சமீபத்தில் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாப தோல்வி அடைந்தது.
Photo Credits : Getty Images |
அந்த தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்ற பின் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு தயாராக தேவையான கால அவகாசம் இந்திய வீரர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே தோல்விக்கு மிக முக்கிய காரணமாக தெரியவந்தது.
பாரமான ஐபிஎல்:
குறிப்பாக இங்கிலாந்து தொடரை முடித்துக்கொண்டு அடுத்த சில நாட்களிலேயே ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அந்தத் தொடர் முடிந்த பின் மீண்டும் அடுத்த 2 நாட்களில் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும்போது மனத்தளவில் சோர்வு அடைந்தனர்.
இது குறித்து "நீண்ட நாட்களாக கட்டுபட்டு வளையத்திற்குள் தொடர்ந்து விளையாடி வருவதால் மனதளவில் பெரிய சவாலை கொடுக்கிறது" என நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்ற பின்னர் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா போட்டு உடைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஜாம்பவான்கள் விமர்சனம்:
இதனால் கடும் ஏமாற்றமடைந்த இந்திய முன்னாள் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கடுமையாக விமர்சித்தார்கள், குறிப்பாக ஜாம்பவான் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்திய கிரிக்கெட்டை விட ஐபிஎல் தொடருக்கு பிசிசிஐ அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என கடுமையாக வேண்டுமென விமர்சித்தார்.
அதேபோல் "ஐபிஎல் தொடருக்குப் பின் டி20 உலகக்கோப்பைக்கு தயாராக சில கால அவகாசம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என டி20 உலகக் கோப்பையுடன் தலைமை பயிற்சியாளராக ஓய்வுபெற்ற ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
ரோபோக்கள் இல்லை:
அத்துடன் "இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோபோக்கள் இல்லை அவர்களின் வேலைப்பளுவை நிர்வகிக்க வேண்டும்" என புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த வேளையில் உண்மையாகவே இந்திய வீரர்கள் ரோபோக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி பார்ப்போம்:
கடந்த 2018 ஜனவரி முதல் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலக கோப்பை 2021 வரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் பங்கேற்ற நாடுகள்
இந்தியா : டெஸ்ட் போட்டிகள் - 37, ஒருநாள் போட்டிகள் - 63, 20 ஓவர் போட்டிகள் - 59 என மொத்தம் 159 போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
இங்கிலாந்து : டெஸ்ட் போட்டிகள் - 46, ஒருநாள் போட்டிகள் - 64, 20 ஓவர் கிரிக்கெட் - 47 என மொத்தம் 157 போட்டிகளில் பங்கேற்றது.
ஆஸ்திரேலியா : டெஸ்ட் போட்டிகள் - 27, ஒருநாள் போட்டிகள் - 52, டி20 போட்டிகள் - 58 என மொத்தம் 137 போட்டிகளில் பங்கேற்றது.
Photo Credits : Getty Images |
நாட்கள் அடிப்படையில் கடந்த 2018 ஜனவரி முதல் டி20 உலகக் கோப்பை 2021 தொடர் வரை இந்திய கிரிக்கெட் அணியினர் களத்தில் இறங்கி பங்கேற்ற நாட்கள் விவரம்:
டெஸ்ட் கிரிக்கெட் - 2 நாட்களில் முடிந்த போட்டிகள், 3 நாட்களில் முடிந்த போட்டிகள் என இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 147 நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்கள் களத்தில் இறங்கி விளையாடி உள்ளார்கள்.
- அதேபோல் 63 ஒருநாள் போட்டிகள் வாயிலாக 63 நாட்களும் 59 20 ஓவர் போட்டிகளின் வாயிலாக 59 நாட்களும் விளையாடி உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கடந்த 4 வருடங்களில் இது வரை 269 நாட்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உள்ளார்கள், இது உலக அளவில் கிரிக்கெட் விளையாடும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற இதர நாடுகளை விட அதிகமாகும்.
- இது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரை சேர்த்தால் கடந்த 4 வருடங்களில் இந்திய வீரர்கள் பங்கேற்ற நாட்கள் 500 நெருங்கும்.
இதிலிருந்தே இந்திய வீரர்களை பிசிசிஐ ரோபோக்களாக நடத்துவது தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
திருந்துமா பிசிசிஐ:
தற்போது கூட பாருங்கள் டி20 உலகக்கோப்பை முடிந்த அடுத்த 2 நாட்களில் நியூசிலாந்துக்கு எதிரான சுற்றுப் பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது, வரும் டிசம்பர் 7ஆம் தேதி இந்த தொடர் நடைபெற்று முடிந்த அடுத்த நாள் அதாவது டிசம்பர் 8-ஆம் தேதி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணியினர் பறக்க உள்ளனர்.
தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் விளையாடுவதால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் பிசிசிஐ மற்றும் வீரர்களுக்கு பணமும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை இருப்பினும் அவர்கள் கடந்த காலங்களில் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இல்லாமல் சுதந்திரமாக விளையாடினார்கள் ஆனால் தற்போது ஹோட்டல் அறையை விட்டு கூட வெளியே செல்ல முடியாத அளவுக்கு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் தொடர்ந்து விளையாடி வருவதால் கண்டிப்பாக அவர்கள் மனதளவில் சோர்ந்து போவார்கள்.
- இது சாதாரண கிரிக்கெட் போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என பிசிசிஐ உணர்ந்து இனியாவது இந்திய வீரர்களை ரோபோக்களாக பார்க்காமல் வீரர்களாக பார்க்க வேண்டும்.