இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவரும் சையது முஷ்டாக் அலி கோப்பை 2021 தொடர் 13வது முறையாக கடந்த நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று கோலாகலமாக தொடங்கியது.
Photo Credits : BCCI Domestic |
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்த புகழ்பெற்ற தொடரில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி 38 அணிகள் லீக் சுற்று, நாக்அவுட் சுற்று உட்பட கோப்பைக்காக 149 போட்டிகளில் பலப்பரிட்சை நடத்தி வந்தன.
நடப்பு சாம்பியன் தமிழ்நாடு:
இதில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த தமிழ்நாடு தனது லீக் சுற்றில் மகாராஷ்டிரா, ஒடிசா, பாண்டிச்சேரி ஆகிய அணிகளுக்கு எதிராக களம் இறங்கிய முதல் 3 போட்டிகளில் அபார வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
- பின் கோவா அணிக்கு எதிராக தோற்ற போதிலும் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்ற காரணத்தால் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது.
நாக் அவுட் சுற்றில் அசத்தல்:
இதை அடுத்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் முதல் பகுதியான காலிறுதியில் அண்டை மாநிலமான கேரளாவை வீழ்த்திய தமிழகம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
அதன்பின் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற மற்றொரு அண்டை மாநிலமான ஹைதராபாத் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியிலும் அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
- அதேபோல் 2வது அரையிறுதிப் போட்டியில் விதர்பாவில் வீழ்த்திய கர்நாடகா இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
மாபெரும் பைனல் :
இந்த வேளையில் இன்று தலைநகர் டெல்லியில் இருக்கும் அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 12 மணிக்கு துவங்கிய சையது முஷ்டாக் அலி 2021 கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு மற்றும் முன்னாள் சாம்பியன் கர்நாடக அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழக கேப்டன் விஜய் சங்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார், இதையடுத்து களமிறங்கிய கர்நாடகாவின் தொடக்க வீரர்கள் ரோகன் கதமை டக் அவுட் செய்த தமிழக சுழல்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் அந்த அணி கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் மனிஷ் பாண்டேவை 13 ரன்களில் அவுட் செய்து அடுத்து வந்த சரத்தை 16 ரன்களில் அவுட் ஆக்கி பெவிலியன் திரும்பினார்.
கர்நாடகா 151 ரன்கள்:
- மற்றொரு நட்சத்திர வீரர் கருண் நாயரும் 16 ரன்களில் நடையைக் கட்ட 13.2 ஓவர்களில் 87/4 என கர்நாடகா தடுமாறியது.
அந்த வேளையில் களமிறங்கிய அபினவ் மனோகர் 37 பந்துகளில் 46 ரன்களும் பிரவீன் துபே 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினர், கடைசி நேரத்தில் ஜகதீசா சுசித் 7 பந்துகளில் 18* ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கர்நாடகா 151/7 ரன்கள் எடுத்தது.
- தமிழகத்தின் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் நடராஜன், சஞ்சய் யாதவ், சந்திப் வாரியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர்
தடுமாறிய தமிழ்நாடு:
இதை அடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 12 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 23 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் கொடுத்து அவுட் ஆனார்.
- ஆனால் மறுபுறம் மெதுவாக ஆடிய ஜெகதீசன் 46 பந்துகளில் 41 ரன்களும் சாய் சுதர்சன் 12 பந்துகளில் 9 ரன்களும் எடுத்து மெதுவாக விளையாடியதால் தமிழ்நாடு மீது பிரஷர் ஏற்பட்டது.
கூடவே கேப்டன் விஜய் சங்கர் 22 பந்துகள் சந்தித்து வெறும் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆக 15.2 ஓவர்களில் 95/4 என்ற மோசமான நிலையில் தமிழ்நாட்டின் வெற்றி கேள்விக்குறியானது.
புதிய பினிஷர் ஷாருக்கான்:
அடுத்ததாக களமிறங்கிய சஞ்சீவ் யாதவ் மற்றும் முகமது ஆகியோர் தலா 5 ரன்களில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளிக்க தமிழகத்தின் தோல்வி ஏறத்தாழ உறுதியான வேளையில் "நான் இருக்கும் வரை தமிழ் நாட்டை தோற்க விடமாட்டேன்" என்ற வகையில் கடைசி நேரத்தில் களமிறங்கிய இளம் வீரர் சாருக் கான் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
அவர் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 18 ஆவது ஓவரில் 13 ரன்கள் விளாசினார்.
- இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பரபரப்பான ஓவரை கர்நாடக பவுலர் பிரதீப் ஜெயின் வீச அதை எதிர்கொண்ட சாய் கிஷோர் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து 2-வது பந்தில் சிங்கிள் எடுத்தார், 3வது பந்தில் ஒய்ட் உடன் 2 ரன்களை சாருக்கான் எடுக்க 4-வது பந்தில் சாய் கிஷோர் சிங்கிள் எடுத்து தனது வேலையைச் செய்தார்.
சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் கடைசி பந்தில் பிரதீப் ஜெயின் ஒயிட் வீச வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது ஷாருக்கான் அதை அதிரடியாக சிக்ஸர் பறக்க விட்டு தமிழ்நாட்டை 4 விக்கெட் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெறச் செய்தார்.
3வது முறையாக சாம்பியன்:
இந்த வெற்றியின் வாயிலாக 2006 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு 2021 சீசனின் சாம்பியன் பட்டத்தையும் வென்று 3 சாம்பியன் பட்டங்களுடன் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சரித்திரம் படைத்தது.
Photo : BCCI Domestic |
- 15 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 33* ரன்கள் எடுத்து இந்த சரித்திர வெற்றிக்கு வித்திட்ட அதிரடி இளம் வீரர் சாருக்கான் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
2006, 2020 ஆகிய ஆண்டுகளில் தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்த கோப்பையை வென்ற தமிழ்நாடு முதல் முறையாக அவர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய் போன்ற முக்கிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் விஜய் சங்கர் தலைமையில் வெற்றி பெற்று சாதித்து தமிழ்நாட்டை பெருமை அடையச் செய்துள்ளது.