்கப்படுவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான் : இந்த உலக கோப்பையில் இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் மிகவும் அபாரமாக செயல்பட்டு 2 வெற்றிகளை பெற்றுள்ளது, குறிப்பாக அந்த அணியின் ரன் ரேட் + 3.097 ஆக இருப்பது அந்த அணிக்கு பலமாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், முகம்மது நபி முஜிபூர் ரகுமான் என 3 உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும், வேகப்பந்து வீச்சில் நவீன் உல் ஹக், ஹசன் போன்ற பவுலர்கள் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள். பேட்டிங்கில் ஹசரதுல்லா, குர்பாஸ், சாசாய் போன்ற நல்ல வீரர்களும் உள்ளார்கள்.

மொத்தத்தில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு தேவையான பலத்துடன் உள்ளது என்பதால் இந்தியா நிதானமாகவும் அதேசமயம் சிறப்பாகவும் விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

புள்ளிவிவரம் :

சர்வதேச டி20 வரலாற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இதுவரை 2 போட்டிகளில் மோதியுள்ளன, இந்த 2 போட்டிகளும் டி20 உலக கோப்பையில் தான் நடைபெற்றது என்பது ஆச்சரியம் ஆகும்.

  • அந்த 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
  • முதலில் கடந்த 2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • பின் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானை இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஆனால் இந்த 2 உலகக் கோப்பைகளிலும் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு சோகமான விசயமாகும்.

பிட்ச் விவரம்:

இந்த போட்டி இந்தியா முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த துபாயில் அல்லாமல் அபுதாபி நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது ஆறுதலான விஷயமாகும்.

ஆனால் இந்த மைதானத்திலும் சுழல் பந்து வீச்சு அதிகமாக எடுபடும் என்பதால் பேட்டிங் செய்யும் வீரர்கள் ஆரம்பத்தில் நிதானத்துடன் ஆட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, அதேபோல் இரவு நேர போட்டி என்பதால் 2வது இன்னிங்ஸ்சின் போது பணி மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் போன்றவை பந்துவீசும் அணிக்கு பெருத்த சவாலளிக்கும்.

மேலும் இந்த உலக கோப்பையில் இதுவரை நடைபெற்ற 90 சதவீத போட்டிகளில் டாஸ் வென்று சேசிங் செய்யும் அணிகள் வெற்றி பெற்றுள்ளன என்பதால் இந்த போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பந்து வீசும் அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Previous Post Next Post

Your Reaction