இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை 2021 தொடர் 13வது முறையாக தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதியன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது.
Photo : BCCI Domestic |
வரும் நவம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் நடப்புச் சாம்பியன் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்கேற்க உள்ளன, ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெறும் இந்தத் தொடரில் லீக் சுற்று, அரையிறுதி சுற்று, இறுதி போட்டி உட்பட மொத்தம் 149 போட்டிகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு - மகாராஷ்டிரா :
இன்று தொடங்கிய இந்த தொடரில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள விஜய் சங்கர் தலைமையிலான நடப்பு சாம்பியன் தமிழ்நாடு ருத்ராஜ் கைக்வாட் தலைமையிலான மகாராஷ்டிராவை எதிர்கொண்டது, லக்னோவில் இருக்கும் வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
தமிழ்நாடு சூப்பர் பேட்டிங் :
இதை அடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் குவித்த நல்ல தொடக்கம் கொடுத்தனர், இதில் ஹரி நிஷாந்த் 27 ரன்களும் ஜெகதீசன் 30 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து வந்த சாய் சுதர்சன் வெறும் 19 பந்துகளில் 35 ரன்களும் பின்னர் களமிறங்கிய கேப்டன் விஜய்சங்கர் வெறும் 21 பந்துகளில் 42* ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு 167 ரன்கள் எடுத்தது.
ருதுராஜ் கைக்வாட் அதிரடி :
இதை அடுத்து 168 என்ற இலக்கை துரத்திய அணிக்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அபாரமாக விளையாடி 600 ரன்களுக்கு மேல் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்.
பவர்பிளே ஓவர்களில் தமிழ்நாடு பந்துவீச்சை பட்டையை கிளப்பிய அவர் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 51 ரன்கள் எடுத்தபோது முருகன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார், இவரின் சிறப்பான பேட்டிங்கால் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்து மகாராஷ்டிரா நல்ல தொடக்கம் பெற்றது.
தமிழ்நாடு வெற்றி :
அடுத்து வந்த கேதார் ஜாதவ் 16 பந்துகளில் 13 ரன்களும் ஷைக் 19 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து ஏமாற்றம் கொடுத்தனர், பின்னர் வந்த பேட்ஸ்மேன்களையும் தமிழ்நாடு பவுலர்கள் கட்டுக்குள் வைத்திருந்ததால் 20 ஓவர்களில் மகாராஷ்டிரா 155/6 ரன்கள் மட்டுமே எடுத்தது, தமிழ்நாடு சார்பில் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளும் சாய் கிஷோர், நடராஜன், சந்தீப் வாரியார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
- இதன் காரணமாக 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு எலைட் குரூப் ஏ பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
அடுத்த போட்டி :
இதை அடுத்து தமிழ்நாடு தனது 2வது போட்டியில் ஒடிசா அணியை நாளை அக்டோபர் 5ம் தேதி மதியம் 1 மணிக்கு லக்னோவில் இருக்கும் அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.