ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
Photo Credits : ICC |
மிரட்டல் பவுலிங்:
முன்னதாக நேற்று இந்திய கேப்டன் விராட் கோலியின் பிறந்தநாளில் நடைபெற்ற இப்போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து டாஸ் வென்ற விராட் கோலி ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தினார், இதையடுத்து இந்தியா பந்து வீச்சை தீர்மானிக்க ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்துக்கு ஆரம்பத்திலேயே அந்த அணியின் கேப்டன் கோட்சியரை 1 ரன்னில் அவுட்டாக்கி இந்தியாவின் பும்ரா அதிர்ச்சி கொடுத்தார், அடுத்து வந்த கிராஸ் மற்றும் பெரிங்டன் ஆகியோரை ரவீந்திர ஜடேஜா ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆக்கினார்.
இதிலிருந்து கடைசி வரை மீள முடியாத ஸ்காட்லாந்து இந்தியாவின் அதிரடியான பந்துவீச்சில் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 85 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா, முகமது சமி ஆகியோர் தல 3 விக்கெட்டுகளும் பும்ரா 2 விக்கெட்டுகளும் அஸ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
சரவெடி வெற்றி :
பின் 86 ரன்கள் என்ற சிறிய இலக்கை 7.1 ஓவர்களுக்குள் எட்டினால் குரூப் 2 பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை விட அதிக ரன் ரேட் பெற முடியும் என்ற நிலையில் களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே ஸ்காட்லாந்து பந்துவீச்சை பந்தாடினார்கள்.
உலக தரம் வாய்ந்த இந்த 2 பேட்டர்களை தடுக்க முடியாமல் ஸ்காட்லாந்து பவுலர்கள் திணறினார்கள், முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், கேஎல் ராகுல் வெறும் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் சூரியகுமர் யாதவ் சிக்ஸர் அடித்து 6.3 ஓவர்களில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார், இந்த மிகப்பெரிய வெற்றியின் வாயிலாக ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை விட புள்ளிபட்டியலில் அதிக ரன் ரேட்டை இந்தியா பெற்றது.
அரை இறுதி கனவு:
- பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோற்ற போதிலும் கத்துக்குட்டிகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக அதிரடியான மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்த இந்தியா புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்துள்ளது.
இந்த 2 வெற்றிகளின் வாயிலாக கேள்விக்குறியில் இருக்கும் அரை இறுதி வாய்ப்பையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சரி தற்போதைய நிலைமையில் இந்தியா அரையிறுதி செல்வதற்கு கடைசியாக மீதம் இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பை பற்றிய விரிவான விவரம் பார்ப்போம் :
1. ஆப்கானிஸ்தான் உதவி : ஏற்கனவே பல ரசிகர்களுக்கு தெரிந்தது போல வரும் ஞாயிறு அன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதி வாய்ப்பு மிகவும் பிரகாசமாகும்.
- அதே சமயம் அப்போட்டியில் நியூஸிலாந்தை 50 ரன்கள் அல்லது அதற்குமேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இந்தியாவின் ரன் ரேட்டை விட ஆப்கானிஸ்தான் அதிக ரன்ரேட் பெற்று விடும்.
எனவே அந்த சமயத்தில் நமீபியாவுக்கு எதிரான தனது கடைசி போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 37 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், ஒருவேளை சேசிங் செய்தால் நிர்ணயிக்கப்படும் இலக்கை 15.5 ஓவர்களில் சேசிங் செய்ய வேண்டும்.
ஒருவேளை நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 25 ரன்களுக்கும் குறைவாக சிறிய அளவிலான வெற்றியை ஆப்கானிஸ்தான் பெறும் பட்சத்தில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 14 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் போதும், சேசிங் செய்கையில் 18 ஓவர்களில் நிர்ணயிக்கப்படும் இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு செல்ல போதுமானது.
ஒருவேளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் அத்துடன் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவு பாழாகிவிடும், இந்திய வீரர்கள் அனைவரும் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு மீண்டும் ஒரு ஏமாற்றத்துடன் நாடு திரும்புவார்கள்.