ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை தொடருடன் இந்தியாவின் 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே தற்போதைய கேப்டன் விராட் கோலி அறிவித்திருந்தார்.
Photo Credits : BCCI |
முதலும் கடைசியுமாக டி20 உலக கோப்பையில் கேப்டன்ஷிப் செய்யும் அவர் இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கையில் வெற்றிக் கோப்பையுடன் விடைபெறுவார் என விராட் கோலியின் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.
தொடர் தோல்விகள்:
இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுக்கு எதிராக 2 அடுத்தடுத்த படு தோல்விகளை சந்தித்ததால் அடுத்த சுற்றான அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு குறைந்து போயுள்ளது.
இந்த வேளையில் உலக கோப்பை முடிந்தவுடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து பங்கேற்க உள்ளது, வரும் நவம்பர் 17ஆம் தேதி துவங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி வரும் நவம்பர் 5ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளமைக்கு வாய்ப்பு:
இந்த தொடரில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கலக்கிய ருதுராஜ் கைக்வாட், வெங்கடேச ஐயர், அவேஷ் கான் உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அத்துடன் டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத சஹால், அக்சர் படேல், சஹர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்ப உள்ளார்கள்.
- அதேபோல் இந்த டி20 தொடருக்கு புதிய கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்க உள்ளார் அல்லது ஒருவேளை அவர் ஓய்வை விரும்பினால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த வீரர்களுக்கு ஓய்வு:
அதேசமயம் பல மாதங்களாக கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருப்பதால் சோர்வடைந்து உள்ளதாக தெரிவித்த ஜஸ்பிரித் பும்ரா, ஷமி போன்ற சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் எனவும் தெரிய வருகிறது.
அந்த 20 ஓவர் தொடருக்குப் பின் நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா போன்ற சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும் காயம் பற்றிய முழு விவரம் தெரிய வராத ஹர்திக் பாண்டியா, பார்ம் இல்லாமல் தவிக்கும் புவனேஸ்வர் குமார் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட உள்ளார்கள்.
ஒருநாள் கேப்டன் பதவி:
நியூஸிலாந்து பயணத்திற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக தேர்வு குழுவினர் மிக விரைவில் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், அந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் யார் என்பது பற்றிய முக்கிய ஆலோசனைகளை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஆகியோருக்கு முன்னிலையில் விவாதிக்கப்பட உள்ளது.
இதில் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவி பற்றிய விவாதங்களும் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன, ஏனெனில் டி20 கேப்டன் பொறுப்பில் அவரின் கடைசி வாய்ப்பில் அரையிறுதி சுற்றுக்கு கூட இந்தியாவை அழைத்துச் செல்வது சந்தேகமாகியுள்ளது.
- அத்துடன் ஏற்கனவே 2017 மற்றும் 2019 ஆகிய வருடங்களில் நடைபெற்ற ஒருநாள் தொடருக்கான ஐசிசி உலகக் கோப்பைகளில் விராட் கோலி தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்ல முடியவில்லை, ஏற்கனவே 2 வாய்ப்புகள் அளிக்கப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்து அதில் இந்தியா வெல்ல முடியாமல் போனால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும் என பிசிசிஐ கருதுகிறது.
ஏனென்றால் 2023 உலக கோப்பை இந்திய மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற உள்ளது.
யோசித்து முடிவு :
இருப்பினும் வரும் 2022 ஜூன் மாதம் வரை இந்தியா சொந்த மண்ணில் வெறும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே களமிறங்க உள்ளது, அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறுவதால் அதற்கு தயாராகும் வண்ணம் 17 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
- எனவே தற்போதைக்கு இந்தியாவிற்கு ஒரு நாள் போட்டிகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியை பற்றிய விசயத்தில் பிசிசிஐ யோசித்து முடிவெடுக்க உள்ளது.
என்னதான் யோசித்து முடிவு எடுத்தாலும் 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தலைமையில் இந்தியா ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல தவறியதால் ஒருநாள் கேப்டன் பதவியில் விராட் கோலி 2023 உலக கோப்பை வரை இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் நீடிப்பது என்பது சந்தேகமாக மாறியுள்ளது.