இந்தியாவில் கடந்த தீபாவளி தினத்தன்று நவம்பர் 4ஆம் தேதி துவங்கிய பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, இந்த தொடரில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகளும் கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தி வந்தன.
Photo Credits : BCCI Domestic |
தமிழ்நாடு அபாரம்:
இதில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்து விளையாடி வந்த தமிழ்நாடு லீக் சுற்றில் மகாராஷ்டிரா, ஒடிசா, பாண்டிசேரி ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த 3 வெற்றிகளுடன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து பின்னர் கோவா அணிக்கு எதிரான போட்டியில் தோற்றது.
இருப்பினும் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 4வது வெற்றியை பதிவு செய்து எலைட் குரூப் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தியது.
காலிறுதியில் வெற்றி :
பின் தமிழகத்தின் அண்டை மாநிலமான நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரளாவை தனது காலிறுதிப் போட்டியில் எதிர்கொண்ட தமிழ்நாடு 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
அசத்தலான அரை இறுதி:
இதை அடுத்து இன்று துவங்கிய அரையிறுதி சுற்றின் முதல் அரை இறுதி போட்டியில் மற்றொரு அண்டை மாநிலமான ஹைதராபாத்தை தமிழ்நாடு எதிர்கொண்டது, தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 8.30 மணிக்கு துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மிரட்டிய சரவணகுமார்:
இதை அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி டாப் ஆர்டர் பேட்டர்கள் தமிழ்நாடு பந்து வீச்சாளர்களின் அதிரடியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறினார்கள் குறிப்பாக தமிழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் சரவணகுமார் வீசிய துல்லியமான பந்துவீச்சில் ஐதராபாத் அணியின் கேப்டன் டன்மை அகர்வால் 1, ப்ராக்னாய் ரெட்டி 8, திலக் வர்மா 8, ஹிமாலய் அகர்வால் 0 என டாப் 4 வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகி சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
இதனால் 5.4 ஓவர்களில் 26/4 என பவர் பிளே ஓவரின் முடிவில் தடுமாறிய ஹைதராபாத் கடைசிவரை அதிலிருந்து மீள முடியாமல் திணறியது, கூடவே தமிழகத்தின் இதர பவுலர்களும் சிறப்பாக பந்து வீசிய காரணத்தால் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் வெறும் 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, அந்த அணிக்கு அதிகபட்சமாக தந்தை தியாகராஜன் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.
- தமிழகத்தின் சார்பில் பந்துவீச்சில் மின்னிய சரவணகுமார் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார், இவருடன் பந்துவீச்சில் கலக்கிய முருகன் அஸ்வின் மற்றும் முஹம்மது ஆகியோர் தலா 2 விக்கெட்களும், சாய் கிஷோர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
தமிழ்நாடு வெற்றி:
இதை தொடர்ந்து 91 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய தமிழ்நாட்டிற்கு தொடக்க வீரர் ஜெகதீசன் 1 ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதனால் 2.4 ஓவர்களில் 16/2 என தமிழ்நாடு ஆரம்பத்திலேயே தடுமாறியபோது களமிறங்கிய கேப்டன் விஜய் சங்கர் சக இளம் வீரர் சாய் சுதர்சன் உடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார், முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி இறுதியில் அதிரடியாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 76* ரன்கள் குவித்து தமிழ்நாட்டை 14.2 ஓவர்களில் 92/2 ரன்கள் ரன்கள் எடுக்க செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தது.
- இந்த சிறப்பான வெற்றிக்கு பேட்டிங்கில் வித்திட்ட கேப்டன் விஜய் சங்கர் 40 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 43* ரன்களும் சாய் சுதர்சன் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 34* ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி பெற செய்தனர்.
மாபெரும் பைனல்:
இந்த வெற்றியின் வாயிலாக சையது முஷ்டாக் அலி டிராபி 2021 தொடரின் மாபெரும் இறுதி போட்டிக்கு தமிழ்நாடு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
- அத்துடன் இந்த 20 ஓவர் தொடரின் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 3வது முறையாக தமிழ்நாடு தகுதி பெற்று அசத்தியுள்ளது, கடந்த 2019 மற்றும் 2020 ஆகிய சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு இம்முறை விஜய் சங்கர் தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2019 சீசனின் இறுதிப்போட்டியில் தோற்ற போதிலும் 2020ஆம் ஆண்டு சயீத் முஷ்டாக் அலி கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனையும் படைத்தது, அதேபோல் இந்த வருடமும் தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டுமென்பதே தமிழ்நாடு ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இதை அடுத்து வரும் நவம்பர் 22ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜேட்லி மைதானத்தில் மதியம் 12 மணிக்கு துவங்கும் சையது முஷ்டாக் அலி கோப்பை 2022 தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் கர்நாடகா அணிக்கு எதிராக தமிழ்நாடு கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது.